சமுதாய அக்கறையும் பொறுப்பும் உள்ள ஆட்கள், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக மிகப் பிரபலமான ஆட்கள், நேரத்திற்கு ஏற்றாற் போல, வேடமிட்டால் அது அவர்ளின் மீதான மரியாதையை காலி செய்து விடும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினரால், விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல நடிகர்களும் எந்த விதக் கருத்தும் தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறத்தப்பட்டு கொல்லப்பட்ட போது பொதுவெளியில் கொந்தளித்து கண்டனங்களும், வருத்தங்களும் தெரிவித்த பல நடிகர்களும் இந்த சம்பவத்தில் வாயே திறக்கவில்லை.
காரணம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவர்களுக்கு நட்புறவுள்ள கட்சி.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும். குறைந்தபட்சம், நடந்த சம்பவம் மிக வருத்தமளிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வரின் துரித செயலைப் பாராட்டுகிறேன் என்று ஏதாவது பூசியும் பூசாமலும் பேசியிருந்தால் கூட, அவர்கள் மீது பழி வந்திருக்காது.
ஆனால் இந்த சம்பவம் ஏதோ செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்ததைப் போலவும், தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போலவும் அமைதி காப்பது தவறு.
சமூக வலைத்தளங்களில் பேசப்படுவது போல, நாளைக்கே இவர்கள் சமூக அக்கறை என்று படம் எடுத்துக் கொண்டு மக்களிடம் வந்தால் யார் நம்புவார்கள் இவர்களை?
அப்படி இல்லை என்றால், நடித்தோமா, பணம் சம்பாதித்தோமா, தன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தோமா என்று எதிலும் மூக்கை நுழைக்காமல் இருந்து விட வேண்டும். ஒரு நேரம் பொங்கி எழுந்து கருத்து போசுவது, சமூக சிந்தனை பேசுவது, பொதுமக்களுக்கு அறிவுரை சொல்வதும், இன்னொரு நேரம், தனக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாததைப் போல மௌனம் காப்பதும் இவர்களுக்குப் பச்சோந்தி என்ற பெயரைத் தவிர வேறு எதைத் தரும்.




