முன்னாட்களில் பெரும்பாலான உணவகங்களில் இந்தப் பழக்கம் உண்டு என்று சில சினிமாக்களில் கேலியாகப் பார்த்திருக்கிறோம். சிலர் இதை உண்மை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்து விட்டால், சாம்பாரில் கடலை மாவு கலப்பது, நீர் கலப்பது, ரசத்தில் சுடுநீர் கலப்பது போன்ற காரியங்களைச் செய்வார்கள். அதேபோல, வெள்ளை சாதம் வேக வைக்கும் போது சிறிது ஆப்பச் சோடா கலப்பார்கள், ஏனென்றால் அப்படிச் செய்தால் அதிக சாதம் உண்ண முடியாது என்ற காரணம்.
இது உணவகத்தின் குறுகிய புத்தி. தேவைக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்ய இயலாத முட்டாள்தனம்.
இதை ஒரு சினிமா நகைச்சுவையிலும் நாம் பார்த்திருக்கிறோம்.
தேசிங்கு ராஜா என்ற சினிமாவில், நடிகர் சூரி, “மாமா தலை தனியா, கால் தனியா, நெஞ்சு தனியா, இப்படித் தனித்தனியா பிரிச்சு வச்சிருவோம்” என்று சொல்வார்.
ஒவ்வொரு படியாக முன்னேறி இறுதியில் ஊரே திரண்டு வருகிறது என்று கேள்விப்படும் போது கூட, “மாமா கொஞ்சம் மசாலாவத்தூக்கலாப் போட்டு தண்ணிய ஊத்தி விட்டா தடபுடலா விருந்த சமாளிச்சிடலாம்” என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வார்.
அதே பாணியில் தான் நமது மின்வாரியமும் பணி புரிகிறதா என்ற சந்தேகம் சில நேரங்களில் வராமல் இல்லை.
சென்னை, கோவிலம்பாக்கத்தில் நான் குடியிருக்கும் பகுதி ஓரளவு வெளியே தெரியக்கூடிய அளவில் பெரிய தலைகள் இருக்கும் பகுதிதான்.
வக்கீல்கள், ஐடி கம்பெனி ஊழியர்கள் என்று கொஞ்சம் பணமும், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த மக்கள் அதிகம் வாழும் பகுதி.
அதில்லாமல் இங்கே சில காலம் முன்பு வரை ஒரு தண்ணீர் கம்பெனி, அதாவது தண்ணீர் கேன்களை நிரப்பும் கம்பெனியும்
இயங்கி வந்தது.
இப்பிடியிருந்தும், இந்த பகுதக்கு ஒரு மிகப்பழமையான தாத்தா காலத்து மின்மாற்றி தான் பிரதான மின்மாற்றியாக மின்சாரம் பகிர்ந்து தருகிறது.
அந்த மின்மாற்றி இங்கே அமைக்கப்பட்ட போது மொத்தமாவ இங்கே 50 வீடுகளும், 10 கடைகளும் கூட இருந்திருக்காது.
ஆனால் இன்று, 40-50 அடிக்குமாடி குடியிருப்புகளும், வணிக நிறுவனங்கள் ஒன்றிரண்டும், கணிசமான அளவு கடைகளும் உள்ளன.
இன்றைய சூழலுக்கு ஏற்ப மின்மாற்றியை அதிகரிக்கவோ அல்லது அளவீட்டில் பெரிய அளவிலோ மாற்றி அமைத்திருக்கிறார்களா என்றால், அதே சுடுதண்ணீர் சூத்திரம் தான்.
நான் வசிக்கும் பகுதியில் பழுது காரணமாக அடிக்கடி மின்சார இணைப்புத் துண்டிக்கப்படுவதும், சில மணி நேரங்கள் மின் இணைப்பு இல்லாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது.
மாதம் ஓரிரு முறை சில நிமிட மின் இணைப்புத் துண்டிப்பு, 3-4 மாத இடைவெளியில் மின்மாற்றி வெடித்து, சில மணிநேர மின் இணைப்புத் துண்டிப்பும் வாடிக்கையாக நிகழ்கிறது.
நேற்று மதியம் 3.30 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இரவு 12- 12.30 மணி அளவிற்கு தான் சரிசெய்யப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 9 மணி நேர மின் துண்டிப்பு என்றால் எவ்வளவு அவதி இருந்திருக்கும் என்பதை விளக்க அவசியமில்லை.
சமீபத்தில் நான் மின்வாரிய உதவி மையத்திற்கு அழைத்துப்பேசிய நாட்கள்,
25 ஜூன், 3 ஜூலை , 11 ஆகஸ்ட்.

ஆக இந்த இடைவெளியில் ஏதாவது பழுது ஏற்பட்டிருந்திருக்கிறது.
பணம் கட்ட ஒரு நாள் தாமதமானாலே அபராதமும், மின் இணைப்பைத் துண்டிப்பதும் செய்யும் வாரியம், இப்படி பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் பகிதக்கு சரியான மின்மாற்றியை அமைத்துத் தர தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை.