Categories
ஆன்மீகம் கருத்து தற்கால நிகழ்வுகள்

ஒழுக்கமில்லாத பக்தி?

முருகனுக்கு அரோகரா!

அதிலும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா! அரோகரா என்று மிகப்பெரிய கும்பல் கிளம்பியுள்ளது.
திடீர் முருக பக்தர்களா?
அல்லது உண்மையிலேயே நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி வேரூன்றிவிட்டதா என்பதை யூகிக்க முடியவில்லை.

திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் சமீபத்தில் தடபுடலாக கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது.

கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்களுக்குள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் திருச்செந்தூர்  சென்றிருந்தோம்.

திருப்பதி போலவே வடிவமைத்து உருவாக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறம் தெரிந்தாலும், இது தமிழ்நாடு டா என்பது இன்னொரு புறம் தெரியாமல் இல்லை.

முகம் சுழிக்கும் கழிவறை, நினைத்த இடத்தில் வாகன நிறுத்தம் என்று துவங்கிய அலப்பறை போகப் போக உச்சம் அடைந்தது.

100 ரூ தரிசன வரிசை கோவிலின் 3 பக்கங்களையும் 3 தடவை சுற்றி சுற்றி நகரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 3.5- 5 மணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய கட்டாயம்.

இடையில் ஓரிரு இடத்தில் மட்டும் தண்ணீ்ர் தரப்படுகிறது.
அதிலும் ஒரு இடத்தில் தண்ணீர் கேன் சும்மா பெயரளவிற்கு வைக்கப்பட்டிருந்தது.

அதனால் வரிசை நிற்கும் இடத்தைச் சுற்றி சுற்றி வியாபாரம் படு ஜோர்.

வாட்டர், வாட்டர் கூலிங் வாட்டர், சுண்டல், கடலை, தர்பூசனி , அண்ணாசி என்று பலதரப்பட்ட வியாபாரம், அதைத் தாண்டி யாசகர்களின் குரல்.
இதையும் தாண்டி இன்னொரு சிறுவர்கள் குழு, அண்ணா , அக்கா நெத்தில சூலம் போட்டு விடவா என்று சுத்தி சுத்தி வந்தார்கள்.
அடேய்களா , வேல் வரைந்தாலும் பரவாயில்லை. அதென்னடா சூலம்?

எங்களைப் போலப் பலரும் சரியாக 1 மணிக்கு உள்ளே நுழைந்து, மாலை 5 மணி வாக்கில் தரிசனம் முடித்து வெளியே வந்தார்கள்.
பாவம் பலரும் கைக்குழ்ந்தைகளோடு , சாப்பிடாமல் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் தரிசனம் முடித்து வெளியே போய் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணித் தான் வந்திருப்பார்கள் போல.

வரிசை நெடுகிலும், ப்ளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் பழம் அண்ணாசி்பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு, அதைப் போட குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால்,, ஆங்காங்கே நடக்கும் பாதைகளின் ஓரங்களில் மலை மலையாகக் குப்பையைப் போட்டிருந்தார்கள்.

அதில்லாமல் , சுண்டல் வியாபாரிகள், ஆங்காங்கே சுண்டல கடலையைக் கீழே கொட்டியிருந்தார்கள்.

தண்ணீர் கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் வரிசை முழுக்க தண்ணீரும், சேறுமாக இருந்தது.

இதில்லாமல் தண்ணீர் பாட்டில்கள் காலியானவை ஆங்காங்கே வசிறியடிக்கப்பட்டிருந்தது.

இவற்றையெல்லாம் யூகிக்க முடியாவிட்டால், ஒரு டாஸ்மாக் பார் ( காசு கொடுக்காமல் நின்று குடிக்கும்- அடிமட்ட பார்) ஒன்றைப் பாருங்கள்.
அதுவும் இதுவும் ஒன்று தான்.

திருச்செந்தூர் கோவில் 100 ரூ வரிசையின் சில இடங்கள், டாஸ்மாக் பார் போலவே இருந்தது.
இரண்டிலும் அதே மக்கள் தானே! என்ன அங்கே பெண்கள் குழந்தைகள் இல்லை.இங்கே உண்டு.

நான்கு மணி நேரம் தரிசனம், முருகனுக்குப் புதிதாகப் பவுசு வந்ததெல்லாம் சரி.
இரண்டு மணிநேரத்தில் எங்க கூட வந்த பாப்பாவுக்கு உச்சா வந்துடுச்சு.
அப்புறம் பாப்பாவ கம்பி வழியா வெளில ஒரு ஆள்கிட்ட கொடுத்து உச்சா போக வச்சோம்.

இது குட்டிப் பாப்பாக்களின் அவதி மட்டுமல்ல.
நான்கு மணி நேரம் உச்சா வராமல் எல்லா மனிதர்களும் இருக்க முடியுமா?

வரிசையை சுற்றி சுற்றி அமைத்தால் போதுமா?
வசதி வேண்டாமா?

இதையும் தாண்டி பெரிய அதிர்ச்சி, கோவில் பிராகரத்திற்குள் தண்ணீர் கேன்கள்.
குவியலாகக் கிடந்தது.

அதன் புகைப்படம் இணைப்பில்.

இத்தனை ப்ளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் எங்கே போகும்?

கடலுக்குத் தான் வேறெங்கே?

பக்தி என்பதன் அடிப்படை சாராம்சம் ஒழுக்கம்.

திருச்செந்தூரில் அதுவே இல்லை எனும் போது , தரிசனம் பார்த்தேன், இலை விபூதி வாங்கினேன் என்பதெல்லாம் சும்மா மன ஆறுதல்.

சுத்தமும் , சுகாதாரமும் , ஒழுக்கமும் எப்போது பிறக்கிறதோ, அப்போதுதான் அது முழுபக்கதியாகும்..

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.