Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

ஆகஸ்ட் 22, சென்னை தினம்!

ஆகஸ்ட் 22, சென்னைக்குப் பிறந்தநாள்.

சொந்த ஊர் தான் சொர்க்கம், சொந்த ஊரைத்தாண்டி வேறென்ன பந்தம் இருந்துவிடப் போகிறது வாழ்வில் என்ற கதையெல்லாம் சென்னைக்கு எடுபடாது.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலுள்ள எல்லா ஊர்களிலும் உள்ள பெரும்பாலான ஆட்களுக்கு சென்னையோடு ஒரு பந்தம் இல்லாமல் இருக்காது.

எனக்கும் அப்படித்தான். சிறு வயதில் மெட்ராஸ் என்ற ஊர் இருப்பதும், அந்த ஊருக்கு இரவு பேருந்தில் ஏறினால், காலையில் போய் தான் இறங்கலாம் என்றும், அங்கு சென்று நம்ம தெரு ஆட்கள் கடை வைத்து நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதாகவும் சொல்லக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

நான் எட்டாவது வகுப்புப் படிக்கும் வரை சென்னையைக் காண எனக்கு வாய்ப்பு அமையவில்லை. முதன்முறையாக எட்டாவது பள்ளி விடுமுறையில் தான் ஒரு சுற்றுலா செல்லும் போது சென்னையைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

வடபழனி முருகன், வடகறியும் இட்லியும், எம்.ஜி.ஆர் வீடு என்று பார்த்து விட்டு மேல்மருவத்தூர் விரைந்து விட்டோம். அன்று என்னைக் கவர்ந்தது வடகறி தான்.

அதன்பிறகு மீண்டும் எனக்கு சென்னை என்பது மிக தூரமாகிவிட்டது.

நான் கல்லூரியில் இணையும் வரை சென்னையோடு இருந்த பந்தம் வெறும் தொலைபேசி உரையாடல்ஙளாகவே இருந்தன. அதன்பிறகு தான் சென்னையோடு எனக்கு ஒரு உறவாடல் ஏற்பட்டது.

சொந்த ஊரில் கிட்டத்தட்ட 15 வருடம் வளர்ந்ததற்கே சொந்த ஊரென்ற உணர்வு என்றால், நான் சென்னை வந்து வாழத் துவங்கியும் 15 வருடம் ஆகிவிட்டது.
இன்னும் எனது பணி ஓய்வு காலம் வரை வாழ்க்கை இங்கு தான் நகரும் என்பது எழுதப்படாத விதி.

அப்படி கணக்கிடும் போது சொந்த ஊரை விட என்னை அதிகம் ஊட்டி வளர்த்த ஊர் சென்னை தான்.

இது போல சென்னைக்கும் நமக்கும் என்று தமிழ்நாட்டில் பலருக்கும் பல உறவுகளும் பந்தங்களும் இருக்கலாம்.

ஊராடா இது, என்று துவங்கி சான்ஸே இல்ல, சென்னையைப்போல ஒரு ஊரே இல்ல என்று சொல்லும் வரை ஒரு பெரிய வேறுபாட்டுப் போட்டியும் இங்கு வசிப்பவர்களிடையே உண்டு.
என்ன ஒரு அழகு என்றால், இந்த ஊரை வசைபாடுபவனும் இங்கே பிழைத்துக் கிடப்பவனாகத்தான் இருப்பான்.

அப்படிப்பட்ட சென்னையின் பசுமயயான வராலறு பற்றி இன்று ஒரு தலையங்கம் படிக்க நேர்ந்தது.

நமது தொடர்ச்சியான குடியேற்றமும், நகரமயமாக்கலும் சென்னையை அதன் உண்மையான தன்மையிலிருந்து மாற்றி இன்று கான்கிரீட் சுடுகாடாக மாற்றி வைத்திருக்கிறது.

ஓமந்தூரார் தோட்டம்?

தோட்டம் எங்கே?

திருவல்லிக்கேனி,
அல்லி மலர்கள் எங்கே?

அடையாறு, அடை போன்ற சுவை உடைய ஆற்று நீர் எங்கே?

பனையூர்- பனைகள் எங்கே?

இன்று ஆளுநர் மாளிகையும், அரசு பல்கலைக்கழக வளாகமும், மத்திய கல்வி நிறுவனமும் அமைந்துள்ள இடமோ முழுக்காடு. ஆனால் இப்போது அதன் நிலை?

சில எழுத்தாளர்கள் சென்னை பற்றி எழுதும்போது வீட்டினருகே கீரிப்பிள்ளைகளை சர்வ சாதாரணமாகப் பார்க்க இயலும் என்று எழுதயிருக்கிறார்கள்.

எல்லாம் சரிதான்.
என்ன செய்வது?
மக்கள் குடியேற மரங்கள் காலியானது.

ஆறு சாக்கடையானது.

இதில் யாரைத்தான் குறை சொல்வது?

நாங்க என்னப்பா வேணும்னா இங்க வந்து கெடக்குறோம்? ஊர்ல பொழப்பு இல்ல, படிச்ச படிப்புக்கு இங்க தான் வேலை என்ற பதில்கள் தான் வரப்போகின்றன.

இனியாவது அரசாங்கம், சில விஷயங்களைப் பிரித்தாளலாம். ஐடி காரிடார் எனப்படும் தொழில்நுட்பப் பிரிவு நிறுவனங்கள், உற்பத்தித் தொழிற்சாலைகள் எல்லாம் தமிழ்நாடு முழுக்க இருக்கும் வெவ்வேறு நகரங்களில் பரவலாகத் துவங்கச் செய்யலாம்.

சென்னையில் வசிக்கும் மக்களாகிய நாமும், சுற்றுச் சூழல்சீர்கேடுகளைத் தடுக்க நம்மாலான காரியங்களை மேற்கொள்ளலாம்!

காவாயில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அடைப்பு, கண்ட இடங்களில் குப்பை, இது மாதிரியான சில விஷயங்களை மாற்றிக் கொள்ளலாமே?

அழகான நகரம், அழிவின் விளிம்பில். இதைக் காப்பாற்றுவது நம் கடமை!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.