ஓவ்வொரு முறையும் அரசுத் தேர்வுகள் நிகழும் போது, அதுவும் குறிப்பாக Group 4 தேர்வு நிகழும் போது பல சுவாரஸ்யங்கள் நிகழ்வது வழக்கமாகிப் போனது.
மணமேடையிலருந்தவாறே, மாலையும் கழுத்துமாக வந்து தேர்வு எழுதுவது, பாட்டிக்கு காரியம் செய்து விட்டு அஸ்தியோடு வந்து தேர்வு எழுதுவது என்று பல வத்தியாசமான வேடிக்கைகளைப் பார்க்க இயலும்.
3000 பதவிக்கு, 18 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள்.
குறிப்பாக இந்த கழுத்தில் மாலையோடு தேர்வு எழுதியவர்கள், அஸ்தியோடு தேர்வு எழுதியவர்கள் எல்லாம் அன்றோடு காணாமல் போய் விடுவார்கள்.
ஏனென்றால் ஒழுங்காகத் தேர்வுக்குப் படித்து வேலை வாங்க நினைப்பவன், தேர்வு தேதியைக் குறிப்பிட்டுத் தனது திருமணத்தைத் தள்ளி வைத்த சம்பவத்தை எல்லாம் நான் என் கண் கூடாகப் பார்த்தது உண்டு.
இதில் வருடா வருடம் குறிப்பாக நிகழும் அடுத்த சம்பவம், தாமதமாக வந்த காரணத்தால், தேர்வுக்கூடத்தில் அனுமதிக்கப்படாத தேர்வர்கள்.. அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழ்ந்திருக்குமா என்பது நிதர்சனமில்லை.
இந்த முறையும் அப்படியான கூத்துகள் இல்லாமல் இல்லை.
ஒரு பெண் ஒருவர் தான் 3 நிமிடம் மட்டுமே தாமதமாக வந்து விட்டதாகவும், போன முறை 15 நிமிடம் தாமதமாக வந்த போது அனுமதித்தார்கள், இந்த முறை 3 நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என்று சோக மழை பொழிகிறார்.
தாமதமாக வந்ததே தவறு, இதில் போன முறை தன்னை அனுமதித்த அதிகாரியையும், பிரச்சினையில் இழுத்து விடும் விதமாக பேட்டி வேறு.
இந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால் அந்தப் பெண் எல்லாத் தேர்வுக்கும் தாமதமாகத்தான் வரும்போல.
நீட் தேர்வில் இதுமாதிரி தாமதமாக வந்தேன் என்னை அனுமதியுங்கள் என்று சண்டையிட முடியுமா?
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இவர்கள் சொல்லும் இந்த 2, 3 நிமிடத் தாமதக் கதை எல்லாம் சுத்தமான பொய்.
தேர்வு நுழைவுச்சீட்டில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். 9.30 மணிக்குத் தேர்வு, 8.30 மணிக்கு தேர்வு நிலையத்திற்கு வந்துவிட வேண்டும்.
9 மணிக்கு கதவுகள் மூடப்படும் என்று.
அப்படியென்றால் இவர்கள் 8.30 மணியைத்தான் நுழைவு நேரமாகக் கருத வேண்டுமே ஒழிய 9 மணியை அல்ல.
ஆனால் இவர்கள் எல்லோரும் கதவுகள் மூடப்படும் அந்தக் கடைசி நிமிடத்தை இலக்காக வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து பொறுமையாகக் கிளம்பி வந்து, பிறகு தாமதமாகிப் போன காரணத்தால் வாயிற்காவலர்களிடம் சண்டையிட வேண்டியது.
தேர்வருக்கான அடிப்படைத் தகுதியிலேயே இவர்கள் தோற்றுப் போய் விடுகிறார்கள். தேர்வுக்கூடத்திற்குத் தேர்வு நேரத்திற்கு வரமுடியாத இவர்களுக்காக எந்த விதமான பரிதாபமும் அவசியமில்லை.
ஒருவேளை வரும் வழியில் ஏதாவது சிறிய பிரச்சினை அல்லது விபத்து என்று தெளிவான காரணங்கள் இருந்தால் இந்தத் தாமதத்தை மன்னித்துத் தேர்வெழுத அனுமதிக்கலாம்.
இன்னொரு இளைஞர் தேர்விக்கூடத்திற்குத் தாமதமாக வந்த காரணத்தால் உள்ளே அனுமதிக்கப்படாத காரணத்தால் தேர்வு நுழைவுச் சீட்டை கிழித்து எறிந்திருக்கிறார்.
இதை ஒரு செய்தியாக ஊடகங்கள் பரப்ப, பலரும் அந்த இளைஞரை வசைபாடியிருப்பது வரவேற்க்கத்தக்கது.
நல்லவேளை இந்த விஷயத்தில், அதிகாரம் திமர் காட்டுகிறது, சாமானியன் சிறிது தாமதமாக வருவது தவறா என்று பேசாமல், அந்த இளைஞரின் செயலைக் கண்டித்துப் பலரும் பேசியிருப்பது வரவேற்ப்புக்குரியது.
இந்த மாதிரி தவறைத் தன்மீது வைத்துக் கொண்டு, தேர்வு நுழைவுச்சீட்டை மரியாதை இல்லாமல் பொதுவெளியில் கிழித்தெறிந்து தேர்வாணையத்தை அவமானப்படுத்திய காரணத்தால் இவர் இனி எந்தவொரு அரசுத்தேர்வும் எழுத முடியாத வண்ணம் தடை செய்ய வேண்டும்.



