Categories
சினிமா

Retro- திரை விமர்சனம்

சினிமா என்றாலே கதாநாயகனைப் பொறுத்து முதலில் முக்கியத்துவம் பெறுகிறது.
அதைத் தாண்டி தான் மற்ற விஷயங்களெல்லாம் பேசப்படும்.

இந்த வாரமும் அப்படித்தான் ஒரு முக்கியமான கதாநாயகனின் படம் , அதுவும் ஒரு வெற்றிகரமான இயக்குனரின் இயக்கத்தில் வெளியானதால் அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டது.

போதாக்குறைக்கு கன்னிமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சிறுசு முதல் பெருசு வரையிலான மக்கள் மனதைக் கவர, இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் வலுத்தது.

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா என்றால், முழுமனதுடன் பதில் சொல்ல இயலாது.

ஒவ்வொரு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் , படம் முடிந்து இறுதியில் கார்த்திக் சுப்புராஜ் படம் என்று வரும்போது, ரசிகர்களிடமிருந்து வரும் மிகப்பெரிய ஆரவாரமும் கைதட்டலும் இல்லவே இல்லை.

சமீபத்தில் ஜிகர்தண்டா -2 படத்தில் அந்த ஆரவாரத்தை கண்டிருந்தோம்.
சொல்லப்போனால் உணர்ச்சியும் தூண்டப்பட்டிருந்தது.

இந்தப்படத்தின் சொதப்பல் என்பது அந்த உணர்ச்சி தூண்டல் தான்.

படத்தில் என்னவோ நடக்கிறது, நான் பாப்கார்னோ, ப்ரெஞ்ச் ப்ரைஸோ சாப்பிடுகிறேன் என்ற ரீதியில் தான் படம் நம்மை வைத்திருந்தது.

ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்த தருணம், கனிமா பாடல் காட்சியும், சண்டைக் காட்சிகளும் தான்.

அதிலும் சண்டை விரும்பாத குடும்ப ரசிகர்களுக்கு, படத்தில் ஈர்க்கும் விஷயம் ஏதுமில்லை.

படத்தின் மூலக்கதையை க்ளைமாக்ஸை ஒட்டி வெளிப்படுத்தியது எல்லாம் சரிதான், இதே பாணியல் தான் ஜிகர்தண்டா -2 படத்திலும் படத்தின் மையக்கரு இடைவேளைக்குப் பிறகு ரொம்ப நேரம் கழித்தே வெளிப்படும்..
ஆனால் அதுவரை திரைக்கதை நகர்ந்த விதமும், அந்த மூலக்கதையோடு அது இணைந்த விதமும் நன்றாகப் பொருந்தியிருந்தது.
ஆனால் இந்தப்படத்தில் மூலக்கதையோடு கதாநாயகன் பொருந்திய காட்சி, அந்தக் குழந்தையே நீங்கதான் என்ற ரீதியில் நமக்கு சிறிது நகைப்பை வரவழைத்து விட்டது.

திரைக்கதையை ஜவ்வாக இழுந்து வளைத்திருக்காமல், நேராக விரைவாக மூலக்கதையில் இணைத்திருந்தாலே படம் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

படத்தில் வில்லன்களாக வரும் இருவர் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சூர்யாவின் அப்பா என்று வரும் வில்லனும், தீவில் ராஜா வாக வருபவரும்.
நாசர் டம்மி தான்.

தீவில் ராஜா வாக வருபவர், அதகளம்.எங்கிருந்துயா புடிச்சீங்க என்ற ரீதியில்.

சூர்யாவை விட பல பேரிடம் அவரே ஸ்கோர் செய்கிறார்.

காட்சிகளில், புதுமை, கதைப் பின்னனியில் புதுமை என்ற பரீட்சையில் தோற்று விட்டார்கள்

மக்கள் மனதில் அது ஒட்டவில்லை.

ஜிகர்தண்டா -2 வில் காட்டுவாழ் மக்களின் வேதனை நமக்கு வெளிப்பட்டது.
இந்தப்படத்தில் அது நாம் வேடிக்கை பார்க்கும் விதமாக அமைந்ததே படத்தின் தோல்வி.

ரப்பர் சண்டைக்காட்சிகளும், வில்லன்கள் தங்கள் இஷ்டத்திற்கு யாரையாவது கொல்வதும், என்பதெல்லாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், முதல் காட்சி சகித்துக்கொள்ளும் விதமாக இருந்தது.அதுவே திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை வரும் போது சலித்து விட்டது.

இந்த கடுப்புப் போதாதென்று ஒரு கும்மாளப் பாடல் வேறு.
மக்கள் இருந்த மனநிலையில் ஸ்ரேயாவைக்கூட ரசிக்க முடியவில்லை.

படத்தின் நீளமும் அதிகம், காட்சிகளும் மனதோடு ஒட்டவில்லை.

ஓகே ரகம்.

ஒருமுறை சின்ன சலிப்போடு பார்க்கலாம்.