Categories
சினிமா

மாமன் திரைப்பட விமர்சனம்

வீட்டுக்கு வீடு வாசப்படி, எந்த வீட்டுல தான் சண்டை இல்ல? என்ற வாசகத்தை கடந்து வராத ஆட்களே இல்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வம்போ சண்டையோ வராமல் இருப்பதில்லை.

உறவுகளை மையப்படுத்தியோ, வேறு ஏதாவது பிரச்சினைகளை மையப்படுத்தியோ, அல்லது பிரதானமாகப் பணத்தை, சொத்துப் பிரிவினையை மையப்படுத்தியோ சண்டைகள் வருவது இயல்பு தான்.

அந்த சூழலில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம், என்ன செய்கிறோம் , என்ன பேசுகிறோம் என்பது தான் விளைவுகளைத் தீர்மானிக்கிறது.

சண்டைகளையும் கடந்து சமாதானமாக சந்தோஷமாக வாழும் குடும்பங்களும் உண்டு.

சண்டையைப் பேசிப் பேசிப் பெரிதாக்கி, ஒன்று சேராமலே வீணான குடும்பங்களும் உண்டு.

அப்படி ஒரு குடும்பப் பிரச்சினையை மையப்படுத்தி வந்த படம் தான் நடிகர் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாமன் திரைப்படம்.

படத்தின் தலைப்பையும் முன்னோட்டத்தையும் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் நாம் பார்த்துப் பழகி ரசித்து சலித்த கதைதான் என்று.

ஆமாம் அதேதான். அக்கா மற்றும் அக்கா குழந்தை மீது பாசமாக இருக்கும் தம்பி, திருமணமான பிறகு தனக்கும் தன் மனைவிக்கும் இடையே அந்தக் குழந்தையினால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக, குடும்பத்தில் பல சிக்கல்கள்.

தாமிரபரணி என்ற படத்தில் கூட பிரபு அவர்களும் இதே மாமன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

அதே தான் இங்கேயும்.

நீங்க உங்க குடும்பத்து மேல வச்சிருக்கிற அன்பப் பாத்துதான் உங்கள விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா அந்த அன்பே இப்படி நமக்குள்ள பிரச்சினை வரக்காரணமா இருக்கும்னு நினைக்கல என்ற அதே பழைய மசாலா.

ஒரு வித்தியாசமான புது அனுபவமும் கதையம்சமும் வேணும்னு நினைச்சுலாம் இந்தப்படத்துக்குப் போக முடியாது.

சிரிப்பு நடிகர் நமது அன்புக்குரிய புரோட்டா சூரி நல்லா நடிச்சிருக்காராமே? அதுவும் குடும்பப் பின்னனி கதையாம்ல என்று சன் டிவியில் சீரியல்களைப் பார்ப்பதற்கு பதிலாக இந்தப் படத்தை மனத்திருப்தியுடன் பார்க்கலாம்.

குடும்ப சகிதம் இந்த விடுமுறையைக் கழிக்க நிம்மதியாக அமர்ந்து பார்த்து ரசிக்கத்தக்க நல்ல படம் தான்.

ஆனால் சென்ற வாரம் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் அளவிற்கு கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் அளவிற்கு சரக்கு இல்லை.

சூரி உட்பட படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

காட்சி அமைப்புகள், ஒன்றிரண்டைத் தவிர மீதி அனைத்துமே யூகிக்கும் படியான காட்சிகள் தான்.

பெரிய சிறப்பு என்பதெல்லாம் இல்லை.

மோசமும் இல்லை.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.