Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என் உடலோடு பேசிய தருணம்

நான் என் உடலோடு பேசிக்கொண்ட தருணம்.
பொதுவாக வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு, சுமார் 8.5 கிமீ தூரம் எப்போதும் இருசக்கர வாகன பயணம் தான். ஏறி அமர்ந்து டுபு டுபு என்று முறுக்கினால், 30-45 நிமிடத்தில் வீடு சேர்ந்து விடலாம்.

இடையில் ஒன்றிரண்டு மேம்பாலம், சில சிக்னல்கள், என்று பெரிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதை தான்.

நேற்றைய முன் தினம் அந்த 8.5 கிமீ சைக்கிளில் பயணிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு அமைந்தது.

அப்போது அந்தப்பயணத்தில் எனது உடல் மட்டுமே என்னோடு பேசியது. எனது மூளையும் மனதும் எதுவும் பேசவில்லை, எப்படியாவது இந்த 8.5 கிமீ. பயணத்தை முடித்துவிட வேண்டும் என்பதைத் தவிர.

ஆனாலும் அந்த போக்குவரத்து நெரிசலிலும் கூட பயணத்தின் போது பல எண்ணங்கள், சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பது சகஜம். வரும்காலம் பற்றிய எண்ணங்கள், பணம் பற்றிய சிந்தனை எனப் பலவும் என் மூளையும் மனதும் எதையோ உரையாடிக்கொண்டே வரும்.

பயணம் துவங்கி இரண்டு கிமீ தூரத்திற்குள்ளாகவே, எனது உடல் என்னிடம் பேசத் துவங்கியது.

தினசரி உடற்பயிற்சி செய்திருந்தால் இந்தப்பயணம் இனிய பயணமாக அமைந்திருக்குமே, இப்பப் பாரு கால் லேசா இழுக்குது என்று.

ஆனால் மூளை அதை சமாளித்தது.

அடேய் கொஞ்சம் சும்மா இருங்கடா, நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன். அடுத்த ஒரு கிமீல் ஒரு பெரிய மேம்பாலம். மேம்பால் ஏற்றத்தில் சைக்கிளை இயக்கும் அளவிற்கு நாம் பெரிய ஜாம்பவான் அல்ல என்று இறங்கி உருட்டத்துவங்கி விட்டேன்.

அப்போது தான் உணர்ந்தேன், நாம் வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள கடைக்குக் கூட நடந்து செல்வதே இல்லை. ஆனால் இன்று இந்த மேம்பாலத்தில் நடப்பதே உடலுழைப்பிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகத் தான் என்பது ஆச்சரியமாகவே இருந்தது.

ஓய்வுக்காக நடக்கும் தூரம் கூட, தினசரி உடலின் நன்மைக்காக, உடற்பயிற்சிக்காக நாம் நடப்பதில்லை என்பது வருத்தம் தான்.

அடுத்த ஓரிரு கி.மீ தாண்டிய பிறகு தொடர்ச்சியாக பயணம் செய்ய இயலவில்லை. சில தூரம் நடை, சில தூரம் சைக்கிள் என்று மாறி மாறித்தான் பயணித்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று கிமீ ஆவது நடந்திருப்பேன்.

இது ஆச்சரியம் தான், சாதாரணமாக இவ்வளவு தூரமெல்லாம் நடப்பது இல்லை.

கடைசியாக சபரிமலைக்கு மலைப்பாதை வழியாகப் பன்னிரெண்டு கிமீ நடந்தது தான். அதன்பிறகு பெரிதாக நடந்ததாக ஞாபகமே இல்லை.

ஆனால் இந்தப் பயணம் நல்ல பாடத்தை சொல்லித் தந்தது. உடற்பயிற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பது.

அந்த மேஸ்திரி வீடியோவில் சொல்வது போல, “ஏங்ங்ங்க இங்க பாருங்க, என் உடம்புல இருந்து ஏதோ தண்ணியெல்லாம் வருதுங்க”

அதான் வியர்வை வந்தது.

நம்மில் பலரும் இதேபோலத்தான், வேலை வேலை என்று காலை எழுந்த உடனே நேராக கழிவறை சென்று காலைக்கடன்களை முடித்த கையோடு குளித்து கிளம்பி வேலைக்கு ஓடுகிறோம்.
இரவு தூங்கும் நேரத்திற்கு தான் வீடு திரும்புகிறோம்.
இதில் உடற்பயிற்சி வேற எங்கிருந்து செய்வது என்று நம்மை நாமே சமாளித்துக் கொள்கிறோம்.

ஆனால் அது தவறான சிந்தனை என்று இது போன்ற சில வாய்ப்புகள் நமக்கு உணர்த்தி விடுகின்றன.
சுவரில்லாமல் சித்திரம் இல்லை.

வேலை செய்து சம்பாதிக்க நல்ல உடல் ஆரோக்கியம் தேவை. அதற்காக சில நேரம் ஒதுக்கிப் பயிற்சி மேற்கொள்வது அத்தியாவசியம்.

நானும் இதை முயற்சிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
நண்பர்களும் இதை கருத்தில் கொள்ளவும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.