Categories
சினிமா

ரோந்த் – சினிமா விமர்சனம்

பல சினிமாக்கள் பொழுதுபோக்குக்காகவே என்றாலும் சில சினிமாக்கள் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனதை நெருடும் சினிமாவாக அமைந்து விடுகிறது.

இதில் மலையாளப் படங்கள் அதிகளவில் இருப்பது நிதர்சனம்.
ஏனென்றால் இன்றளவும் கூட கதையைப் பெரிதாக நம்பிப் படத்தை எடுக்கும் வழக்கம் அவர்களிடையே உள்ளது.

கதாநாயகனுக்காக தனியாக மசாலா தூவுவது , மண்ணை அள்ளித் தூத்துவதெல்லாம் அவர்களிடம் குறைவு.

அப்படி மனதை நெருடிய சமீபத்திய படம் ஒன்று ரோந்த்.

மலையாளப்படம், ஆனாலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளிலும் ஹாட்ஸ்டார் ஓடிடி யில் இருக்கிறது.

ரோந்த் என்பது படத்தின் பெயர் மட்டுமல்ல, கதையின் அடிநாதமும் அதுதான்.
ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வார இரவில் ரோந்து செல்லும் இரு காவலர்கள் சந்திக்கும் சாதாரணமான நிகழ்வுகள் துவங்கி விபரீதமான நிகழ்வுகள் வரை அனைத்தும் வரிசையாக கோர்க்கப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இரவு ரோந்து தான் அவர்களில் ஒருவருக்குக் கடைசி இரவு என்பதும், இன்னொருவருக்கு வாழ்க்கையே புரட்டிப் போடும் இரவு என்பதையும் எதிர்பாராமல் இருவரும் கிளம்புகின்றனர்.

சிடுசிடுவென இருக்கும் உயர் அதிகாரியைப் பிடிக்காத கடைநிலை அதிகாரி. வேலைக்கு சமீபத்தில் சேர்ந்தவர், கை சுத்தம், நேர்மையின் உச்சம்.

கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு மதுபோதையில் வரும் பாதிரியாரிடம், உயரதிகாரி 10000 ரூ லஞ்சமாகப் பெற்றதும் அவரிடம் முகத்தை கோபமாகக் காண்பிக்கிறார் இவர்.

ஆனால் அதை தன் சுய உபயோகத்திற்காகப் பெறவில்லை, காவல் நிலைய வாகனத்தின் பழுது நீக்கும் செலவை சரிசெய்யவே வாங்கினேன் என்று மேலதிகாரி கூற, அவர் ஓரளவு நல்லவர் தானோ என்று இவரது மனதில் எண்ண ஓட்டம் ஏற்படுகிறது.

தொடர்ச்சியாக அவர்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் இருவரிடையே வெறுப்பையும் , அன்பையும் மாறி மாறி தூண்டுகிறது.

அந்த சம்பவங்கள் என்ன என்ன என்று பட்டியிலடத்துவங்கினால் படம் பார்க்கும் ஆர்வம் இல்லாமல் போய் விடும்.

ஒரு கட்டத்தில் இது பேய் படமா என்றும் கூட நாம் திகிலைடந்து விடுகிறோம்.

பேய் படங்களை விட மிரட்டலான ஒரு காட்சி கூட அமைந்திருக்கிறது.

இடையிடையே இரு காவலர்களின் குடும்பப் பின்னனி காட்சிகளும் அருமை.

அதில் கடைமட்ட காவலரை விட, உயரதிகாரியாக வரும் காவலர் மீது நமக்கு நல்ல அபிப்ராயம் ஏற்படுகிறது.

அவர் எவ்வளவு நல்லவர் மற்றும் சாமர்த்தியசாலி என்பதை படத்தின் பல காட்சிகளும், அவரது குடும்பப் பின்னனி காட்சிகளும் உணர்த்துகின்றன.

இறுதியில் அந்த இரவில் நிகழும் ஒரு அசம்பாவித சம்பவத்தில் இவர்கள் இருவரும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு, அந்த குற்றத்திற்கு பலி ஆகிறார்கள்.

குற்றத்திற்கு பயந்த கடைநிலை ஊழியர் பயந்து ஓடிப்போய் ஒரு வாகனத்தில் அடிபட்டு இறப்பதாகவும்,நம் மனதைக் கவர்ந்த அந்த உயரதிகாரி சட்டத்தின் மீதும் தர்மத்தின் மீதும் கொண்ட நம்பிக்கை காரணமாக, நாங்கள் குற்றவாளிகள் அல்ல, என்பதை நிரூபிக்க முடியும் என்ற சவாலோடு மன உறுதியோடு சிறை செல்வதையும் இறுதிக் காட்சியாக வைத்துள்ளனர்.

கலங்கிய கண்களோடு , இறுகிய இதயத்தோடு்தான் நம்மால் படத்திலிருந்து வெளியேற இயலும்.

மனிதன் தேவை ஏற்பட்டால் எப்படி துரோகியாக மாறுவான் என்பதை இறுதிக்காட்சியில் அருமையான விதத்தில் விளக்கியிருக்கிறார்கள்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.