பயணம் என்றாலே மகிழ்ச்சி தான், அதுவும் ரயில் பயணம் என்பது ஒரு தனி அனுபவம் தான்.
அப்படியான ரயில் பயணங்கள் நமக்கு சில நேரங்களில் கசப்பான அனுபவத்தையும் தரும்.
அதை நாம் முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம்.
அதைப்போலவே கடுப்பேற்றிய இன்னொரு பயணத்தைப் பற்றிய பதிவு தான் இது.
பணிநிமர்த்தமாக ஹைதராபாத் பயணம்.
தனக்குத் தேவை இருக்கும் வரைக்கும் தான் கடவுளுக்கும் இங்கே அர்ச்சனை என்ற ரீதியாக, எங்களை தங்கள் பணிக்கு அழைத்த தனியார் நிறுவனம், சென்னையிலிருந்து ஹைதராபாத் க்கு விமான வழிப்பயணமும், வேலை முடிந்து சென்னைக்குத் திரும்ப ரயில் பயணமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விமான வழிப்பயணத்தில் நாங்கள் கேட்காமலேயே முன்இருக்கை பயணம், திண்பண்டம் என தடபுடலான ஏற்பாடுகள்.
அதற்கு நேர்மாறாக அமைந்தது ரயில் பயணம்.
செகந்திராபாத் ல் கிளம்பி, ராமேஸ்வரம் வரை செல்லும் சிறப்பு ரயில். இரவு 9.10 மணிக்கு எடுக்க வேண்டிய ரயில் 3 மணி நேரத் தாமதம் என்று முன்பே, அதாவது அன்று மதியமே அறிவித்து விட்டார்கள்.
அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எங்களோடு தொடர்பு கொண்டிருந்த நபரிடம், இது மாதிரி ரயில் 3 மணி நேரம் தாமதம், நாங்கள் என்ன செய்வது என்று கேட்ட போது, எங்களுக்கும் தெரியல சார், 3.30 மணிக்கு கார் கிளம்பும்,, உங்களை, ரயில் நிலையத்தில் விடச் சொல்கிறோம், அங்கே எங்கையாவது பெட்டியை வைத்து விட்டுப் பொழுதைப் போக்க விடலாம் என்று கூறினார்கள்.
வெளியூரிலிருந்து அங்கு வேலைக்குச் சென்ற எங்களுக்கு, ஓய்வு அறை கூட இல்லை..முந்தைய இரவு தங்கியிருந்த அறையை காலையிலேயே காலி செய்யச் சொல்லிவிட்டார்கள்.
அந்த வெயிலில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலை செய்து விட்டு, காரில் ஏறி அமர்ந்தோம்.
சரி ஒரு இரண்டு மணி நேரத்தில் ரயில் நிலையம் சென்று விட்டால், அங்கே ரிட்டையரிங் ரூமில் நம் பணத்தில் தங்கி நிதானமாக குளித்துத் தூங்கி இரவு 12 மணிக்கு ரயில் ஏறலாம் என்று நினைக்க,நடந்தது வேறொன்று.
எங்களோடு அந்தக் கம்பெனி நிர்வாகியும் எங்களோடு காரில் வந்தார்.
கார் நேராக அவர் வீட்டுக்குச் சென்றது.
கிட்டத்தட்ட மணி 5. சரி இதற்குப் பிறகாவது நாம் ரயில் நிலையம் செல்லப்போகிறோம் என்றால் அதுவும் இல்லை.
ரயில் நிலையம் செல்லும் பாதையில்லாத வேறு பாதையிலிருந்த ஒரு பகுதிக்கு அவர் மீண்டும் செல்ல வேண்டும் என்று, அவரோடு சேர்த்து எங்களையும் அலைக்கழித்தார்கள்.
அவரை இறக்கிவிட்டு நாங்கள் ரயில் நிலையம் சென்றடைந்தபோது மணி 8.15 .
காலையிலிருந்து வேலை பார்த்தது போதாதென, அடுத்த 5 மணிநேரம் காரிலேயே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தோம்.
இதற்குப் பிறகு ஓய்வறை எல்லாம் எதற்கு பெட்டிகளை வைத்து விட்டு சாப்பிட்டு வந்தால் மணி 10.30 ஆகிவிடும், அதற்குப் பிறகு 1 மணி நேரம் தானே என்று முடிவு செய்து 10 ஆவது நடைமேடையிலிருந்து மாங்கு மாங்கென 1 ஆவது நடைமேடைக்கு வந்தால், பெட்டி வைப்பு அறை 10 ஆவது நடைமேடையில் மட்டுமே உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டோம்.
வெறி ஆனது உண்மைதான், ஆனாலும் வேறு வழியில்லை, மீண்டும் மாங்கு மாங்கென 10 ஆவது நடைமேடைக்கு நடையைக்கட்டி பெட்டிகளை வைத்து முடித்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேற மணி 9 ஆனது.
ஒரு இரண்டு மணி நேரம் , உலாத்தலும் , சாப்பாடுமாக பொழுதைக் கழித்து விட்டு 11 மணிக்கு ரயில் நிலையம் வந்து பெட்டியெல்லாம் எடுத்துத் தயாரானோம்.
11.45 மணி வாக்கில் ரயில் இன்னொரு மணி நேரம் தாமதம் என்றார்கள்.
உச்சக்கட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு , ஒரு மணி வரை பொழுதைக் கழித்த பிறகு, ரயில் 8 ஆவது நடைமேடை என்ற தகவல் வந்தது.அடிபிடியாகப்போன மக்கள் ஏமாந்து நின்றார்கள்.
1 மணிக்கும் ரயில் வரவில்லை.
தகவல் தான் வந்தது.ரயில் மீண்டும் தாமதம் 1.30 மணிக்கு என்று.
1.20 வரை ரயில் வரவில்லை..ஆங்காங்கே அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த இந்த ரயிலுக்கான பயணிகள் ஒட்டுமொத்தமாக 8 ஆவது நடைமேடைக்கு வந்துவிட்டனர்.
ஒட்டுமொத்த நிலையத்திலும் கட்டுமான வேலை நிகழ்வதால் 1 மற்றும் 10 ஐ தவிர வேறு எந்த நடைமேடையிலும் அமர இடமில்லை.
ரயிலுக்காக வந்தவர்கள் பெட்டி , படுக்கை பிள்ளை குட்டிகளோடு கால்கடுக்க நின்றனர்.
1.30 மணிக்கு மீண்டும் தகவல்.
ரயில் தாமதம் 2 மணிக்கு என்று.
இப்படியே தாமதித்து ரயில் 2.45 மணிக்கு தான் கிளம்பியது.
அனைவரும் ஏறிய உடனே தூங்கியது தான்.மறுநாள் காலையில் எல்லாரும் தோராயமாக விழித்த நேரம் 8.30 மணி.
அதன் பிறகு உள்ளே ஒரு தேநீர் வியாபாரம் இல்லை, ஒரு தண்ணீர் வியாபரமும் இல்லை.
ரயில் அப்போது கிட்டத்தட்ட 6 மணி நேர தாமதத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
காலை 9.45 மணியளவில், குண்ட்டூர் நிலையத்தில் ரயில் நின்ற போது ஒட்டுமொத்த கூட்டமும் இறங்கி ஓடியது, உணவுக்காக.
நிறைய பேருக்கு ஏமாற்றம்.
காலை டிபன் காலி, தயிர் சாதம் , லெமன் சாதம் என்று நிலையத்தில் என்னென்ன சாப்பாடு வகை விற்றதோ அனைத்தும் காலி.
எங்களுக்கு இறுதியாக ஒரு வியாபாரியிடமிருந்த இரண்டு தயிர் சாதம் கிடைத்தது.
எங்கள் பெட்டியில் அருகில் பயணித்த குடும்பத்தில் இரு பெண்கள், மூன்று குழந்தைகள் ஒரு பெரியவர்.
அவரால் ரயில் போய்விடுமோ என்ற பயத்தில் வெகுதூரம் போகவும் இயலவில்லை.
இறுதியில் எந்த உணவும் கிடைக்காமல் பாவமாக நின்றார்.
எங்களிடமிருந்த இரண்டு தயிர் சாதத்தில் ஒன்றை அவர்களிடம் கொடுத்து குழந்தைகளுக்காவது பசியாற்றுங்கள் என்று சொன்னோம்.
இரண்டையும் கொடுக்க எண்ணம் தான், ஆனால் அவர்கள் ஒன்றை வாங்கிக்கொள்ளவே தயங்கினார்கள், பிறகு வற்புறுத்திக் கொடுத்தோம்.
இரவு 9 மணிக்குக் கிளம்பி மறுநாள் இரவு 12 மணி வரை பயணிக்கும் ரயிலில் ஒரு பான்ட்ரி கார் கூடவா இருந்திருக்கக் கூடாது?
இப்படி பயணிகள் பட்டினியில் கிடந்திருக்க வேண்டுமா?
யாராவது இங்கே கேள்விக் கனைகளைத் தொடுக்கலாம். ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாமே பாஸ் என்று.
மதிய உணவைப் பெரும்பாலான ஆட்கள் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்தார்கள்.
காலை ஆன்லைனில் ஆர்டர்செய்ய முடியாமல் போனதற்குக் காரணம், காலை அனைவரும் தன்னை மறந்து தூங்கியது.
இதையும் தாண்டி கழிவறை அசுத்தம் போன்ற சில குறைகளும் இருந்தது.
எப்போதும் சுகம் தரும் ரயில் பயணம்.
அன்று ஏனோ கோபத்தை அளித்தது.