திருட்டுகள் பலவிதம், திருடர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.
இன்றைய சூழலில் திருட்டுத்தனம் செய்து அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைப்பது பெரும்பாலனோரின் முழுநேரத் தொழிலாகவே மாறிப்போனது.
சில மாதங்களுக்கு முன் என் கண்முன்னே நிகழ்ந்த ஒரு பகல் நேர ஏமாற்று வேலை பற்றி பதிவிட்டிருந்தேன், பலரும் படித்திருக்கலாம்.
ஒரு பரபரப்பான காய்கறி கடைக்கு வந்த ஒரு ஆள், ஏதோ ஒரு காய் வாங்கிவிட்டு 35 ரூ வியாபாரத்திற்கு 2000 ரூ தாளை நீட்டினான்.
அந்தக் கடைக்கார அம்மாவோ கடிந்து கொண்டே, சில்லறை கொடுத்து விட்டது.
சில்லறையை வாங்கி விட்டு, “இது 25 ரூ தானம்மா, பக்கத்து கடைகள்ல 25 ரூ தான், நீ என்ன 35 ரூ எடுத்துருக்க?” என்று சண்டையிட்டார்.
“அடப்போயா உன் வியாபாரம் வேணாம், காயைத் திருப்பி வாங்கிக்கிறோம், நீ பணத்தை வாங்கிக்கோ” என்று கொடுத்த சில்லறையையும் காயையும் வாங்கி விட்டு 2000 ரூ தாளை திருப்பிக் கொடுத்து அனுப்பியது.
பிறகு பார்த்தால் அந்த மீதி சில்லறை பணத்தில் 1000 ரூ ஐக் காணோம். ஒரு சின்ன இடைவெளியில் 1000 ரூ ஐ ஏமாற்றி பறித்துச் சென்று விட்டான் அந்த ஆசாமி.
இவ்வாறாக பல விதங்களிலும், அடுத்தவன் வயிற்றில் அடித்துத் தன் வயிற்றை நிரப்பும் கூட்டம் மிகப் பெரிய அளவில் உலாத்தத்தான் செய்கிறது.
சில கும்பல் வடிவேலு நகைச்சுவை போலத் திருடத் தெரியாமல் திருடி மாட்டிக்கொள்வதும் வேடிக்கை தான்.
அப்படி ஒரு சம்பவத்தை இன்று காணொளியில் காண இயன்றது.
கோவை மாநகரில் ஒரு பிரியாணி கடையில் ஒரு நான்கு பேர் உணவருந்தும் போது, தங்களுக்கு ஊற்றப்பட்ட கோழி குழம்பில் ஒரு இறந்துபோன பல்லி கிடந்ததாக பெரிய வாக்குவாதம் செய்தனர்.
அதில் ஒருவர் அதை சாப்பிட்டு விட்டதாகவும் , அதனால் தனக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில், ஓங்கரித்துக்கொண்டே இருந்தார். எப்படியாவது சாப்பிட்ட உணவை வாந்தி எடுத்து விட வேண்டும் என்ற ரீதியில் கடுமையான முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இன்னொருவர் கடுமையான வாக்குவாதம் செய்து, “ஓட்டல் ஓனரைக் கூப்பிடு, மேனேஜரைக்கூப்பிடு , இரு நான் புட் ஆபிசர கூப்புடுறேன்” என்று அதகளம் செய்து கொண்டே, பக்கத்திலிருந்த மற்ற வாடிக்கையாளர்களிடமும் சென்று “அம்மா கோழி குழம்பா சாப்புடுறீங்க? அதுல பல்லி இருந்துச்சு, சாப்பிடாதீங்க” என்று அவர்களையும் எச்சரித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சிறிது நேரத்தில், உணவகத்தின் கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, அவர்களே பல்லியைக் கொண்டு வந்து இலையில் போட்டு நாடகமாடியது கண்டறியப்பட்டது.
உணவகத்திலிருந்து மிரட்டி ஏதாவது பணம் பறிக்கலாம் என்று நினைத்து இதுமாதிரியான சில்லறைத் தனமான காரியத்தைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்தப்போட்டி நிறைந்த உலகில் ஒரு தொழிலைத் தொடங்கி முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம்?
அந்த உணவகம் எவ்வளவு சிரமங்களை சந்தித்து இந்த நிலைக்கு வந்திருக்கும்? இப்படி அவர்களைப் போய் ஏமாற்றி பணம் பறிக்க எப்படி மனம் வருகிறது என்று இணையதளத்தில் பலரும் வசைபாடி வருகிறார்கள்.
உண்மைதான், இந்தக்காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ, அதுபோலவே சம்பாதித்த பணத்தை இதுமாதிரியான திருட்டு கும்பலிடமிருந்து காப்பற்றிப் பாதுகாப்பதும் அவ்வளவு கடினமாகிப் போனது.
வெறும் வயிறு நிறைவதற்காக இந்தத் திருட்டு கும்பல்கள் இநங்குவதில்லை. வசதியான ஆடம்பரமான வாழ்வை வாழத்தான் இந்தத் திருட்டுத்தனம்.
இது போன்ற திருடர்கள் கடுமையான தண்டனைக்கு உட்பட்டால் தான், பொதுமக்களுக்கு நிம்மதி.