Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பொறுப்பில்லா சில ஊடகங்கள்.

ஊடகங்கள் என்பது நீதித்துறை போல நாட்டின் மிகப்பெரிய தூண்.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியும், வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மையும் ஊடகத்தைச் சார்ந்தது தான். அதுவும் இன்றைய நிலையில், ஆனையைப் பூனையாகவும், பூனையை ஆனையாகவும் மாற்றும் சக்தி ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஒரு கட்சி, ஒரு சினிமா, ஒரு தனிப்பட்ட நபர் என்று அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் தாக்கத்தை உருவாக்கும் திறனுடையது ஊடகம்.

அப்படிப்பட்ட ஊடகங்களில் வேலை செய்யும் ஆட்கள் எப்படியானவர்களாக இருக்க வேண்டும்?

இருசாராரையும் பாராமல், நன்கு ஆராயந்து நீதி வழங்கும் நீதிபதிகள் போல இருக்க வேண்டுமல்லவா?

இது தவறு என்றால் தவறு, இது சரி என்றால் சரி என்பதை தைரியமாக எடுத்துச் சொல்லும் பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

நமது மக்களுக்கு விளங்க வேண்டும் என்றால், முதல்வன் படத்தில் வரும் அர்ஜூன் போல, கோ படத்தில் வரும் ஜீவா போல, கவண் படத்தில் வரும் விஜய் சேதுபதி போல, நியாயத்திற்காக வாதிடுபவர்களாக இருக்க வேண்டும்.

இதில் நிகழ்கால ஊடகவியலாளர்களை சிறந்த உதாரணமாகக் காட்ட, இங்கே யாரும் 100 சதவீதம் நியாயமானவர்களாக நம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஆட்களாகத் தான் இருக்கிறார்கள்.

100 சதவீத நியாயம் வேண்டாம், ஆனால் குறைந்தபட்ச பொறுப்பும் அறிவும் வேண்டாமா?

நேற்றைய முன் தினம் பீகாரில் நிகழ்ந்த சம்பவம், ஊடகத்துறைக்கு வெட்கக் கேடு.

ஒரு ஊடக நண்பர் ஒரு சிறுவனிடம் கேட்கிறார், பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும் தானே? என்று.

அதற்கு அந்தச் சிறுவன், இல்லை இல்லை.
இந்தியா போலவே பாகிஸ்தான் நாட்டிலும் பொதுமக்கள் இருக்கிறார்களே? அந்த நாட்டை ஏன் அழிக்க வேண்டும்?

இங்குள்ள மக்களுக்கு வாழ்வதற்கு என்ன உரிமை உள்ளதோ அது போலவே அங்குள்ள மக்களுக்கும் உரிமை உள்ளது. அதனால் நாட்டை அழிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்றான்.

உடனே கொந்தளித்த ஊடகவியலாளர் அதெப்படி நீ சொல்லல்லாம்? அந்த நாடு அழிக்கப்பட வேண்டும் தானே என்றார்.

இல்லை இல்லை, தீவிரவாதிகள் தான் அழிக்கப்பட வேண்டும் நாடு அல்ல என்று மீண்டும் தனது தெளிவான பதிலைத் தருகிறான்.

இங்கே எப்படி இந்து முஸ்லீம் எல்லாம் இருக்கிறோமோ, அதேபோல அங்கேயும் முஸ்லீம், இந்துக்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆகையினால் அந்த நாடு அழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூடாது என்றான்.

கோபமடைந்த ஊடக நண்பர் இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்றார்.

அதற்கு அவன் யாரும் சொல்லித் தரவில்லை.
எனக்கு மூளை இருக்கிறது என்று நெத்தியடி பதில் தந்தான்.

ஒரு ஊடகத்துறையில் பணிபுரியும் நண்பர், ஒரு சிறுவனிடம், இன்னொரு நாடு அழிக்கப்பட வேண்டும் என்ற வனமம் கொண்ட கேள்வியைக் கேட்கலாமா?

உடைத்துறை, அமைதியை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதை விடுத்து, தனது சுயலாபத்திற்காகவும், விளம்பர நோக்கிற்காகவும், இன்னொரு நாடு அழிக்கப்பட வேண்டுமா என்று பொதுவெளியில் கேவலமாக கேள்வி எழுப்பலாமா?

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைகளில், நமது மக்களின் நோக்கம் என்ன?

சண்டை வேண்டாம் என்பது தானே?

அதேபோல இந்த விஷயத்திலும் அந்த பயங்கரவாதிகளைக் கண்டறிந்து அழித்து விட்டு, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டத்தானே வழிமுறை செய்ய வேண்டும்?

எதற்காக இன்னொரு நாட்டின் மீது வனமம்?

பொறுப்புடன் செயல்படுங்கள் ஊடகங்களே!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.