நல்ல படங்களில் லாஜிக் பார்க்கத் தோன்றுவதில்லை.
கதை போகும் போக்கில் நாமும் இனிமையாகப் பயணிக்கலாம் என்று தான் தோன்றும்.
அதுபோல ஒரு இனிய பயணம் சொல்லும் கதை.
ஒரு மறதி வியாதி உள்ள நடுத்தரம் தாண்டிய வயது உள்ள நபர், தன் வீட்டிற்குத் திருட வந்த திருடரிடம் உதவி கேட்டு அவருடனே பயணிக்கும் கதை.
கதையின் ஒரு நாயகனான பகத் பாசில் ஒரு திருடன்.
நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வீட்டில் திருட உள்ளே நுழைகிறார். அங்கே கதையின் இன்னொரு நாயகனான வடிவேலு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார்.
வடிவேலு, பகத் பாசிலிடம், தான் மறதிநோயாளி என்பதாலும், பலமுறை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாலும், இப்படி கைகள் கட்டப்பட்டிருக்கிறேன். அதை அவிழ்த்து விட்டால் பணம் தருகிறேன் என்று சொல்ல, பகத் பாசில் அதற்கு உதவி செய்கிறார்.
வடிவேலு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது, அவரது வங்கிக் கணக்கில் 25 லட்ச ரூபாய் பணம் இருப்பதை அறிந்துகொண்ட பகத், அதைத் திருடத் திட்டமிடுகிறார். அதனால் வடிவேலு எங்கே போக வேண்டும் என்று கேட்டு, அங்கே தானே இறக்கி விடுவதாகச் சொல்கிறார்.
வடிவேலுவும் அதற்குச் சம்மதிக்க இருவரும் இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணமாலை கிளம்புகிறார்கள்.
திருடன் திருட்டு வண்டியில், ஞாபக மறதிக்காரனுடன் ஒரு பயணம்.
அந்தப் பயணத்தில் அந்தத் திருடனுக்கு எப்போதும் ஒரு சின்ன பதட்டம் இருக்குமே, அந்தப் பதட்டத்தை நம்மில் கடத்தியது தான் படத்தின் வெற்றி.
மற்றபடி லாஜிக்குகள் சின்ன குறை தான்.
பெருந்தலையின் பைக்கைத் திருடி விட்டுத் தமிழ்நாடு முழுக்க வலம் வருவதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று.
அது போல கதையின் இன்னொரு கோணத்திலும்.
இன்னொரு கோணம் என்பது, இவர்கள் பயணிக்கும் பாதையில் வரிசையாகக் கொலைகள் நிகழ்கிறது.
இதை யார் செய்கிறார்? என்பதை இடைவேளையில் வெளிப்படுத்துகிறார்கள். அதுவரை அது நமக்கு சிந்தனையிலேயே வராது.
அது வெளிப்படும் போது, நமக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி. இங்கேயும் படம் நம்மை உள்ளே அதனோடு கட்டிப் போடுகிறது.
அதன்பிறகு பகத் அந்தப் பணத்தைத் திருடினாரா?
இவர்களைத் தொடர்ந்து கொலைகள் செய்தது யார்? ஏன்? எதற்காக? என்று படம் நம்மை முழுத் திருப்தியுடன் திரைக்கதைக்குள்ளே இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.
நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம், பாட்டுக்கு ஆட்டம் போடுவது செம வைப்.
சமீபத்திய ராஜா இசை ரீமேக் காட்சிகளை தூக்கி சாப்பிடும் விதமாக வடிவேலு மற்றும் பகத் பர்பாமன்ஸ்.
ஒரு பதட்டம் நிறைந்த இனிய பயணம், சிறிது நேரத்திற்குப் பிறகு சஸ்பென்ஸ், பதட்டம் , இனிமை நிறைந்த பயணமாகவும், அதற்குப் பிறகு நினைவுகளும், சோகமும் கலந்த பயணமாகவும் பரிமாற்றம் அடைந்த விதத்ததை சொதப்பாமல் திரைக்கதை அமைத்த விதத்தில் இந்தப்படக்குழுவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டு விட்டது.
நடிப்புக்குப் பஞ்சமில்லா கலைஞர்கள் இருக்கும்போது திரைக்கதை நகர்வில் சுணக்கம் ஏது?
இருவரும் பின்னி பெடலெடுத்து விட்டார்கள்.
அதிலும் வடிவேலுவிற்கு இது ஒரு புது ரகம்.
படத்தின் மையக்கரு, படம் சொன்ன கருத்து, கொலைகளின் பின்னனி எல்லாம் பேசினால் படத்தின் கதை வெளிப்பட்டு விடும் என்பதால், அதை நாம் இங்கே பேசவில்லை.
ஆனால் அது நல்ல ஆழமான கதை.
மொத்தத்தில்
ஒரு இனிய பயணம்.
மாரீசன் – மறக்க முடியாத பயணம்.