ஒரு சிறுகதை.
ஒரு கானசபாவில் ஒரு வித்துவான் கச்சேரி செய்வதற்காக அனுமதி கேட்கிறார்.
அவர் முன் பின் தெரியாத நபர் என்பதால் கானசபா மேலாளர் சிறிது யோசிக்கிறார்.
ஆனால் அவரோ ஆள் பளபளவென, சிஷய்ர்கள் புடைசூழ வந்திருப்பதால் ஒரு சின்ன நம்பிக்கையும் அந்த மேலாளருக்கு இருந்தது.
அவரது சிஷ்யர்களும் அவரைப்பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை பேச சரி, என்று கச்சேரிக்கு வாய்ப்பளித்து விட்டார்.
கச்சேரி அன்று அந்த வித்துவான் கச்சேரியை ஆரம்பம் செய்தார்.
நேரம் ஆக, ஆக கச்சேரிக்கு வந்த மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வித்துவான் ஒரு அரைகுறை, ஒழுங்காகப் பாட வராது முறையாக இசை பயிலாதவர் என்பது அந்த மேலாளாருக்கு அப்போது தான் புரிந்தது.
நாம் தெரியாமல் தவறிழைத்து விட்டோம் என்று மனம் வருந்தினார்.
சரி போனால் போகட்டும், இவனைப் பாடவிட்டால் கான சபா கலவர சபா ஆகிவிடும். இவனை நிறுத்திவிட்டு, நம் வழக்கமான வித்துவான்களைப் பாடச் சொல்லி இன்றைய நாளை சமாளித்து விடலாம் என்று சிந்தித்து இவனிடம் செல்கிறார்.
“ஐயா, நீங்கள் வாசித்தது, பாடியது போதும், தயவு செய்து முடித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அந்த அரைகுறை வித்துவானோ, “கச்சேரிக்கு சன்மானம் 5000 ரூ பேசியிருந்தோமே?” என்றார்.
“5000 ரூ தானே, கீழே வாங்க, உடனே தருகிறேன், தயவுசெய்து கச்சேரியை நிறுத்துங்கள்” என்று மேலாளர் சொல்ல, “ஐயா, நான் முழுதாகக் கச்சேரி செய்வதற்குத் தான் 5000 ரூ சன்மானம்.
இப்படிப் பாதியில் எழுந்து வரச் சொன்னீர்கள் என்றால் 15000 தர வேண்டும்” என்றான்.
அந்த மேலாளருக்கு வேறு வழியில்லை. “என் சொத்துக்களை விற்றாவது உனக்குப் பணம் தருகிறேன், இனி நீ வாழ்க்கையில் எந்தக் கச்சேரியும் செஞ்சிடாத” என்று கெஞ்சி அந்த வித்துவானை நிறுத்தினார்.
இது வேடிக்கையாக சொல்லப்பட்ட கதை.
அதாவது இப்போது இந்த வித்துவான் பணம் சம்பாதித்து விட்டான் என்பதற்காக அவன் மிகப்பெரிய அருமையான வித்துவான் என்று சொல்லி விட இயலாது. அவனிடம் பணம் சம்பாதிப்பதற்கான திறமை மட்டும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அன்றைய சூழல், அவனுக்கு சாதகமாக அமைந்திருந்தது. பணம் சம்பாதித்து விட்டான்.
இதேதான் இன்றைய நிலையும்.
பணம் சம்பாதிக்கும் ஆட்கள், அறிவாளிகள் என்றும், உயர்ந்தவர்கள் என்றும் அர்த்தமாகி விடாது.
பணம் சாம்பாதிப்பதற்கான சூழலுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டவர்கள், அதாவது பணம் சம்பாதிக்கும் திறமையை வெளிப்படுத்தியவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.
மனிதனின் வசதியை வைத்து, அவனது சம்பாத்தியத்தை வைத்து அறிவாளி, முட்டாள், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை முடிவு செய்ய இயலாது என்பதை உணர்த்தும் வேடிக்கையான கதை.
இது ஒரு சினிமா பாடலிலும் வந்திருந்தது.
“புத்தி உள்ள மனிதரெல்லாம், வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.”
நேர்மையாக, முறையாக இசை பயின்று, நல்லவிதமாக கச்சேரி செய்யும் வித்துவான்களுக்கும் கைதட்டல்களையும், பாராட்டுகளையும் தாண்டி பணம் சம்பாதிக்க ஒரு சூழலைக் காலம் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும்…
நம்பிக்கை ஒன்றே வாழ்வின் ஆதாரம்.