Categories
கருத்து குட்டி கதை நினைவுகள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை என்பதை நாம் அதிகமுறை கடந்து வந்திருப்போம்.
அந்த சொல்லாடல் ஆனது ஏமாற்றுக்காரர்களை உருவகப்படுத்துவதற்காக சொல்லப்படும் சொல்லாடலாகவே இன்றளவும் இருநரது வருகிறது.

அதாவது, இவன் சரியான திருடனா இருக்கானே, முழுப்பூசணிக்காயல்ல சோத்துல மறைக்கப் பாக்குறான் என்ற ரீதியில் தான் நாம் அதை அதிக முறை கேட்டிருப்போம்.

ஆனால் உண்மை அதுவல்ல. இது முற்றிலும் தவறானது.

சரி, முழு பூசணிக்காய் சோத்துல மறைப்பது என்னவென்று இந்தக்கதையில் பார்க்கலாம்.

சிறிது காலத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பணக்காரர் வசித்து வந்திருக்கிறார். என்னதான் பெரிய பணக்காரன் என்றாலும், மனிதனுக்கே உரிய சில சின்ன புத்தி அவரிடமும் இருந்திருக்கிறது.

தனது வீட்டின் அருகே குடியிருந்த ஒரு மித வசதி படைத்த ஆள், அவனது வீட்டைச் சுற்றி சில செடிகளும், பூசணிக்கொடியும் வளர்த்து வந்திருக்கிறார்.

அதில் ஒரு பெரிய அளவுள்ள பூசணிக்காய் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்திருக்கிறது.
அந்த ஆளோ, அதை மறுநாள் பகலில் எடுத்து உபயோகிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் அன்றிரவே அந்தப் பணக்காரர், அந்தப் பூசணிக்காயை திருடிவிட்டார். மறுநாள் தன் வீட்டில் அதை சமைக்கச் சொல்லி உண்டிருக்கிறார்.

இந்த பூசணிக்கொடியின் உரிமையாளருக்கு, இந்தக் காரியத்தை இந்தப் பணக்காரனைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்ற சந்தேகம்.
அதை மற்றவர்களிடமும் தெரிவிக்கவே எல்லோரும் அதை ஆமோதித்து, படுபாவிப்பய, நீ கேட்டுருந்தா கூட, பாதி பூசணிக்காய அவனுக்குக் கொடுத்திருப்பியே, இப்படி முழுப்பூசணிக்காயைத் திருடிட்டானேனு பேச ஆரம்பிச்சாங்க.

இது எல்லாப்பக்கமும் பரவி, முழுப்பூசணிக்காயைத் திருடிய வீடு என்று பட்டப் பெயராகவே மாறிவிட்டது.

இந்தப் பட்டப் பெயர் இரண்டு மூன்று தலைமுறைகளைத் தாண்டியும் மாறவில்லை.

அந்த வீட்டின் அடையாளமே முழுப்பூசணிக்காய் திருடிய வீடு என்றே ஆனது.

இது அந்த மூன்றாம் தலைமுறைப் பெயரனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்போதோ நம் பாட்டன் செய்த தவறுக்காக நாம் இன்னும் திருட்டுப்பட்டப் பெயருடனே வாழ்கிறோமே என்று மிகவும் வருந்தினான். இதைச் சரிசெய்ய வேண்டும் என்று அனுதினமும் யோசித்துக் கொண்டே இருந்தான்.

ஒருநாள் அவன் ஊருக்கு ஒரு ஞானி ஒருவர் வந்தார்.
அவரிடம் சென்று முறையிட்டால் ஏதாவது வழிகிடைக்கும் என்று நம்பி அவரிடம் சென்றான்.

தனது வருத்தங்களைப் பகிர்ந்தான்.
அவர் இவனிடம் “உன்னால் தினமும் 20 பேருக்கு சோறு போட முடியுமா?” என்று கேட்டார்.

“20 இல்லை சாமி 50 பேருக்குக் கூட நான் உணவளிக்கத் தயார். எனக்கு அந்தப் பட்டப் பெயர் நீங்கினால் போதும்” என்றான்.

“சரிப்பா, நாளை முதல் தினமும் 50 பேருக்கு உணவிடு. இந்தப் பெயர் மறைந்து விடும்” என்று கூறினார் முனிவர்.

முனிவர் சொன்னதைப் போல அவனும் தினசரி 50 பேருக்கு உணவு இலவசம் என்று அறிவிக்கப் பலரும் வந்து பசியாறினர்.

நாள்போக்கில் அந்த வீட்டுக்கான அடையாளம், முழுப்பபூசணிக்காயைத் திருடிய வீடு என்பதிலிருந்து மாறி, தினசரி அன்னதானம் நடக்கும் வீடு என்றானது.

இதுதான் முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைந்த கதை.

நம் ஆட்கள் தமக்கு தேவையான போக்கில் இதை மாற்றி வைத்துள்ளனர்.

ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன், என்பதை

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று மாற்றியது போல, பல சொல்லாடல்களும் இங்கே மாறித்தான் கிடக்கின்றன.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.