Categories
தொடர்கதை

அப்பா – தொடர்கதை- இறுதி பாகம்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அங்கே கவனிக்க இயலாத காரணத்தால் மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ல் ஏற்றி வைத்திருந்தார்கள். எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

ஒரு பையன் தெளிவாக இருப்பதாகவும், இன்னொருவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள்.

எவன் தெளிவாக இருக்கிறான்? எவன் ஆபத்தான சூழலில் இருக்கிறான் என்பதே தெரியவில்லை.
இன்னொரு விஷயம், அந்த இன்னொரு பையன் யார் என்பதே எனக்குத்தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டல்லவா இருந்தான்?

திடீரென ஆம்புலன்ஸ் உள்ளிருந்து கதவு தட்டும் சத்தம். கதவை திறந்தால் இவன் உட்கார்ந்து இருந்தான். இன்னொருவன் படுத்திருந்தான்.
ஆம்புலன்ஸ் வெளியில் இருந்த என்னைக் கண்டு கத்த ஆரம்பித்து விட்டான்.

“அப்பா அவன் இறந்துட்டாம்பா” என்று.
நர்ஸ் வந்து செக் பண்ணி ஆம் என்று உறுதி செய்தார்கள்.

அங்கிருந்த நர்ஸ்களையும், மருத்துவர்களையும் திட்டி தீர்த்தான். நீங்கள் தான் ஆக்ஸிஜன் சிலிண்டரை தட்டி விட்டு இவனைக்கொன்று விட்டீர்கள் என்று.
அவர்களோ அதை மறுத்து என்னிடம் பையனை அழைத்துக்கொண்டு செல்லச் சொன்னார்கள்.
அதெப்படி இன்னொருவன் இறந்து கிடக்கிறான். அவன் பெற்றோர்கள் வராமல் நாங்கள் எப்படி கிளம்ப?

இன்னொருவன் மதுரைக்காரனாம். அவன் இவனுக்கு ப்ரெண்ட் என்பதே எனக்கு இன்று தான் தெரியும். இவன் அண்ணன் ப்ரெண்ட் மூலமாக பழக்கமாம்.

ஆஸ்பத்திரியில் மாறி மாறி வற்புறுத்தவே நாங்கள் கிளம்ப வேண்டிய கட்டாயம். அங்கிருந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவனை அனுமதித்தோம்.

தலை கை கால்களில் நல்ல அடி.

ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க நேரலாம்.
ஒரு வாரம் ஆனது. உடல் சரியானால் கூட இடது கை சரியாகவில்லை. ஷாக் வைத்து தான் சரி செய்ய வேண்டிய கட்டாயம்.

பதினோரு நாள் மருத்துவமனையில் கிடந்தோம். அதன்பின்னர் வீட்டிற்கு போக சொல்லி விட்டார்கள்.

கையை மட்டும் வந்து வந்து பிஸியோதெரபி செய்து சரிசெய்ய சொன்னார்கள்.

சிறிது நாட்கள் கழிந்தது.

வீட்டிலிருக்க போர் அடிக்கிறது. வேலைக்கு போகிறேன் என்றான். சென்னையில் உள்ள அவனது அக்கா வீட்டில் தங்கி வேலை தேடுமாறு சொல்லி அனுப்பினேன். வேலைக்கு சென்றான்.

கட்டுமான துறை. பத்தாயிரம் சம்பளம்.

அப்படி இப்படி நாட்கள் ஓடியது.

ஒரு மாதம் கழித்து இன்னொரு கம்பெனி மாறினான்
ராணிப்பேட்டை எனும் ஊருக்கு மாறுதல்.

அங்கே ஒரு வருட காலம் ஓடியது.

பிறகு மீண்டும் ஏதோ பிரச்சினை என்று ஊரில் இரண்டு மாத காலம் வந்து தங்கியிருந்தான். மீண்டும் ஒரு கம்பெனி, காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்.

அந்த சூழலில் ஏதோ தேர்வில் வெற்றி பெற்றிருந்தான்.
இரண்டாவது ரவுண்ட் நேர்காணலிலும் வெற்றி அடைந்தான். இந்துஸ்தான் லாட்டக்ஸ் கம்பெனி.
சரி செட்டில் ஆகி விடுவான் என்று நினைத்தேன்.
ஏனோ அதுவும் கிடைக்கவில்லை.

பிறகு மேல்படிப்பு படிக்க போகிறேன் என்றான்.
அட என்னப்பா. சரி இதையாவது ஒழுங்கா படி என்று அனுமதித்தேன். காலம் கடந்து விட்டதால் தனியார் பல்கழைக்கழகத்தில் தான் படிக்க முடியும் என்று சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் இணைந்தான்.

இரண்டு வருடங்கள் ஒழுங்காக படித்து முதல் வகுப்பு தனிச்சிறப்புடன் தேர்ச்சி பெற்றான். தேர்ச்சி பெற்ற கையோடு, தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்தது.

சரி இந்த வேலையிலாவது ஒழுங்காக இரு என்று அறிவுரை கூறினேன்.

சில காலம் கடந்தது. அந்த வேலையில் ஒழுங்காகத்தான் இருக்கிறான். வேலைக்கு சேருவதற்கு முன்னரே புல்லட் வண்டி, தண்டர்பேட் மாடல் புக் செய்தாச்சு.

ஆறு மாதம் கழித்தே வந்தது. மதுரையில் அவன் உறவினருடன் சென்று வண்டியை ஓட்டி வந்தான்.

எனக்கு அவனது சந்தோஷமே முக்கியம்.
இந்த வண்டி விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை.
அவனுக்காக தானே!

ஒரு வழியாக ஒரு வேலையில் ஒழுங்காக இருக்கிறான். மாதம் 25000 சம்பளம்.
சம்பளத்தை பற்றி எனக்கு கவலையில்லை.
அவன் எனக்கு எதுவும் தர வேண்டாம். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொண்டால் போதும்.

என் அப்பா படுத்த படுக்கையாக கிடந்தார். அவர் என்னிடம் அந்த பரம்பரை வீட்டை வாங்கி விடு என்று வற்புறுத்தினார்.

நான் ரிட்டையர்டு ஆகி இருந்தேன்,
இவன் M.E படிக்கும் போதே!
அந்த பணத்தில் அந்த வீட்டை வாங்க சொன்னார். அது என் சித்தப்பா வகை வீடு.

அந்த வீடு வேண்டாம் என்று பலரும் வற்புறுத்தினார்கள். ஏனென்றால் அங்கு ஏதோ கெட்ட சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. நான் ஏற்கனவே சொன்னது போல மூடநம்பிக்கைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

உன் அப்பாவுடைய ஆசை, நிறைவேற்றப்பட வேண்டும். அதில்லாமல் காந்திமதிக்கு ஒரு மாப்பிள்ளை, வீடு சிறியதாக இருந்த காரணத்தால் கிடைக்காமல் போனது போல, இவனுக்கு பெண் கிடைக்காமல் போய் விடக்கூடாது.

அதில்லாமல் பெண் கொடுப்பவர்கள், மாப்பிள்ளை வீட்டின் அளவை கண்டிப்பாக பார்ப்பார்கள்.
அந்த பூர்விக வீடு பெரிய அளவிலானது.

மகனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அந்த வீட்டை வாங்க முடிவு செய்தேன். மகனும் மூடநம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவன் தான்.

அந்த வீட்டை வாங்கியாச்சு. பழைய வீடு என்பதால் நிறைய வேலைகள் இருந்தது. மீண்டும் ஒரு புது வீடு கட்டுவதைப்போல வேலைகள் இழுத்தது.
டைல்ஸ் போட்டு , பெயிண்ட் அடித்து, வீக் ஆன போர்ஷன்களை தட்டி விட்டு அதற்கு பதிலாக தகர ஷீட்டுகள் மாற்றி, அப்பப்பா வீட்டு வேலை என்றால் சும்மாவா?

இவனுக்கென ஒரு வீடு தயார். ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டால் என் கடமை நிறைவடையும்.

மருமகனின் திருமணம் நெருக்கத்தில் இருந்த  காரணத்தால் வீட்டு கிரஹப்பிரவேசத்தை ஒரு மாதம் தள்ளி வைத்திருந்தோம். மருமகனின் திருமணத்திற்கு ஒரு  வாரத்திற்கு முன்பு, ஒரு நாள் இரவு நான் வெளியே சென்று வந்த போது எதிர்பாராமல் கீழே தடுமாறி விழுந்தேன். மறுநாள் உடம்பில் ஏதோ மாறுதல். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யும் அளவிற்கு பபி, எகிறி இருந்தது.

அங்கே சென்று ஈசிஜி, எக்கோ பார்த்தால் எல்லாம் நார்மல் தான். இருந்தாலும் முந்தைய தினம் கீழே விழுந்த காரணத்தாலும், திடீர் தலை சுற்றல் வந்த காரணம் தெரியாத காரணத்தாலும் என்னை ஒரு நாள் மட்டும் தங்கி சில டெஸ்ட் எடுக்க சொன்னார்கள்.

மகனிடம் போன் செய்து விஷயத்தை சொன்னேன்.
பதறித்துடித்தான்.
“அடேய் ஒண்ணும் இல்லடா!
தலை சுற்றல் தான்.
இரண்டாவது முறை வந்த மாதிரி கூட இல்லடா. இது முதல் தடவை வந்த மாதிரி தான்.
நாளைக்கு காலையில வீட்டுக்கு போயிருவேன்.
நீ அடுத்த வாரம் கல்யாணத்துக்கு வரும்போது வா போதும்“ என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன்.

மறுநாள் காலையில் வரும்படி என் அண்ணனிடம் சொல்லியிருந்தேன். உறவுக்கார பையன் அந்த மருத்துவமனையில்தான் வேலை செய்கிறான். அவனிடமும் ஆறுதலாக பேசிவிட்டு வீட்டுக்கு போ ,நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைத்தேன்!

இரவு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை.
தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் என் மனைவி வெளியே சென்று டீ வாங்கி வந்து என்னை எழுப்பினாள்.

என்னால் எழுந்து கொள்ள முடியவில்லை.
என்னவோ தெரியவில்லை. ஊசி போட்டதால் இப்படி உறக்கமா? சற்று நேரம் எழுப்பிய மனைவி, பயந்து போய் மருத்துவரை அழைத்து வந்தாள். மருத்துவரும் எழுப்பி பார்த்தார் நான் எழவில்லை.

என் அண்ணன், மைத்துனர் எல்லாம் மருத்துவமனைக்கு விடியற்காலமே வந்துவிட்டார்கள்.
டாக்டர் அவரிடம் ஏதோ சொல்ல என் அண்ணன் கண்ணீர் விட்டு அழுதான்.
“ஏன் சங்கரா உன்ன இப்படி பாக்கதான் என்னிய காலையிலேயே வரச்சொன்னியா?”
என் மனைவி பேயறைந்தவள் போல நிற்கிறாள்.

என்னை வீட்டுக்கு கொண்டு சென்று குளிப்பாட்டி ஐஸ் பெட்டியில் கிடத்தி விட்டார்கள். பலரும் என்னை வந்து கண்டு செல்கிறார்கள். எனக்கு மாலை மரியாதை எல்லாம்  செய்கிறார்கள்.
உறவினர்கள் பலர் அழுது புலம்புகிறார்கள்.
என் தங்கைகள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.

அன்று மாலை சென்னையிலிருந்த அவனும், அவன் அக்காளும், மச்சானும் வந்தார்கள்.

அவன் அக்காள் என் காலடியில் உட்கார்ந்து அழத்தொடங்கினாள். அவன் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்து விட்டு வெடித்து அழத்துவங்கினான்.

அப்பா அப்பா என்று கதறுகிறான். என்னை வைத்திருந்த ஐஸ் பெட்டியை எட்டி உதைத்து கதறி அழுகிறான். சிறு வயதில் அவன் என்னை கடைக்கு அழைத்துச்செல்வதற்காக எழுப்புவான்.

நான் வேண்டுமென்றே தூங்குவது போல நடிப்பேன்.
கொஞ்சம் நேரத்தில் பொறுமை இழப்பவன் என் வயிற்றில் குத்துவான். நானும் எழுந்து சிரித்து விடுவேன். இப்போதும் அதைப்போல எழ வேண்டும் என்று முயற்சி செய்கிறேன்.

காலையிலிருந்து பலரும் அழுத போது எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. நம் விதி முடிந்தது என்று இயல்பாக இருந்தேன். ஆனால் என் மகளும், மகனும் அழுவதை என்னால் பார்க்க முடியவி்ல்லை.
இறைவா அடுத்த பிறவியில் என் ஆயுளை குறைத்துக்கொள், இன்று நான் எழுந்து விட வேண்டும்.

என் பிள்ளைகள் அழுவதை காண முடியவில்லை என்று உருகுகிறேன். குறைந்தபட்சம் நான் இறக்கும் முன்பு என் பிள்ளைகளை பார்த்து பேச வாய்ப்பு கூட அளிக்காமல் என்னை இப்படி கொன்று விட்டாயே?

மகனே அழாதே!
அப்பா இங்கு இருக்கிறேன் என்று நான் கத்துவது அவன் காதுகளில் விழவில்லை.

அவன் அழுது புரண்டு தேம்புவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
என் மகன் அழுதால் அவனுக்கு தலை வலிக்கும்.
காந்திமதி அழுதால் அவளுக்கு காய்ச்சலே வந்துவிடும்.

அழாதீர்கள் என் தங்கங்களே!

அப்பா இருக்கிறேன், இதோ இருக்கிறேன்.
நான் பேசுவது என் பிள்ளைகளுக்கு ஏன் கேட்கவில்லை?

எனக்கு உடல் வேண்டாம், உயிர் வேண்டாம், என் பிள்ளைகளிடம் நான் பேச வேண்டும்.
அவர்களுக்கு நான் ஆறுதல் கூற வேண்டும்

ஆண்டவா! நீ இருப்பாய் எனில் இந்த வாய்ப்பை எனக்கு தருவாயா?

என் மகனுக்கு, பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்துவிட்டால் தானே என் கடன் தீரும்!

என்னை இப்படி கடமை முடிக்காத அப்பனாக கொன்று விட்டாயே?

ஐயோ!
குறைந்தபட்சம் என் பிள்ளைகளின் அழுகையைக்கூட இப்போது என்னால் தடுக்க முடியவில்லையே?

என் செல்வங்களே!
நான் பேசுவது உங்களுக்கு கேட்கவில்லையா?
நான் சென்று கடவுளிடம் முறையிடுகிறேன்.
உங்களுக்கு என்னால் , உடல் இன்றி , உயிர் இன்றி என்ன செய்ய இயலுமோ, அதை இனி செய்ய வேண்டி வரம் கேட்பேன்.

இறந்தாலும் நான் உங்கள் அப்பா தான்.
நான் எங்கும் போக மாட்டேன்.உங்களுடனே உங்கள் வாழ்க்கை முழுக்க துணையாக பயணிப்பேன்.

இந்த பிறவியில் உங்கள் அப்பாவாக முழு கடமையையும் செய்து முடிப்பேன்.

அப்பா இல்லை என்று கலங்காதீர்கள்!

அப்பா இருக்கிறேன் .
உங்கள் உயிரிலேயே கலந்து இருக்கிறேன் .
கலங்காதீர்கள்!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.