Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பெண் பிள்ளைகளைப் பெற்றோரே!

அலட்சியத்தாலும், ஆறுதல் சொல்லி சொல்லி அரைகுறையாக கவனிக்காமல் விட்டதாலும் துடிதுடித்துப் போயிருக்கிறது இளம்பெண்ணின் உயிர்.

நாம் அனைவரும் கேள்விப்படும் அவிநாசி இளம்பெண் தற்கொலை பற்றியது தான் இந்தப் பதிவு.

பொதுவாகவே ஒரு பெண் திருமணமாகி மாமியார் வீட்டுக்குச் செல்லும் போது ஆரம்ப காலங்களில் அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் ஒத்து வராமல், சில பிரச்சினைகள் வருவது இயல்பு தான்.

அதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தால், அவர்கள் சொல்லும் வார்த்தை.
“அது அப்படித் தானம்மா.
கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும் சற்றுப் பொறுத்துக்கொள்” என்பது.

இந்தப் பெண்ணின் கதையிலும் அதேதான் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பொறுமையின் அளவும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் ஆழமும்.

ஒரு புதிய இடத்தில், ஒரு சில, சின்ன சின்ன பிரச்சினைகள் வந்தால், அதை ஆறுதல் கூறி, வாழ்க்கையை வழிநடத்த வழிகாட்டலாம்.

ஆனால் மனிதத் தன்மையில்லாமல், வரதட்சணைக்காகவோ அல்லது வேறு ஏதாவது விதத்தில் அந்தப் பெண்ணுக்கு விரும்பத்தகாத வகையில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பங்களைத் தரும்போது அதை அந்தப் பெண்ணின் பெற்றோரே புரிந்து கொள்ள முடியாவிட்டால், பிறகு யாரால் முடியும்.

ஆரம்பத்திலேயே அந்தப் பெண் புகாரளித்த போதே அவளைத் தனியாக அழைத்துத் தீர விசாரித்து, அந்தப் பெண்ணை இந்த வீட்டிலிருந்து மீட்டிருந்தால் இன்று தனக்கான வேறொரு நிம்மதியான வாழ்வைத் தேர்ந்தெடுத்து புதியதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

உலகம் என்ன பேசப்போகிறது.
அத்தனை பணம் செலவு பண்ணி, நிறைய வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சா, ஆனா பொண்ணு வாழாவெட்டியா இருக்குது என்று.

இந்த வார்த்தைகளுக்கு பயந்து தான், அந்தப் பெற்றோர் இந்தப் பெண்ணை அரைகுறையாக சமாதானப்படுத்தி அங்கேயே விட்டிருக்கின்றனர்.

பாவம், தன்னைப் பெற்றவர்கள் கூட தனது நிலையை உணராத காரணத்தால், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தனக்கான முடிவைத் தேடிக்கொண்டது அந்த அப்பாவி ஜீவன்.

பெற்றோர்களே உஷார். கௌரவத்திற்கு பல லட்சம், ஏன் கோடி கூட கொடுத்துத் திருமணம் நிகழ்த்தி விடலாம். ஆனால் அந்தப் பெண்ணின் கணவனாக வரும் ஆளின் குணாதிசயத்தை நீங்கள் பணத்தால் வாங்க முடியாது.

வாங்கிய பின், அதை சமாளிக்க இயலாவிட்டால், சகித்துக் கொள்ள இயலாவிட்டால், அதோடு வாழப் பழகிக் கொள் என்று வற்புறுத்தும் உரிமையும் உங்களுக்குக் கிடையாது.

சின்ன சின்ன விஷயங்களுக்குச் சொல்ல வேண்டிய சமாதானத்தை, மிகப் பெரிய விஷயங்களில் செய்யக் கூடாது.

இந்தப் பாடம் நம் அனைவருக்குமானது.

இதற்கென ஒரு அர்த்தம் இருக்கட்டும்.

இனி இதுமாதிரி விஷயங்களில் மாற்றம் ஏற்படட்டும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.