சர்க்கஸ் என்றாலே நம்மில் பெரும்பாலானோர்க்கு ஜெமினி சர்க்கஸ் தான் ஞாபகத்திற்கு வரும்.
சிங்கம் புலி யானை கரடி எல்லாம் வைத்து, மிகப் பெரிய அளவில் பிராம்மாண்டமாக நிகழும் சர்க்கஸ் அது.
நகராட்சி, மாநகராட்சிகளில் அது போன்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் சிற்றூர்களில், கிராமங்களில், சிறிய அளவிலான சர்க்கஸ்கள் நிகழும்.
புதன், வியாழக்கிழமைகளில் துவங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிடும்.
கூட்டம் இருந்தால் ஓரிரு நாட்கள் தொடரும்.
ஊரில் உள்ள சின்ன சின்ன பொட்டல்களில் கூடாரம் அமைத்து, மரப்பலகையிலான அடுக்கடுக்கான இருக்கைகளும், சேர்களும் போட்டிருப்பார்கள்.
எங்கள் ஊரில் வழக்கமாக எங்கள் தெருவின் அருகே அமைந்துள்ள முத்தாலையம்மன் பொட்டலில் இந்த சர்க்கஸ் காட்சிகள் நிகழும்.
எனக்கு விவரமறிந்து 3,5 ரூ களில் துவங்கி 30, 50 ரூ க்கு அந்த சர்க்கஸ் காட்சிகள் பார்த்த ஞாபகம்.
கடைசியாக நான் கல்லூரி பயின்ற காலத்தில் அதுமாதிரியான சர்க்கஸ் காட்சி எங்கள் ஊரில் நிகழ்ந்தது.
மிருகங்கள் எதுவும் கிடையாது என்றாலும் ஒரு சில சர்க்கஸ் குழுக்கள், குரங்கு மற்றும் நாய் வைத்து வளையத்தினுள் நுழைவது போன்ற சாகசங்களைச் செய்வார்கள்.
மீதி எல்லாம், மனிதர்கள் செய்யும் சாகசம் தான்.
கம்பி மேல் நடப்பது, ஜிம்னாஸ்டிக்ஸ், நெருப்பு விளையாட்டு, இடப்பில் வளையமிட்டுச் சுழற்றுவது, போன்ற சாகசங்களையும், சைக்கிளில் ஒரு சக்கரத்தோடு வித விதமாக வித்தை காட்டுவதையும் செய்வார்கள். இதெல்லாம் ஒரு மணி நேர கணக்கிற்கும், மீதி ஒரு 30-45 நிமிடங்களுக்கு, அப்போதைய புதுப் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்விப்பார்கள்.
இந்த சர்க்கஸ்கள் பற்றிய நினைவுகள் என்றுமே உண்டு. இரவு சர்க்கஸ் முடித்து தூங்கி விட்ட பிறகு, பகலில் அந்த சர்க்கஸில் சாகசம் செய்த நடனமாடிய சிறுவர்கள் அருகிலிருக்கும் தெருக்களில் வீடு வீடாகச் சென்று பாத்திரத்தில் சாதமோ, குழம்போ எது கிடைக்கிறதோ அதை வாங்கிச் சாப்பிடுவார்கள்.
நமக்கு சிறுவயதில் சர்க்கஸ் சாகசம் செய்த அந்த சக குழந்தைகள் மீது தனிப்பிரியம். அதனால் அந்தச் சிறுவர்கள் வரும்போது நானெல்லாம் என் அம்மாவிடம் சோறு போடச்சொல்லி அல்லது தோசை சுட்டுத் தரச்சொல்லி அடம்பிடித்திருக்கிறேன்.
முடியாத பட்சத்தில் என் சாப்பாட்டை கொடுத்திருக்கிறேன்.
அந்த சாகசம் செய்யும் குழந்தைகளின் மீதான பிரியமும் மரியாதையும்.
நம்மால் செய்ய முடியாத ஒன்றைச் செய்வதாலும், அவர்களின் வறுமை நிலை கண்டும் ஒரு மன வருத்தம்.
இந்த சர்க்கஸ் நினைவுகள், சமீபத்தில் மெஹந்தி சர்க்கஸ் என்ற படம் பார்த்த போது ஏற்பட்டது.
அதிலும் சர்க்கஸ் செய்யும் ஆளின் மீதான காதல் தான் கதை. ஆனால் அது இளம் வயதுப் பெண்.
காதலில் விழுந்தவர் இளம் வயது ஆண்.
அந்தப் படம் அந்தக்காதலை மையம் கொண்டு, ஜனரஞ்சகமாக நகர்ந்தாலும், நமக்கு என்னவோ படம் பார்க்கும் வேளையில் நல் ஊரில் நிகழ்ந்து அதே பாணியிலான சின்ன சர்க்கஸ் குழுக்களின் நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும்.
கடலை வாங்கிக் கொண்டு, அப்பாவிடம் அடம்பிடித்து, முதல் நாளே சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்று சொல்லி, அப்பாவையும் அழைத்துக் கொண்டு, நாற்காலியில் டிக்கெட் எடுப்பா என்று கெஞ்சி, குரங்கும், நாயும் சாகசம் செய்யும் போது, அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டு யப்பா அங்க பாருப்பா சூப்பரா இருக்குல என்று குதூகலித்த குழந்தைத் தனம் பற்றிய நினைவுகள் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது.
இது ஒரு வித்தியாசமான சினிமா. நம்மை வேறு கோணத்தில் மகிழ்விக்கும் சினிமா. இங்கே நான் சினிமா பற்றி எழுதியது மிகச் சுருக்கம் தான்.
உண்மையிலேயே வென்றது நினைவுகள் தான்.
அந்த நினைவுகளைத் தூண்டியது தான் அந்த சினிமாவின் வெற்றி.
இன்னொரு ஜென்மம் எடுப்போமோ, அந்தக் குழந்தைப் பருவத்தை ரசித்து மகிழ.
அப்பாவின் கைகளை தயக்கமின்றி இறுகப்பற்றிய காலங்கள் கடந்து வந்துவிட்டோம்
என்போன்ற சிலருக்கு அது நினைத்தாலும் நிறைவேறாத ஒன்று.
வாழ்வில் தொலைந்து போன பல சந்தோஷங்களில் இந்த சிறு குழும சர்க்கஸ்களும் ஒன்று.
இப்போதெல்லாம் நான் அதுபோன்ற சர்க்கஸ்களைப் பார்க்கவே இல்லை.
1995 காலங்களிலேயே அந்த சர்க்கஸ்க்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடுவார்கள்.
ஏனென்றால் ஒளியும் ஒலியும் பார்க்கும் காரணத்தால், யாரும் சர்க்கஸ் பார்க்க வரமாட்டீர்கள் என்று.
அப்படியிருக்க இந்தக்காலத்தைச் சொல்லவா வேண்டும்?
நினைவுகள் மட்டுமே மிச்சம்.