Categories
அரசியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

வந்தவருக்கெல்லாம் வாக்குரிமை?

இந்தியாவின் எந்த மாநிலத்தைச்சார்ந்த குடிமகனும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம், பணி செய்யலாம், குடியேறலாம், வாக்குரிமை பெறலாம் என்பது நமது அடிப்படை சட்டம்.

இதன் அடிப்படையில் இங்கே பணி நிமிர்த்தமாக வரும் வட இந்தியர்கள், இங்கேயே தங்கி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ரேஷனில் கிடைக்கும் பொங்கல் பரிசையும் வாங்கிக் கொண்டு, ஈகா, அனு ஈகா திரையரங்கில் இந்திப்படங்களைப் பார்த்து விட்டு, சௌகார் பேட்டையில் பலகாரம் சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பாகத் தாம் வாழும் வரை நமக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் அதோடு நில்லாமல், அவர்கள் வாக்குரிமை பெறும் பட்சத்தில் அவர்களின் முடிவு, அதாவது அவர்களின் வேட்பாளர் தேர்வு தமிழ் மக்களின் மனதை ஒத்ததாக அமையுமா என்றால் கண்டிப்பாக இல்லை.

ஏனென்றால் தமிழ் மக்களின் சிந்தனையோடு இவர்களின் சிந்தனை ஒத்துப் போவதில்லை.

அதாவது வட இந்தியர்கள் இங்கே வந்து வாக்களிக்கும் பட்சத்தில் அவர்களின் தேர்வு, அகில இந்திய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜக என்ற ரீதியில் இருக்கும். அதிலும் படிப்பறிவில்லாத பல வட இந்தியர்களின் தேர்வு என்னவாக இருக்கும் என்பது நமக்கு நிதர்சனம்.

ஆனால் தமிழ்மக்களிடம் அகில இந்திய கட்சிகள் அபிப்பராயம் இல்லவே இல்லை. காமராஜர் காலத்திற்குப் பிறகு தமிழ்மக்களுக்கு இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தான் ஆதாரம், அஸ்திவாரம் எல்லாம்.

இதைத்தாண்டி இன்னொரு விஷயம், இன்று வந்து இந்த மாநிலத்தில் குடியேறிய நபர் அடிப்படை சட்டத்தின் படி, இந்தியக்குடிமகன் என்ற தர்மத்தின் படி வாக்குரிமை பெற்றாலும் கூட, இந்த மாநிலத்தின் பாரம்பரியம் என்ன? இங்கே திராவிடக் கட்சிகளின் வரலாறு என்ன? அவை எப்படி வளர்ந்தது. இந்தி மொழி பற்றிய நமது மக்களின் அபிப்பராயம், சிந்தனை இது எதுவும் அவர்களுக்குப் புரியாது.

சென்ற தேர்தலில் கோவை தொகுதியில் வானதி அக்கா ஜிந்தகி பக்கா என்று ஒரு வேட்பாளரை சொல்லி சொல்லி ஜெயிக்க வைத்த வட இந்தியர்கள், கோவை போல, பரவலாக மற்ற தொகுதிகளிலும் கணிசமான அளவில் பரவி விட்டால், தமிழ் மக்கள் தங்களின் மனதில் நினைக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது என்பது கடினமான காரியமாகி விடும்.

அட இதெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமையின் படி எந்த மாநிலத்திலும் தங்கி வாக்களிக்க உரிமை உண்டு என்பது சட்டம்.
அதை நாம் ஏற்றுக் கொண்டு தான்
ஆக வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

ஆனால் அதன்பிறகு நாம் நிறைய சகித்துக் கொள்ளப் பழக வேண்டும்.

நமக்கு ரம்ஜான் விரதம் பற்றித் தெரியுமல்லவா!
பகல் முழுக்க, விரதமும், விடியற்காலை மற்றும் இரவில் உணவும் என்ற பழக்கம். சவூதி அரேபியா போன்ற சில நாடுகளில் ரம்ஜான் நோன்பு நாட்களில் பெரும்பாலான கடைகள் மூடித்தான் இருக்கும்.
பட்டினி கிடக்கும் மக்களுக்கு அது சரி.

ஆனால் நோன்பு இல்லாதவர்கள் கூட பகலில் சாப்பாடு இல்லாமல் திண்டாடக்கூடிய நிலை ஏற்படும் என்று நான் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவ்வாறாக, நம்மில் வட இந்திய கலப்பு நிகழ்ந்த பிறகு, சோறு சப்பாத்தி ஆகும், மாட்டுக்கறி சாப்பிடுவது குற்றமாகும். இது மாதிரியான பல விஷயங்களை நாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நாம் இன்று கேலியாகப் பேசி விமர்சித்துக் கொண்டிருக்கும் வடக்கன் எண்ணிக்கை அதிகரிப்பு, எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தில், சிக்கலில் நம்மைக் கொண்டு தள்ளும் என்பதில் வியப்பில்லை.

1970 – 80 களில் பஜார்கள், மார்வாடிகள் மற்றும் உடுப்பி ஓட்டல், என்று வெளி மாநிலத்தவரின் ஆதிக்கத்தில் ஆட்கொள்ளப் பட இருந்தன.
அன்றைய தலைவர்கள் எம்.ஜி.ஆர், கலைஞரின் பெருமுயற்சிகள் காரணமாக இன்றும் பஜார்களில் நம்மூர் அண்ணாச்சிகளும், சரவணபவன்களும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

அன்பு பாசம் ,வந்தாரை வாழ வைப்பது எல்லாம் சரிதான். ஆனால் வந்தவர்கள் எல்லாம் இங்கே தங்கி நம்மீது மசாலா தடவி மத்தாப்பு கொழுத்த விட்டால், நம் இனம் காணாமல்போய் விடும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.