மாதா, பிதா, குரு, தெய்வம்.
ஒரு மனிதனுக்கு தெய்வம் துணை நிற்காவிட்டாலும், மாதா, பிதா மற்றும் குரு ஆகியோர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
சொல்லப்போனால் பலரது வாழ்வில் பல நேரங்களில் இந்த மூவரும் தான் தெய்வமாக நின்று வாழ்வைச் சிறப்பிப்பவர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பின் போது போதித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் தான். அதிலும் பாடம் மட்டும் நடத்தாமல் சற்றுக் கூடுதலாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு நெருங்கிப் பழகும் ஆசிரியர்கள் என்றால் கூடுதல் சிறப்பு தான்.
அப்படி பள்ளி மற்றும் கல்லூரியில் போதித்த ஆசிரியர்களின் மறைவுச் செய்தி என்பது, தானும் வளர்ந்து வயதாகி, தனது இளமையும் வாழ்வும் சிறிது சிறிதாக முதுமையை நோக்கி நகர்கிறது என்பதையும், இனிமையான அந்த பழைய நாட்களைத் தாண்டி நாம் எவ்வளவு தூரம் பயணித்து வந்துவிட்டோம் என்பதையும் உணர்த்தக்கூடிய முள் போன்றது.
இன்று திடீரென அப்படி ஒரு துக்கச் செய்தியைக் கடந்தாக வேண்டிய கட்டாயம். எங்கள் பள்ளியில் மேல்நிலை வகுப்பு இயற்பியல் பாட ஆசிரியர், இனிமையான ஆசிரியர் காலமானார் என்ற செய்தி.
இன்றும் மிகப் பசுமையான ஞாபகங்கள் நெஞ்சிலிருந்து நீங்கவில்லை.
“என்ன அருண், டெய்ய்ய்லி லேட்டா வரடா. ஏன் டிபன் சாப்ட்டு மறுபடியும் தூங்கிடுவியா?” என்று என்னை ஒரு நாளும் கண்டிக்காமல் வகுப்பில் அனுமதித்ததற்காக ஒரு நாள் எங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் பிரச்சினையை சந்தித்தார்.
தாமதமாக வரும் மாணவர்களை இவர் கண்டிப்பதில்லை என்று.
“உங்களுக்காக நான் சப்போர்ட் பண்ணி பேசுவேன் டா, எனக்கு ஆம்பள பசங்க இல்ல, நீங்கலாம் எனக்குப் பசங்க மாதிரி” என்று அவர் சொன்ன வாக்கியம் எங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த வரம். கடவுளின் நேரடி வரம்.
நான் திருமணப் பத்திரிக்கை கொண்டு சேர்த்த போது, “என்னடா, அருண் நீ நல்லா படிக்கிற பையன், ஒரு கெசர்ட்டர்டு ஆபிசரா வருவனு பாத்தேன், இப்படி பிரைவேட் காலேஜ் ல வாத்தியாருனு வந்து நிக்கிறியே?
சரி வாத்தியாரா இருந்துக்கிட்டு நானே வாத்தியார கொற சொல்லக்கூடாது.” என்று அவர் என் மீது கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் காட்டிய அதே அக்கறையும் அன்பும், உலகின் ஆசிரியர் தொழில் செய்பவர்களைத் தவிர, வேறு யாருக்கும் மாற்றான் பிள்ளைகள் மீது அப்படி ஒரு அக்கறை வராது.
எனக்கு நினைவுபட, நான் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்வதற்கான பல காரணங்களில் அவரது கோரிக்கையும் ஒன்று.
12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் ஒரு சில பகுதிகளை வகுப்பில் போதிக்க வேண்டும் என்று அவர் சொன்ன போது, தொலைக்காட்சி வேலை செய்யும் முறை பற்றி நான் வகுப்பு எடுத்தது இன்றும் எனது நினைவிலிருக்கிறது.
அந்த வகுப்பு எடுத்து முடித்த உடன் என்னைக் கேலி செய்யக் காத்திருந்த தோழிகள், தோழர்கள் உட்பட என் இயற்பியல் ஆசிரியரும் என்னை மனமாரப் பாராட்டி, உற்சாகமாகக் கைதட்டியது எனது ஆசரியர் தொழிலுக்கான உந்துதல்.
அதோடு இல்லாமல் அவர் சொன்ன வார்த்தைகள்,
“அருணே, நீ இன்ஜினியரிங் படிச்சாலும் சரி, மெடிசின் படிச்சாலும் சரி மாஸ்டர் டிகிரி முடிச்சு வாத்தியார் ஆயிடுடா, எனக்காக!”
ஆனால் அவர் என்னை எதிர்பார்த்த உயரத்திற்கு நான் வளரவில்லை.
அதற்காகவும் தான் நான் ஆசிரியர் ஆனேன்.
என்றாவது ஒரு நாள் அவர் பெருமைப்படும் அளவிற்கு வளர்ந்து அவர் முன்னால் மீண்டும் போய் நிற்கலாம் என்றால் இனி அது முடியாது.
ஒரு தந்தையின் இழப்பு எப்படி கொடுமையானதோ, அதுபோலத் தான் வாழ்வில் வழிகாட்டியான ஆசிரியர்களின் இழப்பும் வலி மிகுந்தது.
இழப்பு என்பது பழகிப் போனதால், இதுவும் மனதில் வைத்துப் புதைக்கப்பட்டது.
இதுவும் கடந்து விட்டது.
நாம் இளமையின் பாதையிலிருந்து, முதுமையின் பாதை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.
குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகள் சிறிது சிறிதாக மனதிலிருந்தும், நினைவிலிருந்தும் வாழ்வில் இணைந்திருந்த மனிதர்களிலிருந்தும் நீங்கி வருகிறது.
நான் இன்னொரு முறை தொலைக்காட்சி பற்றி வகுப்பெடுக்கத் தயார், ஆனால் கைதட்டி உற்சாகம் செய்ய என் ஆசிரியர் இன்றில்லை.
ஒருவேளை நான் என் வாழ்வில் எதையாவது சாதித்தால் பெருமையோடு கொண்டு சமர்ப்பிக்க அவர் பாதங்கள் இல்லை. இந்த நேரத்தில் அவை நெருப்பில் பொசுங்கியிருக்கும்.
பிறந்த ஊர் வேறு, பிழைக்கும் ஊர் வேறு.
இந்தத் தலையெழுத்தால் என் ஆசிரியரின் பாதங்களைத் தொட்டு இறுதி அஞ்சலி செலுத்தவும் வாய்ப்பில்லை.
இத்தனை தகவல் பரிமாற்றம் நிகழும் இத்தகைய காலத்தில் கூட, தாமதம். தகவல் கிடைக்கும் தூரத்தைத் தாண்டியும் வெளியே வந்து விட்டோம் என்று நினைக்கும்போது தான் மனம் இன்னும் வேதனை அடைகிறது.
இந்தக் கட்டுரை எனது சொந்த நினைவுகளுக்கும், உணர்ச்சிகளுக்குமானது.
எனது ஆசிரியரின் இறுதி அஞ்சலிக்கானது.
ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் என்பவர் தனிச்சிறப்பு மிக்கவர் தான்.
ஆகவே எனது இந்த உணர்ச்சி பொதுப்படையாகவும் புரிந்துணரப்படும் என்று நம்புகிறேன்.
ஐயா, அடுத்த ஜென்மம் மட்டுமல்ல, எத்தனை ஜெனமம் எடுத்தாலும், மீண்டும் மீண்டும் ஆசிரியராகவே வாருமய்யா.
உம்மைப்போல சிறந்த ஆசிரியர்கள் உலகிற்கு அவசியம்.
இளைப்பாறிப் போய் வாரும் என் தெய்வமே!