Categories
தற்கால நிகழ்வுகள்

ஆண்களும் பலனடையும் மகளிர் உரிமைத் தொகை

பொதுவாக நலத்திட்டங்கள் என்பது அடித்தட்டு மக்கள் மேம்படுவதற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சமுதாய முன்னெடுப்பு நடவடிக்கைகள்.

தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கட்டணச்சலுகை இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அடிப்படையாகத் துவங்கிய இந்த நலத்திட்ட உதவிகள், பஸ் பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து , இன்று மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு மாதமாதம் பணம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இப்படி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையானது அவர்கள் படித்த பள்ளி, அதாவது அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றிருந்தால் மட்டுமே அந்த உதவித் தொகை கிடைக்கும் என்பதால் அதில் முறைகேடுகள் ஏதுமில்லை.ஆனால் மகளிர் உரிமைத்தொகையில் முறைகேடுகளே இல்லை என்ற நிலையை எட்டுவது மிகச் சிரமமான காரியமாகியிருக்கிறது.

இந்தத் திட்டம் ஆரம்பித்த போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மகளிர் துவங்கி இன்றளவிலும் இதில் பதிவு செய்யாத பலரும் , இது நியாயமான முறையில் செயல்படுத்தப்படுவதாக ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம், ஆரம்பத்தில் இது கட்சி சார்பான ஆட்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது என்ற புகார்களில் துவங்கி, இன்று இது முறைபடுத்தப்படாமல் நியாயமாகக் கிடைக்க வேண்டிய பயனாளர்களையும் தாண்டி பல பணக்காரப் பெண்களுக்கும் சென்றடைகிறது என்ற புகாரும் உள்ளது.

பேச்சுவழக்கில், கவுன்சிலர் அம்மாலாம் கார்ல போகுது ஆனா மகளிர் உரிமைத் தொகை வாங்குதுனு நமது மக்கள் குற்றத்தை முன் வைக்கிறார்கள்.

இது பொதுப்படையான ஆதாரமில்லா குற்றம் என்றாலும், ஆண்டு வருமானம், 2.5 லட்சத்திற்குக் கீழ் உள்ள மகளிர் மட்டுமே இந்தத் திட்டத்தில் பலனடைகிறார்களா என்றால் 100 சதவீதம் இல்லை என்ற பதிலே மிச்சம்.

அதாவது பயனடையும் 1 கோடியே 14 லட்சம் பெண்களும், நியாயமான முறையில் பெறுகிறார்களா? என்றால், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவு, என்ற முக்கியமான விதியில் இதில் பலரும் மாட்டிக் கொள்ளத்தான் செய்வார்கள்.

இதை ஒரு தரவுப் பட்டியலாக விருத்தாச்சலம் வட்டத்திற்குட்பட்ட பழைய நெய்வேலி என்ற ஊராட்சி ஒன்றியத்தில் நிகழும் விதிமீறல்களை விளக்கமாக தலையங்கமாக ஒரு நாளிதழ் வெளியிட்டிருந்தது.

அதில் ஊராட்சி கவுன்சிலர், 4 சக்கர வாகனம் வைத்திருப்போர், கணவன் அரசு ஊழியராக இருப்பவரின் மனைவி, ஓய்வூதியம் பெறுபவரின் மனைவி, மத்திய அரசின் பொதுத்துறையில் பணிபுரியும் நபரின் மனைவி, கவுன்சிலரின் மனைவி என ரக ரகமாக விதமீறல் நிகழ்ந்திருக்கிறது.

இதில் உட்சபட்சம் என்னவென்றால், மகளிர் உரிமைத் தொகை சில ஆண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

விளக்கம் கோரியதில், அந்த மகளிருக்கு வங்கி கணக்கு எண் இல்லாத காரணத்தால் , அவர்களது கணவன்மார்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவதாக விளக்கியிருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருக்கும் ஆண் நபருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதே, இது எந்தக் கணக்கில் என்று கேட்டால், ஆராய்ந்து பதிலளிக்கிறோம் என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த திட்டத்துல நம்ம பெயரையும் சேர்த்து விடுங்க, மாசம் மாசம் உங்களுக்கு 300 எனக்கு 700 என்று பொதுமக்களும் அதிகாரிகளும் கைகோர்த்து அரசுப்பணத்தை விழுங்கினால் தெரியவா போகிறது?

உழைத்து வரிகட்டி தனது சக குடிமக்களுக்கு ஒரு நல்ல திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் தவறேதுமில்லை என்று சகித்துக் கொண்டு வாழும் மற்ற பொதுஜனம் தான் இதில் கோமாளிகள் ஆக்கப்படுகிறார்கள்.

நலத்திட்ட உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தாவிட்டால் நாட்டுக்குக் கேடு!

நடவடிக்கை எடுக்குமா அரசு?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.