சூடுபிடிக்கிறது களம்.
2026 தேர்தலை நோக்கி யூகங்களையும் கூட்டணியையும் வகுப்பது மட்டுமல்லாது ,தமிழகம் முழுக்கப் பிரச்சாரப் பயணங்களும் ஆங்காங்கே துவங்கி விட்டது.
ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு புறமும், மீட்போம் தமிழகத்தை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தீவிர பிரச்சார முன்னெடுப்பைத் துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சுற்றி எடப்பாடியார் மின்னல் வேகப் பிரச்சாரம் செய்த போது யதார்த்தமாக நாம் எதிரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது.
பணம் கொடுத்து திரட்டப்பட்ட கட்சித் தொண்டர்களைத் தவிர்த்து , ஆங்காங்கே பொதுமக்களும் கனிசமான அளவில் நின்று எடப்பாடியார் பயணத்தையும், பிரச்சாரத்தையும் வேடிக்கை பார்த்தது உண்மைதான்.
அதிமுக பாஜக வுடன் கூட்டணி வைத்ததைத் தவிர அதிமுக விற்கு பெரிய பின்னடைவு எதுவும் இல்லை என்று தான் தோன்றுகிறது.
ஐந்தாண்டுக்கு ஒரு மாற்றுக்கட்சி என்ற ரீதியில் மக்கள் எடப்பாடியாரின் பழைய ஆட்சியை மனதில் கொண்டு பரவாயில்லை, ஒரு ஐந்து வருடம் அவர் மீண்டும் இருந்து பார்க்கட்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பு இருந்தது.
பாஜகவுடன் கூட்டணி என்பதால் அது ஒரு பெரிய அளவில் பாதித்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்தியா முழுக்க பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும் , தென் மாநிலங்களில் அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது போன தேர்தலில் ஆந்திரா , மற்றும் கார்நாடக மாநிலங்களில் மாறியது.
தமிழ்நாட்டிலும் , கேரளாவிலும் மட்டுமே, மக்களின் அரசியல் புரிதல் காரணமாக மதவாதம் இன்னும் நுழையாமல் உள்ளது.
ஆனாலும் பல காரணங்கள், பல வியூகங்கள் மற்றும் கடவுள் பக்தி என்ற போர்வையில் பாஜக இங்கே கொஞ்சம் கொஞ்சமாக நுழைகிறது என்பது மாற்ற முடியாத உண்மை.
கர்ணனின் கைபிடித்து சற்று தங்களை உயர்த்திக் கொண்ட கௌரவர்களைப் போல, அதிமுக என்ற ஆயுதத்தை உபயோகப்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் சிறிது சிறிதாக உள்ளே நுழைகிறது என்பது உண்மை.
சென்ற தேர்தலில் , கோவை தொகுதியில் வானதி அக்கா பக்கா என்று வட இந்தியர்களை வைத்து வெற்றி கண்ட பாஜக, நெல்லையில் சாதி பின்புலத்தை வைத்து நயினார் நாகேந்திரன் அவர்களைக் கேடயமாக்கி வென்ற பாஜக, அண்ணாமலை எனும் பெரிய கேடயத்தை வைத்துத் தமிழ்நாடு முழுக்க எதையாவது சாதித்து விட முயற்சித்தது..அது முழுபலன. அளிக்காத காரணத்தாலும், மேலும். ஒரு சில உட்கட்சி விவகாரங்களினாலும் அந்தக் கேடயம் இப்போது வீசி எறியப்பட்டு கூட்டணி எனும் பலமான ஆயுதம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
பார்க்கலாம்..நாமும் தொடர்ந்து அவ்வப்போது அரசியலுடன் பயணிப்போம்.