பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கணக்கோ அல்லது்கானல் நீரோ? என்ற ஒரு சந்தேகம் ஒவ்வொரு சாமானியனுக்கும் வரலாம்.
உண்மைதான்.
சமீபத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிட்டதட்ட இரண்டு மடங்கு இருப்பதாகவும் வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது இந்த அரசு.
ஆனால் கவனித்துப் பார்த்தால் புரியும்.
ஒரு பாமரனுக்கு, ஒரு வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதனுக்கு, ஏன் பொருளாதாரம் ஓரளவு புரிந்த ஒரு நல்ல படத்த இளைஞனுக்குக் கூட இது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்ததாகத் தெரியவில்லை.
நான் தான் வின்னர் என்று நம்மால் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்களையும் செய்ய முடியவில்லை.
காரணம் ?
காரணம் என்னவென்றால் நாம் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறை அவ்வாறானது.
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி என்று பாடி வைத்ததைப் போல, வளர்ச்சி வளர்ச்சி என்று ஏதோ ஒரு கணக்கு புத்தகத்திலோ, தரவுப் பட்டியலிலோ வளர்ந்து விட்டதாகப் பெருமைப் படுவதில் என்ன மகிழ்ச்சி வந்து விடப் போகிறது?
அப்படியென்றால் பொருளாதார வளர்ச்சி என்பது பொய் கணக்கா? என்ற கேள்வி எழலாம்..
இல்லை. அதைக் கணக்கிடும் முறை தான் சாதாரண மக்களுக்குப் பயனில்லாத வகையைச் சார்ந்தது.
தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான்.
நான் மிகப்பெரிய பொருளாதார வல்லுநர் இல்லை.
அதனால் எனக்குப் புரிந்தமட்டில், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
இரட்டை இலக்க வளர்ச்சி என்பது, நமது உற்பத்தி விகிதம் மற்றும் அதற்கான செலவு விகிதத்தைக் கணக்கில் கொண்டு, உள்நாட்டில் இருந்து எவ்வளவு உற்பத்தி ஆகியிருக்கிறதோ அதை வைத்துப் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு , ஓரகடத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியிலிருந்து சென்ற ஆண்டு ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டாயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டிருந்தால் வளர்ச்சி என்பது இரண்டு மடங்காகத் தானே கணக்கில் வருகிறது.
சரி இப்போது பொருளாதாரம் இருமடங்கு வளர்ந்து விட்டது.
அதற்கான பலன்?
அந்த கார் கம்பெனியில் வேலை செய்யும் சரவணனுக்கும், குமாருக்கும் சம்பளம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்குமா என்ன?
சத்தியமாக இல்லை.
அவர்கள் சென்ற ஆண்டு பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருந்தால் இந்த ஆண்டு பத்தாயிரத்து எட்டு நூறு ரூபாய் வாங்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்த விளக்கம் பொருளாதார வளர்ச்சிபற்றிய 100 சதவீதம் சரியான விளக்கமாக இல்லாமல் இருக்கலாம் .
ஆனால் ஓரளவிற்கு அதைப் புரிந்து்கொள்ள உதவும்.
இப்போது திரும்ப வளர்ச்சிக் கணக்கிற்கு வரலாம்.
நாம் முன்பு சொன்னதைப் போல , பொருளாதார வளர்ச்சியானது உற்பத்திப் பொருட்களை வைத்தே மதிப்பிடப்படுகிறது.
தனிநபர் வருமானம் அதில் கணக்கில் கொள்ளப் படுவதில்லை.
ஒருவேளை தனிநபர் வருமானம் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், அல்லது தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பொருளாதாரம் கணக்கிடப்பட்டால் இந்த மாதிரி இரட்டை இலக்க வளர்ச்சி என்று மார்த்ட்டியிருக்க இயலாது.
உண்மையிலேயே வளர்ச்சி என்றால் சமவிகிதமாக வளர்ந்து அதன் பலன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பலன் தர வேண்டும்.
ஒரு நிறுவனமும் வளர்ந்து அதன் தொழிலாளர்களின் தரமும் உயர்ந்திருந்தால் நாம் ஒவ்வொருவரும் மகிழ்ந்திருக்கலாம், இந்த வளர்ச்சியைக் கண்டு.
ஆனால் இங்கு நடப்பதோ வேறு; பணக்காரர்கள் மேலும் பணம் சாம்பாதிப்பதை வளர்ச்சி என்று பெருமைப்பட்டுக் கொள்ளவோ, மகிழவோ சாதாரண மக்களால் இயலாது.
அதைத்தான் கானல் நீர் என்பார்கள்!