விநாயகர் சதுர்த்தி ஆனது நேற்றைய தினம் கோலாகலமாக ஊரெங்கிலும் கொண்டாடப்பட்டது.
மக்களிடம் பக்தி நன்றாகப் பரவுகினதே ஒழிய ஒழுக்கம் வளர்கிறதா என்றால் இல்லை.
எதிர் விளைவாகத் தான் இருக்கின்றது.
மனிதனிடம் கடவுள் பக்தி என்பது எதற்காக வளர்க்கப்பட வேண்டும் என்றால், ஒழுக்கம் வளர்வதற்காகவும், சக ஜீவன்களிடம் அன்பு காட்டுவதற்காகவும் தான்.
ஆனால் பக்தி வளர்கிறதே ஒழிய ஒழுக்கம் தேய்ந்து கொண்டே தான் போகிறது.
பக்தி என்பது போட்டி மனப்பான்மையில் தான் வளர்கிறது .
ஒழுக்கம் குறைவது வருத்தம் தான் என்றாலும், பக்தி என்ற பெயரில் தாங்கள் கும்பிடும் கடவுளையே கொச்சைப்படுத்தும் சம்பவங்களும் நிகழ்வது வேதனை தான்.
அந்தக் காலங்களில் பல வருட காலம் முயன்று பலரும் கடினமாக உழைத்து , ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாங்கும் விதமாக பிரம்மாண்டமாக கோவில்களை எழுப்பி அதில் கடவுளை வைத்தார்கள்.
கடவுளின் மீதான பக்தி மற்றும் மரியாதை காரணமாக.
ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம்?
அவசர அடி பக்தி, அவசர அடி பக்தி.
100 ரூ வாய்ப்பாக இருந்தால், 100 ரூ வரிசை, அல்லது 300 ரூ வரிசை அதுவும் கூட்டமாக இருந்தால் 500 , 1000 என்று நம்மால் எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு பணம் கொடுத்து, திரையில் அரைகுறையாக ஆடும் நாயகன் நாயகிகளைக் காசு கொடுத்துப் பார்ப்பதுபோல, கடவுளையும் காசு கொடுத்துப் பார்க்கிறோம்
ஏனென்றால் இலவச தரிசனத்தில் வரிசையில் நின்று தரிசனம் செய்ய நேரமோ , பொறுமையோ இல்லை.
அப்படி இல்லை என்றால் எதற்காகக் கோவிலுக்குப் போகிறோம்?
அதுதான் எனக்கும் புரியவில்லை.
எனக்குத் தெரிந்து சபரிமலையில் மட்டுமே கடவுளை காசு கொடுக்காமல், ஒருவரைத் தாண்டி ஒருவர் முந்திச் செல்லாமல், வரிசையாக ஒருவர் பின் ஒருவராக தரிசிப்பதாக நினைக்கிறேன்.
அதிலும் பொறுமை இல்லாமல் போன சில ஆண்டுகளில் சிலர் பம்பையிலேயே மாலையைக் கழற்றிவிட்டுத் திரும்பி வந்த செய்தியும் அறிந்தோம்.
சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து இடைத்தரகர்கள் மூலமாக விஐபி தரிசன வரிசைக்கான வாய்ப்புக் கிடைக்கும் என்று ஏமாந்திருக்கின்றனர்.
இடைத்தரகர் மூலமாகக் கடவுளை தரிசிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு விளங்கவில்லை.
இது கடவுளை கொச்சைப்படுத்துவதாக இல்லாமல், பக்தியின் காரணமாக என்று சொன்னால் அது நமது அறிவீனத்தைத் தான் குறிக்கும்.
முதலில் கடவுளை தரிசிக்க சிறப்பு வரிசை, பணம் கொடுத்து தரிசனம் என்பதையெல்லாம் ஒழித்து விட்டு, எவ்வளவு நேரமானாலும் கடவுளை வரிசையில் காத்திருந்து தான் தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் இங்கே பாதி பேரின் பக்தியும், கோவில்களில் கூட்டமும் படிப்படியாகக் காணாமல் போய்விடும்.
பணம் வாங்குவதற்கு பதிலாக ஒரு நாளைக்கு இத்தனை பேருக்கு தான் தரிசனம், இத்தனை மணிக்கி தரிசனம் என்று முறைபடுத்தப்பட்ட திட்டத்தைக் கொண்டு வரலாம்.
அதைவிடுத்து காசுக்கு விற்கப்படும் வியாபாரப் பொருளாகக் கடவுளை மாற்றுவது பக்திக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் இழுக்கு.
இப்படி இடைத்தரகர் மூலமாகக் கடவுளை விலைக்கு வாங்கும் பண்பும் பணத்தை வைத்து நிர்ணயிக்கப்படும் பக்தியும் ஒழிய வேண்டும்
உண்மையான ஒப்பழுக்கில்லாத பரிசுத்தாமான, பக்தி வளர வேண்டும்
அதோடு ஒழுக்கம் தானாகவே வளரும்.