Categories
கருத்து

கட்டம் எப்படி இருக்கிறது?

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எதற்காக?

கணவன் மனைவி சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வதற்கு தான் ஜாதகப் பொருத்தமா? அல்லது வாழ்க்கை முழுதும் அந்த உறவு நிலைக்குமா என்பதை சோதிப்பதற்காகவா?

சரி வீட்டில் சேர்ந்து வசிப்பது தான் முக்கியப்பிரச்சினை எனில் சென்னை போன்ற நகரங்களில், வீடுகளில் , விடுதிகளில் தங்கியுள்ள கூட்டங்கள் எந்த ஜாதகம் பொருந்தி வாழ்கிறார்களோ? தெரியவில்லையே!
( தெரிந்த முகம், தெரியாத முகம், ஒரே இனம் , வேறு இனம் ஒரே பாலினம், வேறு பாலினம் என்ற எல்லா கலப்பும் வீடுகளில் , விடுதிகளில் சேர்ந்து வசிக்கிறார்கள்.)

அட ஒரு இடத்தில் வசிப்பதற்காக இல்லப்பா, உறவு நிலைக்குமா என்பதற்காகத்தான் ஜாதகம் பார்க்கப்படுகிறது என்று சொன்னால் , நம்முடைய அடுத்த கேள்வி.

தாய், தந்தையை உறவு ஜாதகம் பார்த்தா வந்தது?

அல்லது நண்பர்கள், பெரியப்பா, சித்தப்பா, அத்தைகள் ஜாதகம் பார்த்து உறவானார்களா?

அந்த உறவெல்லாம் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு தானே நீடிக்கிறது?

அதுவும் இல்லை, இல்லற வாழ்க்கை சுகமாகவும், குழந்தைப் பேறும் நன்றாக இருக்கவே , ஜாதகம் பார்க்கப்படுகிறது என்றால்,

கருத்தரிப்பு மையங்கள் மாதம் ஒரு கிளை, தெருவுக்கு இரண்டு புதிதாக துவங்க என்ன காரணம்?

ஏன் ஜாதகம் சரியாக கனிக்கவில்லையா?

இல்லை பத்துப் பொருத்தம் பக்காவாகப் பொருந்தினால் உறவில் விரிசலே வராது என்ற உத்திரவாதம் உண்டா?

அப்படியானால் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் விவாகரத்து வழக்குகள் ஜாதகப் பொருத்தம் இல்லாதவை மட்டும் தானோ?

திருமணம் என்பது மனதும் , மனிதர்களும் ஒத்துப்போகிறதா என்பதைப் பார்த்து நடத்தப்பட்டால் சுகம்..

ஜோதிடர்களிடம் போவதற்குப் பதிலாக ஒரு வயதான தம்பதிகளிடம் சென்று வாழ்த்தும், பிரச்சினை வரும்போது அறிவுரையும், ஆலோசனையும், பெற்றால் திருமண வாழ்வு சிறக்கும்.

மன திருப்திக்காக ஜாதகம் பார்ப்பது தவறில்லை. நமது நேரம், நமது பணம், நமது உரிமை.
வீண்டிப்பது நமது விருப்பம்.

ஆனால்

ஜாதகங்கள் மன, மண முறிவுகளை உருவாக்குவது, மனிதர்களை பிரிப்பது தவறு.
ஜாதகம் மட்டுமே வாழ்வின் காரணி என நம்புவது குருடர்கள் யானையைத் தடவிய கதைதான்.

சமீபத்தில் மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்கள் கூட ஒரு பேட்டியில் இது சம்பந்தமாகப் பேசியிருப்பார்.

அவரும் ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்தவரல்ல, அவரது பிள்ளைகளுக்கும் எந்த வித ஜாதகமும் பார்த்து திருமணம் செய்திடவில்லை.

அவர்கள் நல்வாழ்வே நமக்கெல்லாம் சான்று.
திருமணம் என்பது ஜாதகத்தின் வழி நிற்பதல்ல, வாழ்வியலின் வழி நிற்பது என்று.

நம்முடைய சிவப்ரேம் ஆசிரியரும் கூட திருமணம் என்பது வாழ்வியலின் வழி நிற்பது என்பதற்குச் சான்றாக வாழ்ந்து காட்டுபவர் தான்

வேற்று மொழி, வேற்று இன மனைவி, வெளிநாட்டு வாழ்க்கை, அழகான மகன்கள் என்று இவர் வாழும் இந்த அழகான வாழ்க்கை ஜாதகத்தின் நிர்ணயம் அல்ல.

அன்பின் வழி பிறந்த நல்வாழ்க்கை.அன்பின் வழியிலேயே நிகழும் நல்வாழ்க்கை.

ஆறறிவு கொண்ட மனிதன் ஐந்தறிவு கொண்ட கிளியிடம் தனது வாழ்க்கை எப்படி அமையும் என்று கேட்பது என்ன நியாயம்? என்ன அறிவு?

கிரகங்களின் அமைப்பு சார்ந்து என்று சொல்லிச் சொல்லி, கிரகங்களையே நோண்டி நொங்கெடுக்கும் அளவிற்கு நாம் அறிவாளிகள் ஆகி விட்டோம் என்பதையே மறைத்து நம் மக்களை முட்டாளாக்கிப் பணம் பறிக்கிறது ஒரு கூட்டம்.

உலகின் நன்மைக்காக யாரும் இங்கே ஜோதிடம் சொல்வதில்லை.
பணத்திற்காக.
அப்படி பணத்திற்காக ஓடும் கார்ப்பரேட்டுகள் எப்படி நம்மிடம் ஏமாற்று வேலை செய்கிறதோ, அதுபோலத்தான் இவர்களும்.

அறிவின்மையை விட்டு சந்தித்துச் செயல்பட்டு வாழ்வை அன்பின் வழியில் நல்லவிதமாக அமைப்போம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.