சமூக இணையதளம் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் தான் என்றாலும், எனக்கு அது அப்படி இருந்தது இல்லை.
அதிலும் குறிப்பாக முகப்புத்தகம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்தது.
வெறுமனே பொழுதுபோக்கு என்றில்லாமல், எனது மனதிலிருந்த சோகங்களை எழுத்துகளின் மூலமாகப் பகிரத் துவங்கி , பிறகு சினிமா விமர்சனம், அரசியல் துணுக்குகள், தற்கால நிகழ்வுகள் பற்றிய கேலி விமர்சனங்கள், நல்ல கருத்துகள், சிந்தனைகள் என்று எனது எழுத்து மெருகூட்டப்பட்டது என்னவோ இந்த வலைத்தள பக்கத்தின் அறிமுகத்தினால் தான்.
இங்கே என் பள்ளி நண்பர்கள் முதல் பால்ய நண்பர்கள் வரை, எனது தந்தையின் நண்பர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள், கல்லூரி மற்றும் நான் வேலை செய்த இடங்களில் அறிமுகமான நண்பர்கள் எனப்பலரும் தினந்தோறும் இல்லாவிட்டாலும் அடிக்கொருமுறை என்னை நினைத்துக் கொள்ள இந்த சமூக வலைத்தளப்பக்கம் ஒரு ஆதாரமாக இருந்தது.
கிட்டத்தட்ட 5000 முகம் தெரிந்த முகம் தெரியாத நண்பர்கள். எனக்கு அந்த இணைய பக்கம் ஒரு அடையாளமாகவே மாறிப்போனது.
என்னைப் பலநாட்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் கூட, உங்க பதிவு நான் படிச்சேன் நல்லா இருந்தது என்று பாராட்டும் போது அந்த இணையபக்கத்தின் மீது ஒரு தீராத அன்பு ஏற்பட்டது.
எப்போதும் அதில் போலியாக எதையும் செய்ததும் சொன்னதும் இல்லை.
நியாயமான சமுதாயத்திற்குத் தேவையான சிந்தனைகளைத் தவிர மற்றபடி பெரிதாக எதுவும் பேசியதில்லை.
சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச்சார்ந்த மக்கள் தங்கள் கிட்னியை விற்று வாழ்க்கை நடத்தும் அவலம் பற்றிய கட்டுரை எழுதயிருந்த போது , அந்தக்கட்டுரையை முழுமையாகப் படித்து , அதன் சாராம்சம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல், நான் இணைய வழியில் கிட்னி விற்பனை செய்வதாக நினைத்தோ என்னவோ அந்தப் பக்கத்தை முடக்கி விட்டார்கள்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகால வழக்கம் நின்றுபோனதால் ஒரு பேரதிர்ச்சி.
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது .இன்னொரு கணக்கு துவங்கி மீண்டும் எனது நண்பர்களோடு இணைந்து விடலாம் என்று.
அதனால் மகிழ்ச்சியாக இதைப்பற்றி ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன்.
எனக்குக் கிடைத்த பரிசு என்ற பெயரில்.
நான் புதிதாக இன்னொரு கணக்கு துவங்கிய இரண்டாவது நாளில், அந்தக்கணக்கும் முடக்கப்பட்டது.
காரணம் என்னவென்று புரியவில்லை.
ஒருவேளை நான் முகப்புப் படத்தில் பழைய கணக்கு சம்பந்தப்பட்ட படம் வைத்திருந்த காரணத்தால் முடக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.
இன்னொரு கணக்கைத் துவங்கினேன்.
அதுவும் முடக்கப்பட்டது.
காரணம் முதல் கணக்கு இயக்கப்பட்ட , அலைபேசியில் இருந்து இந்தக் கணக்கும் இயங்கும் காரணத்தால், இரண்டு கணக்குகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று சொல்லி இதுவும் முடக்கப்பட்டது..இனி எனக்கு நம்பிக்கை இல்லை.
நான் வேறேதும் கணினி வழியாக புதிதாகக் கணக்குத் துவங்கினாலும் உபயோகிப்பது என்னவோ, இந்த அலைபேசியில் இருந்து தான் செய்ய முடியும்.
அப்படிச் செய்தால் மீண்டும் அது முடக்கப்படும் என்பது கசப்பான உண்மை..
அதனால் இந்த 6 மாத காலத்திற்கு என்னால் முகப்புத்தகம் உபயோகிக்க முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால் நான் பகிரும் கட்டுரைகள் பெரும்பாலானவை முகப்புத்தக வாசகர்களால் தான் வாசிக்கப்படுகிறது என்பதும் உண்மை.
இனி முகப்புத்தக நண்பர்கள், வாட்ஸ் அப்பில் நான் வைக்கும் பதிவுகளை வாசித்துத் தொடர்ந்து நமது உறவைத் தக்க வைத்துக் கொள்ளும்படி அன்பான வேண்டுகோள்.