வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ,நல்ல வாய்ப்புகளைத் தரும், நல்ல தருணங்கள் அமையும், நாட்கள் மகிழ்வானதாக நகரும்.
அந்த நேரங்கள் அப்படியே நீடித்து விடாதா என்று கூடத் தோன்றும்.
ஆனால் அது நீடிக்காது.
பல நேரங்களில் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் சோதனை?
நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? என்று வடிவேலு புலம்பும் விதமாகத் தான் வாழ்க்கை நம்மை பாடாய் படுத்தும்.
சாலை ஓரத்தில் ஓரமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென ஓடி வந்து நம் வண்டியின் குறுக்கே பாய்ந்து நம்மையும் மல்லாத்திப் போட்டு பத்து நாளைக்கு பழுக்க வைத்து விடும்.
இதெல்லாம் என்னோட வாழ்க்கையில மட்டும்தான் நிகழுதா?
என்னைத் தவிர இந்த உலகத்துல எல்லாரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் தோனுது என்று பல முறை நாம் சிந்தித்திருக்கலாம்.
நானும் கூட.
இப்போதும் கூட அப்படியொரு நிலை தான்.
நமக்கு என்ன சோதனைகள் சொல்லியா வர வேண்டும்.
தினசரி வீட்டில் சோறு வடிப்பதைப் போல, சோதனை என்பது நம் வாழ்வின் அன்றாட நிகழ்வாகிப் போனது என்று வருந்துவோருக்கு, ஒரு தகவல்.
இது நமக்கு மட்டுமில்ல.
உலகத்துல அங்கங்க கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை இப்படியெல்லாம் ஏதாவது சோதனைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
போன வாரம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் மலையாள சங்கத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் பண்டிகை விழாவில் கலந்து கொள்ள கொச்சியிலிருந்து சென்ற நடிகை நவ்யா நாயர் தன் கைப்பையில் ஒரு முழம் மல்லிகைப்பூ வைத்திருந்த காரணத்தால் அவருக்கு 1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
கொச்சியில் விமானம் ✈️ ஏறும்போது அந்த நடிகையின் தந்தை 2 முழம் மல்லிகைப்பூ வாங்கித் தந்துள்ளார்.
அதில் ஒரு முழத்தைத் தலையில் சூடிவிட்டு, இன்னொரு முழத்தை எடுத்து வைத்துள்ளார்.
விழா ஆரம்பிக்கும்போது சூடிக்கொள்ளலாம் என்று.
அதற்கு தான் இந்த அபராதம்.
இதை அவர் தெரிந்து செய்தாரோ,தெரியாமல்செய்தாரோ.
ஆனால் தூக்கி எறிந்திருந்தாலோ, அவ்வளவு ஏன், விமானத்தில் குப்பையில் இட்டிருந்தால் கூட இந்த 50 ரூபாயோடு போயிருக்கும்.
ஆனால் 1.14 லட்சம் அபராதத்தில் போய் முடிந்திருக்கிறது.
ஆனால் எல்லாம் நன்மைக்கே என்று ஒரு நம்பிக்கை உண்டு.
நமக்கு நிகழும் கெட்டவைகளும் நன்மைக்கு என்று ஏற்றுக் கொள்ள மனம் வராது.
ஆனால் இதையும் கடந்து போகத் தான் வேண்டும் என்ற பக்குவத்தை அடைந்தால் போதும்.
வாழ்க்கை ஒருமுறைதான்.
இன்னும் என்னென்ன வருது என்றுதான் பார்க்கலாமே!