சினிமா .
இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று சினிமா.
வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதோடு அல்லாமல், கோடி கோடியாகப் பணம்
புரளும் ஒரு பெரிய துறையும் கூட.
இந்தத் துறையின் தொழில் வாய்ப்பைய நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தொழிலாளிகள் உண்டு என்பதிலும் மாற்றமில்லை.
கோடிகளில் சம்பாதிக்கும் கதாநாயகன், நாயகி, இயக்குனரில் துவங்கி , தினக்கூலி பெற்றுக் கொண்டு லைட் பிடிக்கும் லைட் மேன் வரை சினிமா என்ற தொழிலை நம்பி இருப்பவர்கள் ஏராளமானோர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தத் துறையானது நல்ல முறையில் மென்மேலும் வளர்வது என்பது இதை நம்பியே வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் அவசியமாகிறது.
திடீரென சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இதை மக்கள் நிறுத்திவிட்டால் முதலில் நேரடியாக பாதிக்கப்படப்போவது இதை நம்பியிருக்கும் கடைநிலை ஊழியர்கள் தான்.
அதைத் தொடர்ந்து, சினிமா தியேட்டர் ஊழியர்கள், அங்கே பாப்கார்ன் விற்பவர்கள், கார் பைக் டோக்கன் போடுபவர்கள், என்று துவங்கி மறைமுகமாகவும் லட்சக்கணக்கான ஆட்கள் பாதிப்படையக் கூடும்.
எல்லாம் சரி இப்பதெல்லாம் கோடி கோடியாகப் போட்டு படம் எடுத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்?
இப்போது ஏன் இந்த சினிமா பாதிப்படைதல் பற்றிய பேச்சு என்று கேட்டால் காரணமில்லாமல் இல்லை.
முதலில் புள்ளி விவரத்திற்கு வரலாம்.
இந்திய சினிமாத்துறையில் தென்னிந்திய சினிமாத் துறை என்பது மிக வலுவான அமைப்பு.
ஒரு ஆண்டுக்கு 15000 கோடி அளவிற்கு பணப்புழக்கம், நிகழ்வது தென்னிந்திய சினிமாக்களால் தான். அதிலும் தமிழின் பங்கு மிக முக்கியமானது.
அந்த 15000 கோடியில் 5000 கோடிக்கும் அதிகமான பங்கு தமிழ் சினிமாவுடைய பங்கு.
அப்படி இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சினிமாவும் எவ்வளவு ஆத்மார்த்தமாக, சுத்தமாக மக்களைக் கவரும் விதமாக எடுக்கப்பட வேண்டும்?
ஆனால் இந்த ஆண்டில் இதுவரை வெளியான 174 படங்களில் 167 படங்கள் தோல்விப் படங்கள், அதாவது கனிசமான வெற்றியையும் எதிர்பார்த்த வசூலையும் பெறாத படங்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
செய்வன திருந்தச் செய்யாமல் இருப்பதும், இது போதும் என்ற மனநிலையும் தான்.
ஒரு பெரிய கதாநாயகன் அமைந்து விட்டால், 4 மசாலா காட்சிகளும் ஒரு சண்டையும் இருந்தால் படத்தை ஓட்டி விடலாம் என்ற மனப்பான்மை.
நல்ல எழுத்துகளின் மூலமாக ஒரு நல்ல கதையை அமைத்து, அதற்கான திரைக்கதையை உருவாக்கி, ஒரு சிற்பம் போல மெதுவாக பரபரப்பு இல்லாமல், பிரம்மன் படைத்த படைப்பாக கலை உருவாக வேண்டுமே ஒழிய, ஆயிரம் கோடி போட்டு 2 ஆயிரம் கோடி எடுப்போம் என்று வியாபார நோக்கில் விளம்பரங்களை குவித்து மக்களிடையே முதல் மூன்று நாட்களுக்குள் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் திணித்து, ஒரு வாரத்தில் போட்ட பணத்தை எடுத்தால் போதும் என்ற ரீதியில் படங்களை எடுப்பதும் தான் இந்த சினிமா சீரழிவுக்குக் காரணம்.
கமலஹாசன் அவர்களின் படங்கள் எத்தனையோ வசூல் ரீதியாக தோற்றுப் போயிருந்தாலும், இன்றளவிலும் அவை நல்ல படம் என்றே போற்றப்படும். அதுவே கலைக்கான மரியாதை.
படைப்பின் ஆழம்.
அதை விடுத்து, வசூலில் வென்றதாகக் கணக்கிடப்பட்டு மக்களின் மனதில் இடம்பிடிக்காத வகையில் படங்கள் தொடர்ச்சியாக வருமானால் ஒரு கட்டத்தில் சினிமா என்பதே மக்களுக்கு வெறுத்துப் போகும்.
இங்கே ஒவ்வொருவரின் இரத்தத்திலும் கலந்தது சினிமா. அதை நல்லமுறையில் படைக்க வேண்டியது அந்தத் தொழிலில் இருப்பவர்கள், அதற்குச் செய்யும் நன்றிக் கடன்.
நல்ல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் சினிமா ரசிகர்கள்.