சில கதைகளை வாசித்தால் அது நம் மனதிலிருந்து என்றுமே நீங்குவதில்லை.
அதோடு மனதில் ஒரு சின்ன தாக்கத்தையும் ஏற்படுத்தும். அப்படி நான் வாசித்த ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
கதை கூட அல்ல, ஒரு சிறு துணுக்கு தான்.
ஆனால் நறுக்கென மண்டையில் குட்டும் துணுக்கு.
பரபரப்பாக சினிமா சூட்டிங் நிகழ்ந்தது.
ஒரு தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்கள் தங்களது நியாயமான கூலிக்காகப் போராடும் காட்சி அது.
தொழிலாளியான கதாநாயகன், காரில் வந்திறங்கும் முதலாளியிடம், வயித்துப்பசி பட்டினி என்று கெஞ்சி நியாயமான கூலி வேண்டுமென போராடுவது போல, நடித்து முடித்த உடனே, தனது விலையுயர்ந்த சொகுசான மகிழுந்தில் கிளம்பி விடுகிறார்.
முதலாளியாக நடித்த குணசித்திர கதாபாத்திரம் அன்றைய தினம் தனது கூலிக்காக கைகட்டி வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
இவ்வாறாக அந்தக் கதை முடிந்தது.
உண்மைதான், தொழிற்சங்கம், கூலி, கால் வயித்துக் கஞ்சி என்று நடிக்கும் கதாநாயகன், அந்த நடிப்பை முடித்து விட்டுத்தனது சொகுசுக் காரில் ஏறி சொகுசு பங்களாவில் சென்று தூங்கி விடுகிறார்.
சினிமா படப்பிடிப்பில் விளக்குப் பிடித்தவர்கள், அடிமட்ட உழைப்பாளர்கள் தங்கள் வேலைக்கான கூலியை எதிர்பார்த்து முதலாளியிடம் கைகட்டி நிற்கிறது.
மக்களிடம் பாராட்டுப் பெறுவது என்னவோ அந்தப் பணக்கார நடிகர் தான்.
இதே இன்றளவும் ஒத்துப் போகிறது.
கூலி திரைப்படத்தில் ஒரு வசனம் “வெறும் பணம்” இந்தாம்மா இது எனக்கு வேணாம்.
அதேமாதிரி சரக்கு அடிக்காதீங்க, நான் 30 வருஷத்துக்கு முன்னாடி தினமும் புல் அடிச்சேன் என்று இருபுறமும் தூண்டும் விதமாகவும் வசனம்.
சமீபத்தில் ஒரு நாளிதழில் கருத்துச்சித்திரம் ஒன்றில் பொதுமக்களில் ஒருவர் எழுதிய சித்திரம் இடம்பெற்றிருந்தது.
கண்ணா, காசு பணம் நிம்மதி தராது
கூலி படத்திற்கு முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் விலை 2000 என்று.
சொல்லப்போனால் ரூ.2500 வரை முதல்நாள் டிக்கெட் விற்பனை ஆகி இருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவில், சினிமாவில், மேடைகளில் காசு என்ன காசு, காசு நிம்மதி தராது என்று அவர் பேசிவிடுகிறார். ஆனால் அவரை வைத்து ஆகும் வியாபாரம் பல நூறு கோடி.
இதில் அவருக்கும் கூட பங்கு உண்டு.
பிறகு ஏன் இவ்வாறாகப் பேசுகிறார் என்பது தான் புதிராக உள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் சாதனை, 100-500 ஏன் ஆயிரம் கோடி கூட வசூலித்தது என்று தகவல்கள் வரலாம். அந்தக்காசு எல்லாம் யாருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் தரப்போகிறதோ தெரியவில்லை.
பணம் நிம்மதியைத் தருமோ இல்லையோ தெரியாது.
ஆனால் நிச்சயம் சினிமா டிக்கெட்டைப் பெற்றுத் தரும்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?