உலகில் கொரோனா, பூகம்பம் , வெள்ளம், சுனாமி , மேக வெடிப்பு மழை போன்றவை எல்லாம் வந்து மனித இனம் வாடும் போது மனம் வெதும்பத் தான் செய்கிறது.
ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் மனித இனத்திற்கு இந்த தண்டனை போதாது என்று தான் தோன்றுகிறது.
ஆம், மனித இனமே ஒட்டுமொத்தமாக அழிந்தாலென்ன என்ற அளவிற்கான கோபத்தை சில விஷயங்கள் ஏற்படுத்துகின்றன.
அப்படி இருவேறு துயர செய்திகள் இன்று கேள்விப்பட நேர்ந்தது.
முதலாவது, இறைச்சித் துண்டுகளில் விஷம் கலந்து ஒரு தெரு முழுக்க ஆங்காங்கே வைத்திருக்கின்றனர்.
அதைப் பல நாய்கள் (வளர்ப்பு மற்றும் தெரு நாய்கள் உட்பட) பசியாற உண்டு இறந்திருக்கின்றன.
இரண்டாவது சம்பவம், நமது ஈரக்கொலையை நடுங்கிட வைத்திடும்.
தான் பெற்ற பிள்ளையை, அதுவும் இரண்டரை வயதே ஆன பிள்ளையை அடித்துத் தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்திருக்கிறான், 24 வயதான இளம் தந்தை.
ஆங்காங்கே பிள்ளை வரம் வேண்டி, 35 , 40 ஏன் 45 வயதில் கூட தம்பதிகள் மடிப்பிச்சை, மண்சோறு என்று வேண்டிக்கொண்டு லட்ச லட்சமாக செலவு செய்து கொண்டும் அலைகிறார்கள். இன்னொரு புறம் குழத்தைகளைக் கடத்தச் சொல்லி பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.
அப்படியிருக்க, இரண்டரை வயது பிஞ்சுக் குழந்தையை அடித்துத் தொட்டியில் வீசிக் கொலை செய்யும் அளவிற்கு அவனுக்குள் என்ன ஒரு மிருகத்தனம்?
ச்சீ இதை மிருகத்தனமென்று சொன்னால் மிருகங்களுக்குக் கேடு.
இதற்கு அந்தக் குழந்தையை ஏதாவது ஒரு கும்பல் மருத்துவமனையிலேயே கடத்தி வேறு யாருக்காவது விற்றிருக்கலாம் போல.
அந்தக் குழந்தையைக் கொன்ற போது அவன் மதுபோதையிலோ, கஞ்சா போதையிலோ எல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை.
தன்னுடைய அலுவல் நேரத்தில் தான் பணிபுரியும் தொழிற்கூடத்தில் தான் இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறான்.
அப்படி ஆத்திரம் அவன் கண்ணை மறைத்திருக்கிறது. அவனில் மறைந்திருந்த கொடிய முகத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறது.
சம்பவம் நிகழ்ந்த இடங்களைக் குறிப்பிடாததன் காரணம், கேவலம் அந்த மனிதப்பிறவிகளால் அவர்கள் வாழும் பகுதிக்கு அவப்பெயர் வேண்டாம் என்றுதான்.
இப்படியான சம்பவங்களைச் செய்யும் மனிதர்களின் பொருட்டு தான் பூமி தாங்கிக் கொள்ளாமல் கொந்துக் கொத்தாக நம்மைக் கொன்று குவிக்கிறது போலவே?
ஏன் தான் இப்படி ஆனானோ மனிதன்?