சினிமாக்கள் எல்லாமே மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடுவதில்லை.
ஒரு சில நல்ல கதையம்சமோ, கருத்தோ, திரைக்கதையோ உள்ள சினிமாக்களே மக்களிடம் நற்பெயர் எடுக்கின்றன.
அப்படி சமீபத்தில் தெலுங்கில் வெளியான கோர்ட், திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.
காரணம், சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையும், நீதிமன்ற வாதக்காட்சிகளும் தான்.
12 ஆவது வகுப்பு முடித்து, ஒரு சில தேர்வில் தோற்று, சிறு சிறு வேலைகளைச் செய்து தன் வாழ்வை கவனித்துக் கொள்ளும் ஒரு ஏழைப்பையன்.
அவனது அப்பா காவலாளி வேலையும் அம்மா இஸ்திரி வேலையும் செய்பவர்கள்.
அந்தப் பையனின் வாழ்வில் திடீரென எங்கயோ போன மாரியாத்தா என்மேல வந்து ஏறிட்டா என்ற கதையில் பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண் காதலியாக நுழைகிறாள்
அவளே வந்து வம்படியாக நுழைகிறாள்.
அந்தப் பெண்ணின் மாமனோ பெரிய திமிர் பிடித்த ஆணவம் பிடித்த ஆள்.
ஒரு சூழலில் இவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்து போக, அந்தப் பையனின் மீது போக்ஸோ உள்ளிட்ட கடுமையான சட்டங்களை வைத்து கைது செய்யும்படியாக காவல்துறை மற்றும் வக்கீலை வைத்து ஏற்பாடு செய்து அந்தப் பையனை சிறையில் தள்ளுகிறார்கள்
அந்தப் பையனுக்காக வாதாட வரும் வக்கீலையும் விலைக்கு வாங்கி விடுகிறார்கள்
பொய் சாட்சியங்களையும் வாக்குமூலத்தையும் வைத்து அவன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்
வழக்கில் தீர்ப்பு வரும் நாளும் குறிக்கப்படுகிறது.
தீர்ப்பு வரும் நாள் குறிக்கப்பட்ட பிறகு இன்னொரு வக்கீல் பற்றிய தகவல் கிடைக்கவே கதாநாயகனின் நண்பர்கள் அவரை நாடுகிறார்கள்.
அவர் மறுத்து விடவே, இவர்களின் நிலையறிந்து அந்த வக்கீலின் ஜூனியர் ( சீடர்) ஒருவர் இந்த வழக்கை வாதிட முன்வருகிறார்.
இவரும் கதையின் இன்னொரு நாயகன் தான்
அந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதால், ஆரம்ப கட்ட பொய் சாட்சிகளைத் தனது சாமர்த்தியமான வாதத்தினால் சிதறடிக்கிறார்
ஆனாலும் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ள அந்த வழக்கிலிருந்து பின்வாங்க முடிவு செய்கிறார்
ஆனால் அவரது குரு கொடுத்த அறிவுரையைப்பெற்று மீண்டும், அந்த வழக்கை அதிரடியாக வென்று காட்டுகிறார்.
நீதிமன்ற வழக்குக் காட்சிகளும், அது்போல,பின்னணி காதல் காட்சிகளும் மிக அழகாக ரசிக்கும்படியாக உள்ளது.
இந்தப் படம் இப்போது OTT வலைதளமான Netflix ல் கிடைக்கிறது.