Categories
அரசியல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

2026 ஐ நோக்கி – கடவுளின் பயணம்

முருகப் பெருமான் அரசியல் என்பது சமீப காலத்தில் தான் பெரிதாக உருவெடுத்து வருகிறது.

நாம் தமிழர் முப்பாட்டன் முருகனுக்குக் காவடி என்று காவடி தூக்கிய பிறகு, ராமரின் பிள்ளைகளான பாஜக தொண்டர்களும், விநாயகரைக் கொண்டாடுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக முருகனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் அசுர வளர்ச்சியும், இந்தத் திடீர் முருக பக்தியைப் பெரிதுபடுத்த வெகுவாக உதவியது.

முருகர் சம்பந்தமான குறுஞ்செய்திகள், படங்கள், உருவாக்கப்பட்ட காணொளிகள் என்று முருகா முருகா என்று பட்ட துவங்கி விட்டனர்.

இந்த முருக வழிபாடு மதவாத சக்திகளுக்கு எப்படி அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தார்களோ, அதே பாணியில் நடப்பில் ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கும் மகத்தான பெயரையும் ஆமோக ஆதரவைப் பெற்றுத் தருவது உண்மை.

திமுக வின் ஒரு சில மூத்த அமைச்சர்கள் வாய்க்கு வந்தவற்றை எல்லாம் உளறிக் கொட்டி மக்களிடமும் இணைய வாசிகளிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டு கட்சி பெயரையும் கெடுத்தாலும் கூட, அன்பில் மகேஷ், மா.சு, சேகர் பாபு போன்றோர் தங்களது பணிகளைச் சீரோடும் சிறப்போடும் செய்து கட்சியின் தூண்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது எதிர்கட்சிகள் எந்த பாலில் கோல் அடிக்க முயற்சி செய்கிறார்களோ, அதை தனக்கு சாதகமாக்கும் தந்திரத்தை திமுக செய்து விட்டது.
பெரியாரின் வழி, கடவுள் இல்லை என்பவர்களும் திமுக வின் அபிமானிகள் தான்.

இந்தப்பக்கம் பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் என்று கும்பாபிஷேகங்களும், சிவராத்திரி சிறப்பு பூஜைகளும், ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு இலவச சுற்றுலா என்று, மதவாத கட்சிகள் மார்க் வாங்க நினைக்கும் ஆன்மீகத் தொண்டர்களிடமும், திமுக நல்மதிப்பைப் பெற்று நிற்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்படி நமது மதவாத அரசியலையும் திமுக கும்பாபிஷேகம் செய்து விடுகிறதே என்னதான் செய்வது? முருகன் 2026 தேர்தலில் பாஜக விற்கு தான் ஆதரவு என்பதை மக்களுக்கு எப்படி உணர்த்துவது என்பதை யூகித்த பாஜக பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை நிகழ்த்தி முருகனை அவர்கள் பக்கம் கடத்தி வைத்தது.

அடுத்தது திருச்செந்தூர் கும்பாபிஷேகம் கலகலவென நிகழ்ந்து, காவலர் ஒருவர் திருப்புகழ் வாய்மணக்கப் பாட, செயற்கை நுண்ணறிவில் மயில் கடலில் வேலைப் போட, இப்படிப் பரவசமூட்டும் காணொளிகளின் திகைப்பிலும், கும்பாபிஷேகம் முடித்த 48 நாளுக்குள் முருக தரிசனம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் மக்கள் திருச்செந்தூர் நோக்கி முண்டியடித்து மாநாட்டை மறந்து விட்டனர்.

இப்போதைக்கு திருச்செந்தூரில் பெரும் அவதிப்பட்டாலும், கும்பாபிஷேகம் செய்தது என்னவோ திமுக தானே! கொறையோ குத்தமோ இப்போதைக்கு முருகன் திமுக பக்கம் தான்.

இந்த முருகன் கதை ரொம்ப நாளைக்கு ஓடாது என்று புரிந்து கொண்ட பாஜக, பிரதமர் வந்த நேரத்தில் இன்னொரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இராஜ இராஜ சோழன்.

அதைத் தொடர்ந்து விவாதிக்கலாம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.