Categories
சினிமா

பறந்து போ- திரை விமர்சனம்

சில படங்கள் அழகு, சில படங்கள் கவிதை, சில படங்கள் இழுவை, சில படங்கள் உணர்ச்சி , சில படங்கள் மகிழ்ச்சி.

இந்தப்படம் இத்தனையும் கலந்த கலவை.

கற்றது தமிழ், பேரன்பு போன்ற கனமான படங்களைத் தந்த இயக்குனர் ராம், இலகுவான மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த ஒரு படத்தைத் தந்திருப்பது சுகம்.

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு.
தந்தை மகனை வளர்ப்பது, மகன் தந்தையை வளர்ப்பது என்ற அன்புப் பரிமாற்றத்தைப் பற்றிய படம்.

நமது காலங்களில் தந்தை மகனைக் கண்டித்து அன்பு காட்டி வழிகாட்டி வளர்த்தது மாறி இந்தத் தலைமுறையில், மகன் தந்தையை மிரட்டி உருட்டுவதும், தந்தை மகனிடம் கெஞ்சி கையேந்தி நின்று அன்பு காட்டுவதும் என காலம் மாறி விட்டது

அதை அப்படியே உள்ளது உள்ளபடியாகக் காட்டியுள்ள படம்.

தந்தையும் தாயும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி,கடன்காரன் காரி உமிழ்ந்தாலும் சரி பிள்ளையைப் பெருமையோடு மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்து கஷ்டம் தெரியாமல் மகாராஜா போல வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தின் கதை.

பிள்ளைக்கு ஸ்கேட்டிங் போர்டில் துவங்கி பெரிய பெரிய பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படிப்பு கொடுத்து, தாயும் தந்தையும் வாயையும் வயிற்றையும் கட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் பிள்ளைக்கு அது மகிழ்ச்சியா இல்லயா என்பதே அவர்களுக்கு விளங்கவில்லை.
உண்மையிலேயே பிள்ளை எதிர்பார்ப்பது என்ன? அந்தப்பிள்ளைக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரக்கூடியது எது என்பதை ஒரு விபத்து போல, எதிர்பாராத சம்பவங்களால் உருவான ஒரு வித்தியாசமான நாளை வைத்து அந்தத் தாயும் தந்தையும் உணர்கிறார்கள்.

அந்தப்பையனின் அம்மா, அதாவது கதாநாயகி தனது சொந்த வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் வேளையில், பிள்ளையின் ஆசைக்காக கதாநாயகனான சிவா , பிள்ளையை வண்டியில் வெளியே அழைத்துச் செல்கிறார்.
அங்கே கடன்காரன் துரத்த, பாதை மாறிய இருவரும் பயணிக்கும் இரண்டு நாட்கள் பற்றிய கவிதை போன்ற தொகுப்பு தான் கதை.

முதலில் தன் தாய் தந்தை வீட்டிற்குச் சென்ற நாயகன் அங்கே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, இரவு ஒரு மடம் போன்ற பகுதியில் தங்க நேரிடுகிறது.

அதற்கு அடுத்த நாள் யதார்த்தமாக தனது பள்ளித்தோழியை சந்திக்கிறார்.

தனது பள்ளித் தோழியின் மகனும் இவரது மகனும் ஓரளவு வயதொத்தவர்கள் என்பதால் இருவரும் விளையாடி மகிழ்கின்றனர்.

அவனுக்கு அந்த எளிமையான சூழலும் அந்த யதார்த்தமான அம்மா அப்பாவும் மிகவும் பிடித்து விடுகிறது.

இதையடுத்து கதை யதார்த்தமாக நகராமல், நகர்த்தப்படுவதற்காகவே எழுதப்பட்டது போல இருந்தது.

அதன்பிறகு, இந்தச் சிறுவனுடைய பள்ளித் தோழியின் வீட்டிற்குச் செல்கிறார்கள்.

அங்கே சில லூட்டிகள்.
அங்கு சிவாவும், அந்தப் பணக்கார அப்பாவும் பேசிக் கொள்ளும் வசனங்கள் அருமை.

அதன்பிறகும் படம் நீள்வது, சிறிய சலிப்பு தான், ஆனாலும் காட்சிகள் சிரிக்கும் விதமாக அமைந்த காரணத்தினால் பெரிய சலிப்பு இல்லை.

இறுதியாக தந்தைக்கும் மகனுக்குமான பாசப்போர்.

தந்தையின் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொல்லி அடம்பிடித்து அடாவடி செய்யும் மகன்.

அடாவடி என்றால் மிதமிஞ்சிய அடாவடி.
அதை எப்படி சமாளித்தார்கள், ஒரு மகனுக்கு , ஒரு நல்ல வாழ்க்கைக்கு என்ன முக்கியம் என்ற அறிவுரைகளோடு படம் முடிகிறது.

பிய்த்துத் தின்னும் இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சில தூரம் பறந்து போய், நமக்கான சிறிது நேரத்தை வாழ வேண்டும் என்ற கருத்து அருமை, உண்மையும் கூட.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.