உன் உயிர்த்துளியில் ஒரு துளி தானே நான்?
எனக்கு உயிர் கொடுத்த என் தந்தையே!
உனக்காக நான் எழுதும் கதை.
அப்பா!
அப்பாவாகிய நான் என் அனுபவத்தை பகிரும் கதை!
அப்பாவாகும் முன்பு வரை, என்னைப் பொறுத்த வரை அப்பா என்பது வெறும் வார்த்தையாகத்தான் உணரப்பட்டது.
ஆனால் நான் அப்பா ஆன பின்பு, அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, அப்பா என்பது ஒரு தலைமுறைக்கான அடையாளம்,
அப்பா என்பது அன்பின் வெளிப்பாடு,
அப்பா என்பது தூய்மை,
அப்பாவிலும் உள்ளது தாய்மை என்று உணரப்பட்டது.
நான் எப்படியான அப்பா?
பார்க்கலாமே!
என் பெயர் சங்கரன். என் தாத்தாவின் பெயர்.
எனக்கு இந்த பெயரை வைத்தே ஆக வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.
சங்கரன் என்பதை சங்கர் என்று வைத்திருந்தால் எவ்வளவு ஸ்டைலாக இருந்திருக்கும்?
ஜெய்சங்கர் துவங்கி இளம் நடிகர் கமலஹாசன் வரை இந்த பெயரை ஏதாவது படத்தில் சுமந்து வருகிறார்களே?
17/05/1955 என்னுடைய பிறந்த தேதி.
பள்ளி சான்றிதழை தவிர வேறு எதுவும், யாரும் எனக்கு இதை ஞாபகப்படுத்த மாட்டார்கள்!
பிறந்த தேதியை ஞாபகம் வைக்கும் வழக்கம் இங்கே யாருக்கு இருக்கிறது? மேலை நாடுகளிலும், சினிமாவிலும் தான் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம்.
அப்போது கூட ஏதோ ஒரு ரஜினி படத்தில், பிறந்தநாள் அன்று ரஜினிக்கு பழைய நினைவுகள் வரும். அதை பார்க்கும் போதெல்லாம் எங்களுக்கும் பிறந்தநாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்ற ஆசை வரும்.
ஆனால் முடியாது.
என் அப்பாவும் அம்மாவும், பிறந்தநாளை மறப்பார்களே ஒழிந்து பிறந்த மாதத்தை மறக்க வாய்ப்பு இல்லை.
ஏனென்றால் என்னை சேர்த்து என் வீட்டில் ஒன்பது பிள்ளைகள். இன்னும் 3 பிறந்திருந்தால் 12 மாதம், போல, மாதத்திற்கு ஒன்றாக 12 பிள்ளைகளாகிப்போயிருக்கும்.
மூத்த தாரமான என் அம்மாவுக்கு ஐந்து, இளைய தாரமான என் சின்னமாவுக்கு நான்கு!
ஆமாம், என் அப்பாவுக்கு இரண்டு தாரம், ஒன்பது பிள்ளைகள்.
அதனால் அவருக்கு அன்பை பகிர்ந்து அளிப்பதில் பெரும் சிக்கல்தான்.
மூத்தவன் ராமநாதன், இரண்டாவது அக்கா லட்சுமி, மூன்றாவது நான் சங்கர், சாரி சங்கரன், நான்காவது தங்கை ராஜேஸ்வரி, ஐந்து தங்கை ரமணி!
சின்னம்மாவின் பிள்ளைகளில் மூத்தவன் தம்பி நேரு, இரண்டாவது தங்கை பூபதி, மூன்றாவது தம்பி கணேசன், நான்காவது தங்கை கோமதி.
எனக்கு நேரு மாதிரி ஏதாவது தலைவர் பெயர் வைத்தரிக்கக்கூடாதா? இல்லையென்றால் சங்கர் என்று வைத்திருக்கக்கூடாதா?
ஏன் இந்த இரட்டை சுழி ன் வந்து சேர்ந்து என் ஆசையை கெடுக்கிறது?
இந்த இரட்டை சுழி ன் மேல் எனக்கு கோபம்.
இரட்டை சுழி ன் மேலும் கோபம், இரட்டை சுழி என்ற பட்ட பெயர் மீதும் கோபம்… ஆமாம் என் சேட்டை காரணமாக எனக்கு அந்த பட்ட பெயர்.
வீட்டில் மூன்றாவது பிள்ளை என்பதால், தம்பி தங்கைகளை வழிநடத்த சிறிது பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
ஆனாலும் சேட்டைகளுக்கும், விளையாட்டுக்கும் பஞ்சம் ஒன்றும் இல்லை.
அப்பா ஒன்பது பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்பதால், வெகு நேரங்களில் அன்பை விட கண்டிப்பையே அதிகம் தருவார்.
அப்பாவின் கண்டிப்பும் அன்பு தானே?
அம்மாக்கள் இருவரும், பிள்ளைகளுள் பாகுபாடு இன்றி அன்பை ஊட்டி வளர்த்தனர்.
பள்ளி படிப்பில் பெரிய ஈடுபாடு காட்டப்படாத அந்த காலகட்டத்தில் கூட, ஒன்பது பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கத் தவறவில்லை எங்கள் தந்தை.
இந்த காலம் போல அல்ல, அப்போதெல்லாம்.
இட்லி, தோசை போன்ற வஸ்துகள் அரிது.
எங்கள் வீட்டில் இரண்டு அம்மாக்கள் என்பதால், எல்லோரையும் விட இன்னொரு முறை அதிகமாக இட்லி தோசை சாப்பிட வாய்ப்பு உண்டு.
மற்றவர்கள் மாதம் ஒருமுறை என்றால், எங்கள் வீட்டில் மாதம் இருமுறை.
உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், இட்லிக்கும் தோசைக்கும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று, ஆனால் உண்மை அதுதான்.
இன்னொரு கொடுமையும் சொல்கிறேன் கேளுங்கள், 1960 களில் இந்தியா-சீன போர் நடந்த போது, இங்கே பஞ்சம் பட்னி தான்.
நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் சோளமாவு தான் ஒரே உணவு. சோள மாவில் செய்யப்பட்ட உப்புமாவை பல நாட்கள் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறோம் என்பது உண்மை.
இப்போது இருப்பது போல, ஆடம்பர வாழ்க்கையை, நினைத்ததை அனுபவிக்கும் வாய்ப்போ அப்போதெல்லாம் கிடையாது.
அன்பு ஒன்று மட்டும் குறையாமல் கிடைக்கும். வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரின் அரவணைப்பில் வளரும். எல்லாக் குழந்தைகளும் கண்டித்து வளர்க்கப்பட்டார்கள், இதனால் தான் எங்கள் சந்ததி ஒழுக்கமாக வளர்ந்தது.
பள்ளிக்கூட வகுப்புகள் கசப்பு தான் என்றாலும், ஊரில் பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பை எம் தந்தை எமக்கு அளித்திருக்கிறார் என்று பெருமை கொண்டு பள்ளிகூடத்திற்கு தவறாமல் செல்வோம்.
இப்போது போல, வண்டிகளோ, வாகனங்களோ அப்போது கிடையாது. சைக்கிள் இருக்கும் வீடே கிட்டதட்ட வசதியான வீடாகத்தான் பார்க்க முடியும்.
ஓரு ஊருக்கு ஒருவரோ, இருவரோ, புல்லட் அல்லது ராஜ்தூத் வண்டி வைத்திருப்பார்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகள் 100 சதவீதம் நடராஜா சர்வீஸ் தான். அப்படி போகும் வரும் வழியில் எங்களுக்காக செலவுக்கு, ஒரு அனா, முதல் அவரவர் வீட்டு வசதிக்கு ஏற்ப அளிக்கப்படும்.
எங்கள் வீட்டில் தலைக்கு ஒரு அனா என்பது ஞாபகம். அந்த ஒரு அனாவை பிரித்து தேவையான நேரத்தில் நான் கேட்டதை வாங்கித்தரவில்லை என்பதற்காக என் அக்காவின் மண்டையை கையிலிருந்த சிலேட்டால் பிளந்தது இன்னும் மறக்க முடியாது.
ஆம், அவ்வளவு கோபக்காரன் தான் நான்.
ஆனால், வயது முதிர்ச்சி பக்குவத்தையும் சேர்த்து வளர்த்தது.
வீட்டிலிருந்த போனியை ரேடியோ குழாய்கள் போல நினைத்து விளையாடுவது முதல், இரவில் கதை கேட்பது வரை, எங்களுக்கான குழந்தை பருவ வாழ்க்கை என்பது அமிர்தம் தான்.
ராமாயணம் துவங்கி, சத்தியவான் சாவித்திரி வரை பல கதைகளை சொல்லி தூங்க வைத்தார்கள் எம் பெற்றோர்.
கல்லூரி விடுதி எல்லாம் தேவைப்படாது, வீடே கிட்டதட்ட விடுதி போலத்தானே?
பணத்தின் அருமை, வறுமை, எல்லாம் சொல்லித்தான் வளர்க்கப்பட்டது எம் சந்ததி.
எட்டாம் வகுப்பு போகும் போதே மாலை நேரங்களில் வேலைக்கு பகுதியாக செல்வதென்ற முடிவு செய்தேன்.
வெறும் ஒரு ரூபாய்க்காக தான். அந்த ஒரு ரூபாயில் சேவு, சீவல் போன்ற தினபண்டம் வாங்கித்திங்கலாம் என்ற ஆவல்தான்.
தறி செட்டுகளில் வேலைக்கு செல்வேன்.
பள்ளிக்கு வராமல் முழு நேரமாக வேலை செய்யும் நண்பர்கள் இன்னும் அதிகம் சம்பாதிப்பதை பார்க்கும் போது சற்று ஆசையாகத்தான் இருக்கும், ஆனாலும் அப்பா நமக்கு அளித்த பரிசு பள்ளிக்கூடம் என்பதை நினைத்தை மனதை கல்லாக்கிக் கொள்வேன்.
என் வயது நண்பர்கள், நான் பள்ளிக்கூடம் செல்வதால் என்னை ஒதுக்கி வைப்பார்கள். சில நேரங்களில் என்னை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டார்கள். எத்தனை கேலி கிண்டல் வத்தாலும் சரி, நண்பர்கள் வட்டம் அழிந்தாலும் சரி, பள்ளிக்கூடம் போவதை தவிர்ப்பதில்லை என்று உறுதி கொண்டேன்.
ஒரு வழியாக பத்தாம் வகுப்பை முடித்தேன். என் அண்ணன் பியூசி படித்ததால் என்னால் அதை படிக்க முடியவில்லை. வீட்டின் வசதி வாய்ப்புகள் இடம் தரவில்லை.
பியூசி முடித்து, மின்சார வாரியத்தில் ஏதோ வேலை கிடைக்க, அண்ணன் கிளம்பிவிட்டான்.
அண்ணனோடு அவனுக்கு சமைத்து ஆக்கி போட, அம்மாவும் கிளம்பினாள்.
நானோ பெரிய பத்தாம் வகுப்போடு பள்ளி வாழ்க்கையை முடித்துக்கொண்டேன்.
ஆம் இப்போது இருக்கும் பத்தாம் வகுப்பு சின்ன பத்து என்றும், பதினோறாம் வகுப்பு பெரிய பத்து என்றும் அழைக்கப்படும்.
பியூசி என்பது பனிரெண்டாம் வகுப்பு போலத்தான்.
ஆனால் பியூசி தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல.
பியூசி தேறினால் தான் கல்லூரிகளில் நுழையலாம்.
அப்போதெல்லாம் கல்லூரியில் நுழைவதே மிகப்பெரிய கனவு. வசதியும் பலரது வாய்ப்பை தட்டிப்பறிக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை.
அண்ணன் அரசாங்க வேலை கிடைத்துப்போக, நானோ இங்கே மீண்டும் தறிசெட்டுகளில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போதெல்லாம் அரசாங்க வேலை என்பது பள்ளி படிப்பை முடித்தாலே எளிதாக கிடைக்கும்.
எனக்கு மட்டும் ஏனோ சிறிது கால சோதனை.
பள்ளிக்கூடம் போகாத என் நண்பர்கள் என்னை கேலி செய்து அவர்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வதற்காகவே சிறிது காலம் எனக்கு அந்த சோதனை போல.
தினசரி நாளிதழை தவறாமல் படித்து விடுவேன். ஏதாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்று.
நாளிதழ் படிப்பதும் இப்போது போல அவ்வளவு எளிதல்ல. சைக்கிள் போல வசதி படைத்த வீடுகளில் தான் நாளிதழ்கள் கிடைக்கும்.
என் சித்தப்பா வீட்டில் தினசரி நாளிதழை கேட்டு படிப்பேன். அப்படி ஓரு நாள் எனக்கான வழி பிறந்தது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு, அரசாங்க வேலை.
ஆனால் ஓசூரில் ஒருவருட பயிற்சியை கண்டிப்பாக முடித்தாக வேண்டும்.
ஆம், கால்நடை ஆய்வாளர் பணிக்கான பயிற்சி மற்றும் பயிற்சி முடித்த கையோடு வேலை.
இப்போது போல அப்போது கல்லூரி கட்டணம் எல்லாம் ஒரு தடை கிடையாது, ஏனென்றால் கல்வி அப்போதெல்லாம் கிட்டதட்ட இலவசம் தான்.
ஆனால் விடுதியில் தங்க, சாப்பிட மாதமாதம் கட்டணம், ஓசூர் செல்ல பேருந்து கட்டணம், மற்றும் துணிகளை எடுத்துச்செல்ல ஒரு பெட்டி. இதெல்லாம் தான் எனது பெரிய பிரச்சினை.
இதை கண்டிப்பாக அப்பா ஒப்புக்கொள்ள மாட்டார் என்ற பீதி.
வீட்டிலிருந்த ஒரு பெரிய பெட்டியை அண்ணன் எடுத்து சென்று விட்டானே?
ஓருவழியாக மாமாவிடம் சொல்லி, அப்பாவிடம் சம்மதம் வாங்கி ஓசூர் கிளம்புகிறான் சங்கரன்.
தம்பி தங்கைகளை விட்டு, பிறந்த ஊரை விட்டு, அப்பா அம்மாவை பிரிந்து, விளையாடிய நண்பர்களை பிரிந்து வெளியூர் செல்வது மிகப்பெரிய கொடுமை.
ஆனால் படித்த படிப்பிற்கான வாய்ப்பு அமையும் போது அதை இழப்பது முட்டாள்தனம்.
அப்பா மனதில் சங்கடங்களை பூட்டி வைத்துக்கொண்டு எனக்கு தைரியம் சொல்கிறார்.
முதன்முறையாக அப்பா என்னிடம் தனியாக நெடு நேரம் பேசுகிறார்.
கால்நடை ஆய்வாளர் என்றால் என்ன பணி என்பதை பற்றிய விளக்கத்தை கேட்டார்.
ஆடு மாடுகளுக்கு மருத்துவம் பார்க்கும் தொழில் என்றேன்.
டாக்டரா என்றார்!
டாக்டருக்கு கல்லூரி படிப்பு உள்ளது, இது கம்பவுண்டர் மாதிரி என்று என்னால் முடிந்த விளக்கத்தை அளித்தேன்.
“ஆடு மாடுக்குலாம் யாருப்பா டாக்டர் கூப்புட்டு மருத்துவம் பாக்க போறாங்க?“
“வேற ஏதாச்சும் நல்ல வேலை கிடைக்கும்லப்பா?“ என்று அப்பா கேட்க, ”இல்லப்பா இது அரசாங்க வேலை தான், குறிப்பிட்ட இடங்களில் தர்ம ஆஸ்பத்திரி போல ஆடு மாடுகளுக்கு தனியாக ஆஸ்பத்திரி திறப்பார்கள், அதில் எனக்கு வேலை.
மாசம் ஆனா சம்பளம் கொடுத்துருவாங்கப்பா, அதனால் பயப்பட வேண்டாம்“ என்றேன்.
“என்னவோப்பா, உங்க அண்ணன், கரண்ட்டுக்கு வேலைக்கு போயிட்டான், அவன நினைச்சே எனக்கு பயம். இப்ப நீ வேற ஆடு மாடுக்கு டாக்டருங்கிற.
உனக்கு சரியாப்பட்டா செய்யுப்பா“ என்று முடிவை என் கையில் கொடுத்தார்.
ஆம், மின்சாரம் என்றால் சற்று பயம்தான் அப்போதெல்லாம். அண்ணன் மின்சாரத்துறையில் வேலைக்கு போவதை நினைத்து படித்த நானே பயந்தேன், பின்னர் என் தந்தைக்கு இருந்திருக்காதா?
என் முடிவை நான் தைரியமாக எடுத்தேன்!
ஓசூர் கிளம்புகிறான் சங்கரன்!