கபடு வாராத நட்பும்,
அன்பு அகலாத கணவனும் , மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் என்று பாடியிருக்கிறார் பட்டர்.
சந்தானம் அதாவது, குழந்தைகள் நல்வழியில் நடப்பவர்களாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அன்பு குறையக் கூடாது எனவும் பாடியிருக்கிறார்.
இது அப்படியே கிடைத்திருக்கிறது ஸ்பெயின் நாட்டில் வாழும் இந்த தம்பதிக்கு.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு குறையாதவர்கள்.
அதேபோல, அவர்களுக்குப் பிறந்த குழந்தையும் நல்ல குழந்தை, பெற்றோரின் மீது அளவற்ற அன்பும், நல்ல பண்பும் உடைய குழந்தை.
என்ன ஒரே ஒரு குறை என்றால், குழந்தையின் கடவுச்சீட்டு காலாவதி ஆகி விட்டது.
அதை கவனிக்காத பெற்றோர், குழந்தைக்கும் சேர்த்து வெளிநாடு சுற்றுலா செல்ல, பயணச்சீட்டு பதிவு செய்து ஏற்பாடுகளும் செய்து விட்டனர்.
விமான நிலையம் சென்ற பிறகு தான் அவர்கள், குழந்தையின் கடவுச்சீட்டு காலாவதி ஆன விஷயத்தையே கவனித்துள்ளனர்.விமான நிலையம் என்றாலே எல்லாம் கடுமையான விதிமுறைகள் தானே?
அந்தக் குழந்தையை அனுமதிக்க இயலாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர்.
கடைசி நேரத்தில் பயணச்சீட்டுகளையும் ரத்து செய்ய இயலாது.
பாவம் அந்தப் பெற்றோர் என்று தான் அங்கிருந்த அனைவரும் வருந்தினர்.
ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படி அவர்கள் ஒரு காரியம் செய்தனர்.
My son , you stay here and be cool we will be back அதாவது, டேய் மகனே, நைனாவும், அம்மாவும் இப்ப வந்துருவோம், நீ இங்கேயே சமத்தா உக்காந்துருக்கனும் இன்னா? என்று சொல்லிவிட்டு தாயும் தகப்பனும் விமானம் ஏறிவிட்டனர்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று அந்தப் பையனும் விமான நிலையத்தை சுற்றி சுற்றி விளையாடவும் , ஓடவும் ஆடவும் பாடவுமாக இருந்திருக்கிறான்.
விமான நிலைய அலுவலர்கள், யார்ரா அந்தப் பையன் என்று துப்பறியவும்..
கடவுச்சீட்டு காலாவதி ஆயிடுச்சுனு விமானத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோமே?
அவன் தான் இவன்.
நான்தான் அந்தப் பையன் என்று அவனது கடவுச்சீட்டும் ஒப்புக் கொண்டது.
இவனோடு வந்த இவனது பெற்றோரைக் காணவில்லையே என்று தேடிப் பார்த்த போது, அவர்கள் விமானத்தில் ஏறி இன்பச்சுற்றுலாவுக்குக் கிளம்பி விட்டனர் என்பதைக் கண்டறிந்தனர்.
பிறகு விமானத்தை நிறுத்தி, அவர்களை இறக்கி விட்டு, ஏம்ப்பா இந்தப் பையனைப் பெத்தீர்களா? அல்லது எங்காவது தண்டலுக்கு வாங்கினீர்களா? இப்படி சுற்றுலா செல்வதற்காக பயன் விமான நிலையத்தில் விட்டுச் செல்வீர்களா? என்று கண்டித்துள்ளனர்.
அதற்கு அவர்கள் அளித்த பதில் டிக்கெட் காசு வீணாயிடுமே என்று பயணம் செய்ய முடிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.
பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லு என்று தான் நம்மூரில் சொல்வார்கள்.
இந்தக் கதை அப்படியே தலைகீழானது.
அந்தப் பையன் நாளைக்கு வளர்ந்து ஆளானதும் பெற்றோரை எப்படி மதிப்பான்? எப்படி அன்போடு கவனிப்பான்?
6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது என்ற வடிவேலு பாணி தான்.
இப்படியும் சில மனிதர்கள்.