Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

DNA – திரை விமர்சனம்

திருமணமான தம்பதிகளை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவது வழக்கம்.

அந்தப் பதினாறு செல்வங்களுள் மக்கட்பேறு, அதாவது பிள்ளைச் செல்வமும் முக்கியமான ஒன்று.

திருமணமான தம்பதிகளுக்கு இப்போதைய காலத்தில் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அதுவே.
ஏனென்றால் இந்த வாழ்க்கை முறை நம்மை அந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, உடலை வருத்தி, IVF போன்ற மருத்துவ முறைகளை பலரும், அது வேணாம்டா சாமி நாம ஏதாவது குழந்தைய தத்தெடுத்து வளர்க்கலாம் என்று சிலரும் முடிவு செய்கின்றனர்.

அப்படி தத்தெடுப்பதில் நிறைய வழிமுறைகளும், காத்திருப்பும் அதிகம். அப்படிக் காத்திருக்காமல் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை எங்களுக்கு உடனடியாகக் குழந்தை வேண்டும் என்று யாராவது கேட்டால்?

திருடித்தான் தரனும்!

கேட்க நல்லாத்தான் இருக்கு!
ஆனா யார் செய்றது?
அதுவும் இந்த டிஜிட்டல் உலகத்துல, இத்தனை காவலாளி, இத்தனை கேமராக்களைத் தாண்டி குழந்தை திருடுவது எளிதா?

அப்படி ஒரு அணி இருந்தால்?
அந்த அணியின் பின்னனி என்ன?
அதனால் பாதிக்கப்படும் கதாநாயகன், அதை எப்படித் துரத்திக் கண்டறிகிறார்?

இதுதான் DNA படத்தின் கதை.

நல்ல கல்வியறிவுள்ள குடும்பப் பின்னனியிலுள்ள கதாநாயகன், தன் காதலி தன்னை விட்டுப் போன காரணத்தால் குடிகாரனாகி எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாகச் சுற்றுகிறார்.
ஒரு சூழலில் தன் காதலி, அவளது கணவனின் நடத்தையை சகித்துக் கொள்ள முடியாமல் இறந்து போகிறார்.

அதையறிந்த இவர் இன்னும் மோசமான போதை ஆசாமியாக மாற, ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறார்.

திருமணம் நிகழ்ந்தால் சரியாகும் என்று, ஒரு சின்ன மனப்பிரச்சினை உள்ள பெண்ணைப் பார்த்துப் பேசி திருமணம் முடித்து வைக்கின்றனர்.

நல்லவிதமாக குடும்பம் நடத்தி, வேலை தேடி இனிதான வாழ்க்கையை முன்னெடுக்கிறார்கள்.
பிரசவம் முடிந்து ஆண் குழந்தை பிறக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் இவன் மனைவி மட்டும் குழந்தை நம்முடையது அல்ல. இது வேற குழந்தை எனப் போராட, அங்கே துவங்குகிறது பரபரப்பு.

5 நிமிட இடைவெளியில் குழந்தை எப்படி மாறும்?
ஏன் மாற்றப்பட்டது?

யார் எடுத்தது?.
எதற்காக ?

என்ற கேள்விகளைத் தேடி ஓடத்துவங்குகிறார் கதாநாயகன்.

இடையில் தங்கள் கையிலிருக்கும் குழந்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டது, அதன் தாய் தந்தை யார் என அறிந்து அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் காட்சியில் அதர்வா மற்றும் அந்தக் கதாநாயகியின் நடிப்பு அட்டகாசம்.

6 மெழுகுவத்திகள் படத்தில் ஷாம் கடத்தப்பட்ட குழந்தையைத் தேடி இந்தியா முழுக்க அலைந்து கண்டறிவார். அந்தப்படம் அளவிற்கு அழுத்தமாக திருத்தமாக இல்லாவிட்டாலும், இதிலும் எல்லாக் காட்சிகளும் நல்லவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது சிறப்பு.

DNA – பரபரப்புக்கு பஞ்சமில்லா அருமையான திரைக்கதை. தற்போது ஓடிடி தளத்தில்.

இதைப் பார்ப்பவர்கள் 6 மெழுகுவர்த்திகள் படமும் தவறாமல் பார்க்கவும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.