Categories
கருத்து சிறுகதை

தவிப்பும், தன்னம்பிக்கையும் தந்த தருணம்.

படித்ததில் பிடித்துப் பகிர்ந்தது. நமது ஆசிரியர்கள் எழுதியதல்ல.

எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும்.

கொலம்பியா பல்கலைக்கழகம். கணித பேராசிரியர் பாடத்தை துவக்கினார். பாடத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே அந்த மாணவனுக்கு உறக்கம் கண்களை சொக்கிக் கொண்டு வந்தது.

அவனையும் அறியாமல் உறங்கினான்.

திடீரென மற்ற மாணவர்களின் சலசலப்பு சத்தம் கேட்டு கண் விழித்தான். கணித வகுப்பு முடிந்து பேராசிரியர் வெளியேறி இருந்தார்.

உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே கரும்பலகையைப் பார்த்தான். பேராசிரியர் கரும்பலகையில் இரண்டு கணிதங்களை கேள்வியாக எழுதி வைத்திருந்தார்.

அவனுக்கு புரிந்து போனது. ஆசிரியர் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார். உடனே நோட்டில் அந்த இரண்டு கணித கேள்விகளையும் எழுதிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து தான் கணித வகுப்பு வரும். அதற்குள் அதற்கு விடை எழுதி விடலாம் என நினைத்து வீட்டில் உட்கார்ந்து கணக்கிற்கு விடை எழுதிப் பார்த்தான். வரவில்லை.

வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான். யாரிடம் விடை கேட்பது என்றும் தெரியவில்லை.

தொடர்ந்து இரண்டு நாட்கள் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்து அதிசிரத்தையுடன் படித்துக் கடுமையாகப் போராடியதில் ஒரு கேள்விக்கான விடை வந்தது.

இன்னொரு கேள்விக்கு தீர்வு காண்பதற்கு அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

மற்றொரு கேள்விக்கு பதில் எழுதாமல் போனதற்கு கடுமையாக திட்டு கிடைக்கும் என நினைத்துக் கொண்டே இரண்டு நாட்கள் கழித்து வகுப்பறையில் உட்கார்ந்து இருந்தான்.

கணிதப் பேராசிரியர் வந்தார். பாடங்களை நடத்தினார். வகுப்பு முடிந்ததும் வெளியே கிளம்ப தயாரானார்.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அசைன்மென்ட் கொடுத்ததையே பேராசிரியர் மறந்துவிட்டாரோ?

எழுந்து பேராசிரியரிடம் சொன்னான்,

‘சார் ..! நீங்க அசைன்மென்டாக கொடுத்த இரண்டு வினாக்களில் ஒன்றுக்கு விடை எழுதி விட்டேன். மற்றொன்றுக்கு விடை எழுத நேரம் கிடைக்கவில்லை. எனக்கு இன்னும் இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுத்தால் அதற்கும் விடை எழுதி விடுவேன்’

பேராசிரியர் அதிர்ச்சியாய் அவரிடம் பதில் சொன்னார்,

‘என்ன சொல்ற..! நான் அசைன்மென்ட் எதுவும் கொடுக்கவில்லையே. அந்த ரெண்டு வினாக்களில் ஒன்றுக்கு விடை எழுதிட்டேன்னு வேற சொல்ற. எனக்கு ஒண்ணும் புரியலை. அந்த விடைத்தாளை காட்டு பார்ப்போம்’

மாணவன் காட்டினான். படித்துப் பார்த்த பேராசிரியர் அதிர்ந்து போனார்.

‘இதுக்கு விடை எப்படி கண்டுபிடிச்ச?’

அந்த மாணவன் உண்மையை ஒத்துக் கொண்டான்,

‘நீங்க பாடம் எடுத்த போது என்னையும் அறியாமல் உறங்கி விட்டேன். மற்ற மாணவர்களிடம் இந்த வினாக்களுக்கு விடை கேட்பதற்கும், நீங்கள் வகுப்பறையில் என்ன பாடம் நடத்தினீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்வதற்கும் நேரம் கிடைக்கவில்லை. அதனால் நானாக முயற்சி செய்து பல புத்தகங்களைப் படித்து விடை எழுதினேன்’

பேராசிரியர் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்த கூத்தாடி சொன்னார்,

‘உலகின் மிகச்சிறந்த கணித வல்லுனர்களாலும் தீர்க்கப்பட முடியாத பல கணக்கு வினாக்கள் இருக்கின்றன. உதாரணமாக அவற்றில் இரண்டை எழுதுகிறேன் எனச் சொல்லி நான் எழுதிய வினாக்கள் தான் அவை. அதற்கு நீ விடை கண்டுபிடித்து இருக்கிறாய் என்பதை நினைக்கும்போது என்னால் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை’

அந்த மாணவன் முதல் வினாவிற்கு விடை கண்டுபிடித்த நான்கு தாள்கள் இன்னும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருக்கின்றன.

அந்த மாணவன் தான் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் ஜார்ஜ் பெர்னார்டு டான்சிக் (George Bernard Dantzig).

பின்னாளில் அவர் மாணவர்களிடையே உரையாடிய பொழுது,

‘சில நேரங்களில் நாம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் தான் நம்மை முன்னேற்றும் படிக்கற்களாக அமைகின்றன.

இதற்கு விடை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என எனது கணிதப் பேராசிரியர் சொன்ன வார்த்தைகள் என் காதுகளுக்குள்ளும் விழுந்திருக்குமேயானால் என்னுடைய உளவியலானது நம்மாலும் முடியாது என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்.

ஆனால் நான் பாடத்தை கவனிக்காமல் தவறு செய்து விட்டேன் என்கின்ற குற்ற எண்ணமே என்னை தனிச்சையாகப் போராட வைத்தது.

அந்தப் போராட்டமே பல சிக்கலான கேள்விகளுக்கு தீர்வு காண வைத்தது. இது கணித விடைக்கு மட்டுமான பதில் அல்ல. அனைத்து பிரச்சினைகளுக்குமான பதில்.

அதனால் சில நேரங்களில் நீங்கள் காதுகளை மூடிக்கொள்வதும் நல்லது தான். மற்றவர்களின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் நல்லது தான். மற்றவர்களின் எண்ணங்களையும் முடிவுகளையும் நமக்குள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது தான்.

ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட்டால், மறு சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படி உருவாக்கி நீங்கள் அதில் உங்கள் உழைப்பையும் செலுத்திவிட்டால்…

உலகத்தில் விடை காண முடியாத வினாக்களுக்கு விடை காணும் ஒவ்வொரு நேரத்திலும் நீங்களும் ஜார்ஜ் பெர்னார்டு டான்சிக் தான்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு மனிதனும் விஞ்ஞானியாகிப் போவதும், அஞ்ஞானியாகிப் போவதும் காலத்தின் கைகளில் இல்லை. உங்கள் ஞானத்தின் கைகளில் இருக்கிறது’

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.