விடமுடியாத பழக்கங்கள் என்று நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் இருக்கலாம்.
அவை நல்ல பழக்கமா அல்லது தேவையில்லாத ஒன்றா, பணம் விரயமாக்கும் செயலா என்று கவலையில்லாமல் நாமும் அதைப் பின்தொடர்வோம்.
யார் எத்தனை முறை சொன்னாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
சிலருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் முன்பு இருந்தது.
சிலருக்கு குதிரைப் பந்தயம்.
இதெல்லாம் பெரிய ரகம்.
இதற்கடுத்த ரகமும் உண்டு..
காலையில் காபி குடிக்காமல் விடியாது.
நாளிதழ் இல்லாத நாளில்லை .
இது மாதிரி சிலருக்குப் பழக்கம்.
இன்னும் சிலவும் உண்டு
வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே சாம்பார்.
இப்படி நாம் ஏன் எதற்கு என்று தெரியாமலே சுழற்சி முறையில் ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது நாளில் ஒரு பழக்கத்தைப் பின்பற்றத் துவங்கி அதைத் தொடர்ந்து விடாமல் செய்வோம்.
அப்படி இன்னும் பலரும் பின்பற்றும் பழக்கம் , ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல அசைவ சமையல் சாப்பாடு என்பது.
இதையெல்லாம் நாம் ஏன் எதற்காக செய்கிறோம்?
ஞாயிற்றுக் கிழமை அசைவம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, அவசியமோ இல்லை.
சொல்லப்போனால் அதை சீர்படுத்தினால் பணம் மிச்சம் தான்.
ஆனால் நாம் எளிதில் அதை விட்டுக்கொடுப்போமா?
அப்படித்தான் எனது மற்றும் எனது நண்பர் வட்டாரத்தில் ஒரு சிறிய பழக்கம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் சினிமா செல்லும் பழக்கம்.
வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமை என்றால் நாங்கள் நிச்சயம் 40-45 ஞாயிற்றுக்கிழமை படங்கள் பார்த்திருப்போம்..
இன்றளவும் அந்தப்பழக்கம் மாறவில்லை.
2005-2006 களில் துவங்கிய பழக்கம்.
இல்லை இல்லை அது நண்பர்பளோடு அதற்கு முன்பு குடும்ப சகிதம், தெருவில் உள்ள உறவுகளோடு ஊரில் உள்ள திரையரங்கில் இதே ஞாயிற்றுக்கிழமை கூத்து நிகழ்ந்தது உண்மைதான்.
அதன்பிறகு ஊரிலுள்ள திரையரங்கு மூடப்பட்ட போது மளிகைக்கடை அண்ணன் மூலமாக வார வாரம் பக்கத்து ஊருக்குப் புதுப்படம் பார்க்கச் செல்லும் பழக்கம் ஒட்டிக் கொண்டது.
அதென்னப்பா வார வாரம் படம்? வார வாரம் படம் பாக்காட்டி ஆகாதா என்ற கேள்வி வராமல் இல்லை.
ஆனால் அதற்கு அவர் கூறும் ஒரே பதில், தினமும் காலை 7 மணிக்கு கடை திறக்கிறேன்.
இரவு 11 மணிக்கு வீடு சென்று உணவருந்தி உறங்கிவிடுவேன்.
நான் பகல் வெளிச்சத்தில் வெளியே வர வாய்ப்பிருக்கும் ஒரு நாள் ஞாயிறு மட்டும் தான்
அந்த நாளும் , நான் வீட்டில் தங்கினால், அடுத்த நாள் வேலை சம்பந்தாமகவோ, அல்லது முந்தைய நாள் என்ன நடந்தது என்ற பேச்சு தான் எழும்.
அதற்காகத் தான் இந்த மாய உலகிற்குள் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன் என்று சொல்வார்.
உண்மைதான் அவரின் வலி புரியாவிட்டாலும் , அந்த மாய உலகம் தந்த குதூகலம் புரிந்தது.ஒரு வாரம் வேலை தந்த நினைவுகளை இந்த 3 மணி நேர மாய உலகம் மாற்றி விடுகிறது.
நிறைய பேர் என்னிடம் கேட்பது உண்டு.
உனக்கென்ன வியாதியா?
வாரம் வாரம் படத்துக்குப் போறது?
இது வியாதி அல்ல.
மருந்து!