Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

முயலுக்கு மூன்று கால்தானா?

2026 தேர்தலுக்காக பல கட்சிகளும் பலவிதமான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வெற்றிக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் நாம் தமிழர் கட்சியோ எந்தவித கூட்டணியும் அமைத்துக்கொள்ளப் போவதில்லை என்ற அதே நிலையில் இருப்பதால் இந்தக் கூட்டணிக் கணக்கு குழப்பங்கள் இல்லை.

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனநிலையில், கூட்டணி அமைக்காமல் வெல்வது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட, நாங்கள் எங்கள் நிலைப்பாடில் இருந்து மாறுவதில்லை, ஆனால் வெற்றியும் வேண்டும் என்றால், அது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கதை தான்.

நாம் தமிழர் கட்சி பேசும் கொள்கையும், தேர்தல் அரசியலும் மக்களிடம் மெது மெதுவாகப் போய்ச் சேருகிறதா அல்லது மக்கள் திமுக அதிமுக விற்கு மாற்றாக இவர்களுக்கு வாக்களிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஆனால் படிப்படியாக இவர்களது வாக்கு வங்கி உயர்ந்து, ஒரு தனிப்பெரும் கட்சியாக சின்னமுடைய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மைதான் என்றாலும், இன்றைய அரசியல் சூழலில் அதே பாணியில் ஓட்டுகள் விழுமா என்பது சந்தேகத்திற்கு உரியது.

ஏனென்றால் நாம் தமிழர் கட்சியின் பெரிய பலமே இளைஞர் கூட்டம் தான்.

அந்த இளைஞர் கூட்டத்தைப் விட்டில் பூச்சிகளைப் போல கவர்ந்திழுக்க இப்போது தவெக என்றொரு சிமிலி விளக்கு உதயமாகியிருக்கிறது.

ஏற்கனவே பல விஷயங்களில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெரும் சீமான் அவர்கள், இப்போது பேச்சு நாகரீகத்திலும் பொய் சொல்வதாகவும், மாற்றி மாற்றி மாற்றிப் பேசுவதாவும் பரவலாக அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.

விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று சொல்லிவிட்டு இப்போது மாற்றிப்பேசுவது சரியல்ல. இவர் கொள்கை தமிழ் தேசியம் என்றால் அது அவரோடு. அவரவர் கொள்கைள் அவரவருக்கு.
ஆனால் அதை பெருவாரியான மக்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும் மற்றொன்றை இழிவுபடுத்திப் பேசுவது மக்கிளடையே வெறுப்பைத் தான் உண்டாக்கும்.

திராவிடம் என்ற கொள்கை இங்கே பெருவாரியான மக்களால் 1967 ல் இருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருவது. அது சம்பந்தமான கொள்கைகளை, கொள்கையாளர்களை, பெரியார் உட்பட இவர் பல தலைவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது, அவமதிப்பது சரியல்ல.

மதவாதக்கட்சிகளாவது ஆரம்பத்தில் இருந்தே பெரியார் எதிர்ப்பை வெளிப்படையாக செய்தன.
ஆனால் இவரோ முன்னர் பெரியாரைப் பாராட்டியும் இப்போது அவமதித்தும் பேசுவது இவருக்குப் பின்னடைவு.

இதெல்லாம் கூட இவரது தனிப்பட்ட பிரச்சினைகள்.
ஆனால் கட்சி என்று வரும்போது இவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நடந்துகொள்வது கட்சியின் பல பிரபலமான மூத்த உறுப்பினர்கள் முதல் இளையவர்கள் வரை முகச்சுளிவை ஏற்படுத்துவது உண்மை.

சமீபத்தில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் கட்சியினர் பலரின் விருப்பத்தை மீறி தான்தோன்றித்தனமாக வரும் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்த செயலால் இன்று நாதக கட்சியை சார்ந்த பல இளைஞர்கள், கட்சி நிர்வாகிகள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் வழியாக திமுக கட்சியில் இணைந்துள்ளனர்.

இதுமாதிரியான இவரது தான்தோன்றித்தனமான செயல் கட்சியின் உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாத போது, இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன ஆகும் என்ற கேள்விதான் எழுகிறது.

தனது கட்சி உறுப்பினர்களை முகம் சுளிக்காத வண்ணம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இவர்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.