படங்கள் சில நேரங்களில் நடப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் எடுக்கப்படுகின்றன.
அவ்வாறான ஒரு படம் மற்றும் சம்பவம் பற்றிய ஒரு பதிவு தான் இது.
தற்போது பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்து இங்கு அறியாதோர் இல்லை.
6 வருடங்கள் கடந்துவிட்டாலும் அந்த பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான முறையில் தண்டனை கிடைத்திருப்பது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.
இந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் அளிக்கவில்லை.. ஆனால் குற்றவாளிகளே தாம் செய்த தவறுகளுக்கு ஆதாரத்தை தமது மடியிலேயே வைத்திருந்தனர். அதாவது மடக்கணினியில் காணொளிகளாக.
அந்தக் காணொளிகளைக் கண்டு, பாதிக்கப்பட்ட பெண்களைத் தேடியறிந்து அவர்களிடம் புகார் வாங்கி சாட்சி சொல்லச் செய்து, அந்த சாட்சிகள் 48 ம் பிறழ் சாட்சி அல்லாமல் இருந்தாதாலேயே இப்படி ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.
இதுவே அந்த பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வராமலோ, சாட்சி சொல்ல பயந்தாலோ?
அப்படி ஒரு கதைப் பின்னனி கொண்ட படம் தான் மலையாளத்தில் வெளியான ஆபீசர் ஆன் டியூட்டி திரைப்படம்.
ஏதோ பிரச்சினை காரணமாக, பதவி இறக்கம் அடைந்து , ஆய்வாளராக பணிப் பொறுப்பை ஏற்கும் கதாநாயகன், ஒரு சங்கிலத்திருட்டு வழக்கில் அவர் நடந்து கொள்ளும் விதம் அவர் எப்படியானவர் என்பதைக் காட்டுகிறது.
அதைத் தொடர்ந்து ஒரு பேருந்து நடத்துனர், தான் அடமானம் வைக்கச் சென்ற தங்கச் சங்கிலி, போலி என்ற பிரச்சினையில் வர, அங்கிருந்து படம் சூடு பிடிக்கிறது.
அந்த நகையை மாற்றியதே அந்த நடத்துனரின் மகள் தான்.
தன் காதலனுக்காக அதைச் செய்திருக்கிறாள்.
காதலன் நல்லவன் அல்ல.
போதை மருந்து கொடுத்து அவளோடு உடலுறவு கொண்டதைப் படம் எடுத்து மிரட்டும் அயோக்கியன்.
அந்த காதலன் ஒருவன் அல்ல.
மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் கொண்ட கஞ்சா கும்பல்.
காவல்துறை வரை பிரச்சினை தெரிந்து விட்டதே என்று நடத்துனரின் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்தப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு அந்த ஆய்வாளரின் மிரட்டும் தொனியிலான விசாரணை தான் காரணம் என்று நடத்துனர், போராட, காவல்துறை ஆய்வாளரின் மகளும் முன்னாளில் இது போன்ற பிரச்சினையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டவள் என்பது தெரியவருகிறது.
இதையெல்லாம் தொடர்ந்து செய்யும் அந்த கும்பலை கதாநாயகன் எப்படி அழித்தார் என்பதே படம்.
படத்தில் கதாநாயகன் பெரிய ஆளாகக் காட்டப்பட வேண்டும் என்பதற்காக, கதை எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் பொள்ளாச்சி வழக்கில், கதாநாயகர்களான CBI அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் முழு ஒத்துழைப்பும் தந்திருப்பது சிறப்பு.
வழக்கு கடந்து வந்த இந்த 6 வருட காலத்தில் பதவி மற்றும் பணபலத்தால் அந்த கும்பல் எத்தனையோ இன்னல்களை இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தி, சாட்சியங்களைத் தனக்கு ஆதரவாக மாற்றத் துணிந்திருக்கலாம்.
ஏன் பணத்தாசை காட்டி கூட அவர்களை மயக்கப் பார்த்திருக்கலாம்.
ஆனால் ஒரு சாட்சி கூடப் பிறழாமல் ஒட்டுமொத்த பேரும், தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு போராடி வென்றிருப்பது பாரட்டுதலுக்குரியது.
இந்த சம்பவம் ஒரு மிகப்பெரிய ஹிட் அடித்த சினிமா கதையை விட சுவாரஸ்யமானது. இதில் பாதிக்கப்பட்டு நீதிக்காக நின்று போராடிய பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இது போன்ற தண்டனைகள் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதிருக்க ஒரு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.





