இடைவேளை- இடைவெளி
அன்றாடம் ஓடும் இந்த ஓட்டத்திற்கு ஒரு சிறிய இடைவேளை தருவது தான் மீண்டும் அதே வேகத்தில் ஓடுவதற்கான ஆதாரம்.
எப்படி ஒரு தடகள வீரர் தன்னுடைய மொத்த ஓட்ட தூரத்தை பாகங்களாகப் பிரித்து, இடையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு, உடலுக்கும் காலுக்கும் ஓய்வு கொடுத்து மீண்டும் உந்தம் கொடுத்து ஓட்டத்தை வேகப்படுத்துகிறாரோ அதுபோல, நாமும் நமது அன்றாட ஓட்டத்திலிருந்து ஒரு சிறிய ஓய்வெடுத்து சொந்த ஊருக்கோ அல்லது வேறேதாவது ஒரு கோயில், சுற்றுலா தளம் போன்ற இடங்களுக்கு ஒரு சிறிய பயணம் மேற்கொள்வது ஒரு உந்தம் கொடுத்து மீண்டும் நம்மை ஓட வைக்க உதவுகிறது.
ஓய்வு எடுக்கும் போது தடகள வீரர் ஓட்டத்திலிருந்து பின் தங்குவதைப் போலத் தான், இந்தப் பயணங்களின் போதும் நமக்கு ஏற்படும் செலவு நம்மை சற்று பணரீதியாக சோர்வு படுத்துகிறது.
அடடே இவ்வளவு பணம் செலவாகி விட்டதே!
இந்தப் பேருந்து கட்டணம் இப்படியா கொள்ளை காசாக இருந்திருக்க வேண்டும்?
ரயிலில் டட்கல் டிக்கெட் கிடைத்திருந்தால் கொஞ்சம் பணம் மிச்சமாகியிருக்குமே?
அந்தப் பெரிய உணவகத்தில் சாப்பிட்டிருக்காமல் வேறு கடையில் சாப்பிட்டிருக்கலாமோ?
ஊருக்குப் போனாலே இப்படித்தான்.
இனி அடிக்கடி போகவே கூடாது என்று மனதில் ஆயிரம் கேள்விகளை உருவாக்கும்.
ஆனால் அன்றாட சுழலில் இருந்து விடுபட்டு நாம் அந்தப் பயணத்தை அனுபவித்ததால் மனதில் ஏற்பட்ட ஆறுதலுக்கும், மகிழ்ச்சிக்கும் இந்தப் பணம் ஈடாகாது.
மகிழ்ச்சி அரைக்கிலோ, ஆறுதல் கால் கிலோ என்று கடையில் காசு கொடுத்து வாங்க இயலாது.
மனதிற்கு மகிழ்சியும் ஆறுதலும் இந்த மாதிரியான பயணங்களும், நமது நட்பு வட்டாரமும், அந்த இனிமையான நாட்களின், பொழுதுகளின் நினைவுகளும் மட்டுமே தர இயலும்.
எந்த நிலையிலும் நல்ல மகிழ்ச்சியான நினைவுகளை நம் அலுவல் சார்ந்த நாட்கள் தர இயலாது.
மிக அரிதாக சில நாட்கள் அமையலாம்.
ஆனால் மற்றபடி அலுவலகம் என்பது கொண்டாடுவதற்கான இடமோ அல்லது நல்ல நினைவுகளை உருவாக்கும் இடமோ அல்ல.
நல்ல நினைவுகள் என்பது நம் உறவுகளோடு உரையாடிய, பயணித்த, அனுபவித்து மகிழ்ந்த நல்ல தருணங்கள் மட்டுமே நமக்குத் தரும்.
நல்ல சினிமா பார்க்கும் போதே கூட நமக்கு ஒரு இடைவேளை தேவைப்படும் போது, அன்றாடம் பணத்திற்காக, இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்வில் ஒரு இடைவெளி அல்லது இடைவேளை என்பது கட்டாயம் அவசியம் தானே!
ஒரு நல்ல விலைமதிப்பில்லாத பொருளுக்கு பணம் ஈடாகாது. ஆனால் பாவம் நம்மில் பெரும்பாலானோர் இங்கே பணத்தின் ஆதிக்கத்தின் கீழ் தான் வாழ்கிறோம்.
யானையை வாங்கப் பணம் தேவை.
யானையை வேடிக்கை பார்த்து கைதட்டி ரசிக்கப் பணம் தேவையில்லை.
நமக்கு என்ன இயலுமோ அதைச் செய்து நமது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது வாழ்விற்கு இனிமை.
ஒரு சின்ன இடைவெளியும், பயணமும் ஒரு நல்ல மகிழ்ச்சியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவ்வப்போது பயணிப்போம், சுகமான சுமைகளையும், நல்ல நினைவுகளையும் சேர்த்து வைப்போம்.
வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் உடன் வருவது நல்ல நினைவுகள் மட்டுமே!