அது ஒரு காற்றோட்டமான வகுப்பறை. பலதரப்பட்ட மாணவர்களையும் பார்த்த இருக்கைகள்.
சில இருக்கைகள் மட்டுமே கட்டமைப்பு சீர்குழையாமல் இருந்தன. மற்றவை எல்லாம் சின்ன சின்ன குறைகளோடு தான் இருக்கின்றன.
அன்று முதல் நாள் வகுப்பு. பல்வேறு ஊர்களிலும் இருந்து தரவரிசைப் பிரகாரம் தேர்வான மாணவர்கள் கனவுகளோடு வந்தமர்ந்தனர்.
தனக்கென ஒரு நண்பனை, தோழியை அடையாளம் காண வேண்டும் என்ற தேடலோடு, புது இடம் என்ற பயமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்தது.
தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவும், ஆசையும் ஒவ்வொரு மாணவ மாணவியரின் மனதிலும் இருந்தது.
முதல் நாள் வகுப்புத் துவங்குவதற்கான மணி ஒலித்தது.
பட்டாம்பூச்சி வயிற்றிலிருந்து கிளம்புவது போல, பலருக்கும் அந்த மணி ஓசை ஒரு விதமான புது உணர்வைத் தந்தது.
கம்பீரமான நடையுடன் உயரமான வாட்டசாட்டமான ஆள் உள்ளே நுழைந்தார். அவர் என்ன பாடம் எடுக்கப் போகும் ஆசிரியர் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
ஆள் எப்படி என்பதும் தெரியவில்லை.
கம்பீரமான குரலுடன், இந்தாம்மா, 3 ஆவது வரிசை நடு இருக்கை, எழுத்து நில்லு என்று சொல்ல ஒரு மாணவி எழுந்து நின்றாள்.
தன்னை ஏன் எழுப்பினார்?
முதல் நாள் முதல் வகுப்பிலேயே என்ன கேள்வி கேட்பாரோ? நம்முடைய பெயர், ஊர் ஆகியவற்றைக் கேட்டு அமரச்சொல்லி விடுவாரோ என்று ஆயிரம் கேள்விகளுக்கான பரபரப்பு அவள் மனதிற்குள்.
எழுந்து நின்றவளைப் பார்த்து, உயரம் கம்மியா இருக்கியே, முன்னாடி இருக்கையில் அமர வேண்டும் என்ற அறிவு இல்லையா என்ற ரீதியில்பேசி அவளை வெளியே போகச் சொன்னார்.
அந்த மாணவி ஏதோ சொல்ல முயற்சிக்க, வாய் திறக்காம வெளியே போ என்று சொல்ல, அவளும் மௌனமாக வெளியே சென்று விட்டாள்.
வகுப்பறையில் மயான அமைதி நிலவியது.
எல்லோருக்கும் ஒரு பயமும் பதட்டமும் ஒட்டிக் கொண்டது. அடுத்தது நாமா என்று.
ஆனால் அடுத்த நொடியே ஆள் வேற மாதிரி ஆகிப்போனார்.
சிரித்த முகத்துடன், வகுப்பைத் துவங்கலாமா நண்பர்களே என்று அந்தப் பேராசிரியர் கேட்டார்.
அவரின் அந்த திடீர் மாறுதல், இவர் மண்டைக்கோளாறு பிடித்தவரா? அல்லது சமீபத்தில் தலையில் ஏதாவது அடிபட்டிருக்குமா என்ற சந்தேகத்தைக் கூட சிலருக்கு ஏற்படுத்தியது.
வகுப்புத் துவங்கியது.
முதல் கேள்வியுடனே துவங்கியது.
சட்டம் என்றால் என்ன?
அது என்ன செய்கிறது? என்பது தான் கேள்வி.
முதலில் சிலர் தயங்கினாலும் பிறகு பலரிடமிருந்தும் பலதரப்பட்ட பதில்களும் வந்தது.
வகுப்பு யதார்த்தமாக நகரத்துவங்கிய காரணத்தால் கேலியாக கூட சில பதில்கள் வந்தது.
நாட்டின் நிர்வாகத்திற்கான மூல மந்திரம் சட்டம்.
மனிதனின் உரிமைகளைக் காப்பது சட்டம்.
சமூக நீதியை நிலைநாட்டுவது சட்டம்.
இது மாதிரியான சில பதில்கள் வந்தது.
அதில் மனிதனின் உரிமைகளை நிலைநாட்ட உதவுவது சட்டம் என்ற பதில், தனக்கு மிகவும் நல்ல பதிலாகத் தோன்றுவதாக பேராசிரியர் சொன்னார்.
பிறகு, நான் அந்த மாணவியை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பியது சரியா தவறா என்ற கேள்வியை எழுப்பினார்!
“ஐயா, அது வந்து…” என்ற ரீதியில் “இப்ப நான் என்ன சொல்றது…” “தங்களுக்கத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை…” என்று வடிவேலு ரீதியில் இழுவைகள் வந்ததே ஒழிய பதில் வரவே இல்லை.
பிறகு அவரே சொன்னார். அந்த மாணவியை உள்ளே அழைத்து மன்னிப்புக் கோரி அமரச் செய்து விட்டு,
தனக்கான இருக்கையைத் தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்குமானது.
இங்கே தேர்வாகி படிக்க வந்திருக்கும் உங்களுக்குப் பாடம் நடத்துவது என் கடமை. தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் நான் உங்களை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பினால், அது என் கடமை மீறலும் உங்களது உரிமைப்பறிப்பும் ஆகும்.
ஆக நான் இருவேறு தவறுகளை செய்த போது நீங்கள் யாரும் என்னை ஏன் எதிர்த்துக் கேள்வி எழுப்பவில்லை?
சரி அது போகட்டும், அந்த மாணவி என்னிடம் ஏதோ பதில் கூற முயலும் போது அவளை வாய் பேச விடாமல் தடுத்து விட்டேன்.
நமது சட்டப்படி குற்றவாளியானாலும் அவர் தரப்பு வாதம் கேட்கப்பட வேண்டும்.
சட்டம் என்பது மனித உரிமைகளுக்கான ஆயுதம் என்று பதில் சொல்லி நாளைய சமுதாயத்தில் வழக்கறிஞர்களாகவிருக்கும் நீங்கள், இப்படி சக மாணவிக்கு நிகழ்ந்த அநீதிக்கே வாய் திறக்கவில்லையே?
நீங்களா இந்த சமுதாயத்தைக் காக்கப் போகிறீர்கள்? என்று அவர் பேச மணி ஓசை ஒலித்தது…
நன்றி நண்பர்களே நாளை சந்திக்கலாம் என்று சிரித்த முகத்தோடு பேராசிரியர் கிளம்பி விட்டார்.
ஆனால் வகுப்பில் ஒருவரின் முகத்திலும் ஈயாடவில்லை.
முதல்நாள் முதல் பாடம்.
புத்தகத்தில் இல்லா தரமான பாடம்.!