இரு நண்பர்களின் சந்திப்பு.
நபர் 1: அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க மாப்ள.
காலி .9 இடத்துல டமால் டமால் டமால் னு சும்மா தெறிக்க விட்ருக்காங்க.
நபர் 2: ஆமா யா , ஆபரேஷன் சிந்தூர் னு பேர்லாம் வெச்சி, 2 பெண் இராணுவ அதிகாரிகள பத்திரிக்கை சந்திப்பில் பேச வச்சி ,சினிமா வை விட பெரிய அளவுல மக்கள் மனசுல ஒரு உற்சாகத்தை ஏற்படுத்திட்டாங்க.
தீவிரவாதிகளுக்கு நல்ல பாடம்.
நபர் 1: இதோட நிறுத்தக்கூடாது. அவனுங்களுக்குத் தண்ணி தரக்கூடாது, ஒட்டுமொத்த நாட்டையும் அழிச்சு துவம்சம் பண்ணிடனும்.
நபர் 2: ஏன்யா தீவிரவாத முகாம்கள அழிச்சது சரி. அவங்க நாடு என்னய்யா செஞ்சுது? நாட்டு மக்கள என்ன செஞ்சாங்க? நம்மள மாதிரி அன்னாடங்கஞ்சியா தான் உண்டு, தன் குடும்பம் உண்டுனு வாழுறவங்க எத்தன பேர் அங்கேயும் இருப்பாங்க? அவங்கள ஏன்யா அழிக்கனும்?
நபர் 1: அட, அவனுங்க இராணுவத்த பாத்தீங்களா? இறந்து போன தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதையோட உடல் அடக்கம் செஞ்சிருக்கானுங்க.
நபர் 2: ஆமாப்பா , நானும் தான் கேள்விப்பட்டேன். சல்லிப்பயலுக. தீவிரவாதத்தை விட்டொழிக்க மாட்றானுங்க. போர் வந்தா எந்தளவுக்கு இரண்டு நாடுகளும் பாதிக்கப்படும்னு தெரியாம , சும்மா துப்பாக்கியத் தூக்கிக்கிட்டு என்ன சாதிக்கப் போறோம்னு தெரியாம, இந்திய நாட்டுக்கு எதிரா எதிரானு பேசி பேசி ஒரு கூட்டத்த வளத்து வச்சிருக்கானுங்க.
நபர் 1: ஆமாப்பா அதனால அந்த நாட்ட அழிக்கனும். ஒரு பயலையும் விடக்கூடாது. போர் வெடிக்கனும்.
நபர் 2: இந்தாப்பா ஏய், அவன் துப்பாக்கிய கையில வச்சிக்கிட்டு இந்த நாட்ட அழிக்கனும் னு சொல்றான்.நீ மொபைல் போன கையில வச்சிக்கிட்டு சொல்ற . இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?
நபர் 1; அட நீ என்னப்பா, அவன் இந்து வா, இந்து வானு கேட்டு சுட்டுருக்கான் அவன சும்மா விடுறதா?
நபர் 2: அட , அவன் மூளை சலவைக்கு ஆளாகி தீவிரவாதி ஆனவன் ப்பா.
அவனுங்கள கணக்குல வச்சி ஒரு நாட்டுக்கு எதிராகப் போர் உருவாச்சுனா , அவனுங்க ஜெயிச்ச மாதிரி தானே ஆயிடும்.
நபர் 1: அப்ப போன உயிர்களுக்கு என்ன பதில்.
நபர் 2: அந்தக் குறிப்பிட்ட தீவிரவாதக் குழுக்களை வேறோடு அழிக்கனும். இனிமேல் நாமும் நமது எல்லைப் பகுதியில் வலுவான பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.
நபர் 1: அப்ப போர் வேணாமா?
நபர் 2: இல்லப்ப , போர் வந்தா நாட்டோட நிதி நலன் பாதிக்கும், அமைதி சூழ்நிலை கெட்டுப் போகும், எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் எப்போதுமே பதட்டமான சூழலில் வாழும்படியாக சூழ்நிலை உருவாகும்.
நபர் 1: வந்தா வரட்டும் பா. நாட்டுக்காக இதக்கூட செய்ய மாட்டாங்களா?
நபர் 2: ஏம்ப்பா யாரோ, 6 தீவிரவாதிகள் செஞ்ச தப்புக்கு இத்தனை கோடி மக்கள் கஷ்டப்படனுமா?
நபர் 1: நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை மனதில் வைத்து இதக்கூட செய்யக்கூடாதா?
நபர் 2: இந்த வாட்டி சண்டையில செத்தது பொதுஜனம் ப்பா, இனிமேல் சண்ட வந்தாதான் இராணுவ வீரர்கள் நிறைய பேர் சாவாங்க.
அதனால தான் இந்தப்பிரச்சினையைப் பேசித்தீர்க்கலாம்னு பலரும் சொல்றாங்க.
நபர் 1; அட என்னப்பா , என்னத்தப் பேசிக்கிட்டு, பார்டர் மக்கள் கொஞ்ச நாள் நாட்டுக்காக கஷ்டப்பட மாட்டாங்களா?
அடிக்கிற அடில அந்த நாய்ங்க துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடனும்.
நபர் 2: அட ,கஷ்டம்னா ரொம்ப கஷ்டம்ப்பா, இரவுல குண்டு போடுவாங்க, மின்சாரம் இருக்காது, மூனு வேளை சாப்பிட முடியாது, சொந்த வீட்டுல குடியிருக்க முடியாம இராணுவம் சொல்ற இடத்துக்கெல்லாம் ஓடனும். நிம்மதியே போயிடும். வேலை இல்லாம, சம்பாத்தியம் இல்லாம, சாப்பாடு சரியில்லாம, தூக்கமில்லாம நரக வாழ்க்கை ஆயிடும்ப்பா.
நபர் 1: அட அதெல்லாம் நான் சினிமால பாத்துருக்கேன்ப்பா. அதெல்லாம் நாட்டுக்காக சந்தோஷமா ஏத்துக்கனும்ப்பா.
நபர் 2: உனக்குப் புரியலப்பா, போரோட விளைவுகள்
நபர் 1: அதெல்லாம் புரியும், புரியும்.
மறுநாள்..
நபர் 1: என்னா மாப்ள ஐபிஎல் ல நிப்பாட்டிட்டாங்க.
நபர் 2: ஆமா பாகிஸ்தான அடிக்கனும்ல..
நபர் 1: ஏம்ப்பா , அதான் அந்த தீவிரவாத முகாம்கள, அழிச்சாச்சுல, மீதிய பேசிக்கீசித் தீத்துக்கலாம்ல…?
நபர் 2: எப்படி சார் நீங்க இங்க வாங்க, அடிக்க மாட்டேன் வாங்க..