இங்கு குறைந்த விலையில் கிட்னி விற்பனைக்கு உள்ளது.
தேவைக்கு அனுகலாம்.
இவ்வாறான ஒரு அதிர்ச்சி நிலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நிலவுவதாகத் தகவல்.
காரணம் வறுமை, தொழில் ரீதியான தாக்கம்.
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு அரசு மருத்துவர் இதனைக் கண்டறிந்து புகார் அளித்துள்ளார்.
அங்கு விசைத்தறி தொழிலாளர்கள், நெசவாளர்கள் பலரின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி இந்த தாங்கவியலா அநியாயம் நிகழ்ந்து வருகிறது.
ஒரு கிட்னிக்கு 3 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு, அதற்கு ஒரு லட்சம் முன்பணம் செலுத்தி கோவை, கொச்சி போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று கிட்னியை எடுத்து விடுகின்றனர் என்ற விளக்கம் ஒரு பிரபல நாளிதழின் தலையங்கத்தில் வந்திருக்கிறது.
மேலும் இந்த நிகழ்வானது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் உதவியின்றி சாத்தியமே இல்லை என்பது மறுக்க முடியாத ஒன்று.
ஏனென்றால் கிட்னி என்பது கசாப்பு வியாபாரமல்ல, அறுத்தெடுத்து அடுத்தவர் கைகளில் கொடுப்பதற்கு.
எடுப்பதை விட, விற்பது முக்கியம்.
தேவையுள்ள ஆட்களைக்கண்டறிந்து விற்பனை செய்வதில் தான் இந்தத் திருட்டின் ஒட்டுமொத்த பலனும் அடங்கியிருக்கிறது.
அது மருத்தவர்கள் மற்றும் மருத்துவமனை மாஃபியாக்களால் அல்லாமல் வேறு யாரால் செய்ய இயலும்?
3 லட்ச ரூபாய்க்குப் பெறப்படும் கிட்னி 50 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிகப்பெரிய வலைப்பின்னல் கொண்ட மாஃபியாவை சட்டமும் காவல்துறையும் கண்டறிந்து தண்டிக்குமா என்ன?
சமீபத்திய தகவலின் படி இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கீழ்மட்ட இடைத்தரகர் கூட, காவல்துறை தேடிச் சென்ற போது அவர்களின் கைகளில் சிக்காமல் தலைமறைவாகியிருக்கிறார்.
அப்படியிருக்க கோடிகளில் கொள்ளை அடிக்கும் மாஃபியாவா காவல்துறையில் சிக்கிக் கொள்ளப்போகிறது?
பாவம் பொதுஜனம்.
அந்த ஒரு ஜான் வயிற்றை நிரப்ப இன்னும் எதையெல்லாம் விற்பனை செய்ய வேண்டுமோ?
துணியை வாங்கி விற்பவன், ஜவுளிக்கடை நடத்துபவன், நடிகர் நடிகைகளை விளம்பரம் செய்ய வைத்து ஆடி மாதம் தள்ளுபடி தந்து போதாக்குறைக்கு ஆவணிக்கும் தள்ளுபடி அட்டை தந்து கோடி கோடியாக லாபம் ஈட்டுகிறார்கள்.
அந்த ஜவுளி நிறுவனத்தின் நான்காம் தலைமுறை, ஐந்தாம் தலைமுறை பேரன் பேத்திகள் விளம்பரத்தில் வந்து எங்க கடைக்கு வாங்க, நல்லஜவுளி வாங்குங்க, நல்ல வடிவமைப்பை நாங்கள் தருகிறோம் என்று பணத்தில் குளிக்கிறார்கள்.
இங்கே மறுபுறம் நெசவாளி கிட்னியை அறுத்துக் குறுதியில் குளித்து தன் குருதியைக் குடித்தேத் தன் வயிற்றை நிரப்ப வேண்டிய கட்டாயம்.
விவசாயம் போல இன்னும் எத்தனை எத்தனை தொழில்களில் இப்படி உழைப்பவன் அழிவதும், இடைத்தரகன் கொழுப்பதுமாக உலகம் இயங்கும்?
இந்த கிட்னி திருடர்களை முற்றிலுமாக அரசாங்கம் கண்டறியுமா என்றால் அதற்கு தெளிவான பதில் கிடைக்காது.
ஆனால் மாற்றாக கிட்னியை விற்று வாழ்க்கை நடத்தும் அளவிற்கு அவலநிலைக்கு ஆளான மக்களுக்கு ஒரு நல்வாழ்வுக்கான வழியை இந்த அரசாங்கம் செய்து தரவேண்டும்.
அப்படி இயலாவிட்டால், அரசாங்கமே இடைத்தரகராக மாறி மோசடி இல்லாமல் ஒரு நல்ல விலைக்கு அந்த கிட்னியை விற்றுத் தருமா?
இரண்டாவது சட்டத்திற்குப் புரம்பானது. நாம் அந்த விதத்தில் பேசுவதே கூட அரசாங்கத்தை இழிவு படுத்தும் விதமானதாகக் கருதப்படலாம்.
ஆனால் முதலாவதைச் செய்ய அரசாங்காத்தால் முடியாவிட்டால்?
ஒரு பாமரன் என்ன செய்ய இயலும்?
அவன் செய்த பாவமென்ன?
சில காலத்திற்கு முன்பு ஒரு நல்ல ஐஏஎஸ் அதிகாரி கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போது, கோ ஆப் டெக்ஸ் சற்று தலை நிமிர்ந்தது.
கைத்தறி நெசவுத் துணிகளின் விற்பனை சற்று அதிகரித்தது.
ஏன் அது நீடிக்கவில்லை?
கோ ஆப் டெக்ஸ் தலை தூக்கினால் தனியார் ஜவுளி நிறுவனங்கள் வீழ்ந்து விடும் என்ற சூழ்ச்சியா?
இந்தத் துறை மட்டுமல்ல.
பேருந்து துவங்கி மருத்துவம், கல்வி வரை அரசாங்கம் தர இயலாத தரத்தை, அரசாங்கம் பெற இயலாத லாபத்தைத் தனியார் பெறுவது எப்படி?
நிர்வாக முறையா அல்லது வேறேதும் சூட்சமம் உள்ளதா?
அந்த சூட்சமம் அதிக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?
இந்த நாட்டில் தன் சொந்த குருதியைக் குடித்து, அதாவது தமது உடலுறைப்பை விற்று வாழ்க்கை நடத்தும் அளவிற்கு சில மக்கள் தள்ளப்பட்டதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கிய பாரதி வாழ்ந்த நாட்டில், கிட்னி வியாபாரம் நிகழ்ந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே மனம் வேதனைப்படுகிறது.
பல விதங்களிலும் நற்பெயர் கொண்டுள்ள இந்த அரசு இதில் ஒரு நல்ல முடிவை எட்டி தனது பெயரை நிலைநாட்ட வேண்டும்.