வேலைனு வந்துட்டா நாங்கல்லாம் கம்ப்யூட்டர் மாதிரி.
மேசைல காகிதம் இருந்தா கையெழுத்துப் போட்டுத் தள்ளிருவோம். அது எங்களோட இறப்புச் சான்றிதழாவே இருந்தாலும் சரி என்று நிரூபித்திருக்கிறார் இந்த வட்டாட்சியர்.
சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் ஒரு விவசாயி தனது வருமானச் சான்றிதழை விண்ணப்பித்திருக்கிறார்.
அவரது வருமானத்தை மாதம் 2500 ரூ என்றும், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லி விண்ணப்பித்திருக்கிறார்.
தகவல்களை நேர்மையாக சரிபார்த்த அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அவருக்கு சான்றிதழ் அளித்து விட்டனர்.
அந்தச்சான்றிதழ் தான் இப்போது இணையத்தில் பேசு பொருள்.
ஏனென்றால் அந்தச் சான்றிதழில், அவரது வருமானம் மாதம் 25 பைசா என்றும், ஆண்டுக்கு 3 ரூபாய் என்றும் அச்சிடப்பட்டு அதை வட்டாட்சியர் கையொப்பமிட்டு அளித்திருக்கிறார்.
இது இப்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதன் என்ற ரீதியில் இந்த 3 ரூபாய் வருமானச் சான்றிதழ் சமாச்சாரம் கேலி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் எதிர்கட்சிகள் ஆளும் கட்சியைப் பார்த்து, உங்களுக்கு இது தானே வேலை! மக்களை ஏழைகள் ஆக்கும் வேலையைத் தான் நீங்கள் செய்கிறீர்கள்.
இந்த வருமானச் சான்றிதழ் சரியாகத் தான் தரப்பட்டிருக்கிறது என்று வசை பாடி வருகின்றன.
ஆனால் யாரும் அந்த அரசு அலுவலகத்தையோ, கையொப்பமிட்ட வட்டாட்சியரையோ பற்றி வாய் திறக்கவில்லை.
அந்த வட்டாட்சியர், தனது வங்கிக் கணக்கிலிருந்து யாருக்காவது காசோலை தருகிறார் என்றால் 3 ரூபாய்க்கு பதிலாக 3 லட்சம் எழுதியிருந்தால் கையொப்பமிடுவாரா?
கையொப்பமிடுமுன் அது என்ன ஏது என்று கூடப் பார்க்காமல் அப்படி மையொப்பமிட்டிருக்கிறார் என்றால் அந்த வேலைக்கு அவர் தரும் மதிப்பின் அளவு அவ்வளவு தான்.
கிட்டத்தட்ட ஒரு மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையிலிருக்கும் அதிகாரி இப்படி அஜாக்கிரதையாகக் கையொப்பமிட்டது மிகப்பெரிய அசிங்கம்.
இதை தவறாக தயார் செய்து, பிறகு அதையும் கூட கண்ணெடுத்துப் பார்க்காமல், அவர் கையொப்பமிட்டதை அப்படியே அந்த விவசாயியிடம் ஒப்படைத்த அந்த அலுவலக ஊழியர்கள் இவருக்கு மிச்சம்போல.
ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் கூடவா இதை கவனித்திருக்கவில்லை.
இது வேடிக்கையான விஷயமல்ல.
வேதனை தரக்கூடிய விஷயம்.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு இப்படி வேலை மீது அக்கறை இல்லாமல், மிக அஜாக்கிரதையாக இதுபோன்ற காரியங்களைச் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அந்த அருவலக ஊழியர்கள் மற்றும் அந்த வட்டாட்சியருக்கு குறைந்தபட்ச தண்டனையாவது அளிக்க வேண்டும்