ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு.
74 ஆவது அதிகாரமாக ,பொருட்பால் பிரிவில் ,
வரும் நாடு எனும் அதிகாரத்தில் வரும் இந்த்த் திருக்குறளின் விளக்கமானது,
நாட்டில் தேவையான வளங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தாலும் அதன் அரசன் சரியில்லாத போது , அந்த வளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதே!
இந்தத் திருக்குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அதிமுக கட்சித்தொண்டர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
தலைவனில்லா அணி தலையில்லா முண்டம் போல , என்ற சொல்லாடலும், தலைவன் சரியான ஆளாக இல்லாத போது, அதற்கும் பொருத்தம் தான்.
ஒரு கட்சியின் தலைமை என்பது இரும்புக்கரமாக இருந்துவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இருப்பதை இழக்கும் ஓட்டைக் கரங்களாக இருந்தால் சிக்கல் தான்.
அதிமுக எனும் மாபெரும் கோட்டை, எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டப்பட்டு, இடையே அவரது மறைவிற்குப் பிறகு, இரு அணிகளாகப் பிரிந்து எம்.ஜி.ஆரின் மனைவி மற்றும் கட்சியின் உறுப்பினர் இருவரில் இனி யார் இந்தக்கட்சியை வழிநடத்தப் போவது என்ற போட்டியில் ராஜதந்திரியாக செயல்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.
அதன்பிறகு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஒரு இரும்பு வளையத்தினுள் இருப்பது போல மிகப்பாதுகாப்பாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.
கட்சித் தலைவர் என்றால் இப்படித்தான் இரும்புக்கரம் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர்..பல நேரங்களில் அதிமுக உறுப்பினர்கள், கார் டயரில் எல்லாம் விழுந்து கும்பிடுகின்றனல் என்ற கேலி எழும் அளவிற்கு அவர் கட்சியை ஒரு ஹிட்லர் படை போல வழிநடத்திநயது உண்மை.
அவர் மறைவிற்குப் பிறகு வந்தது வினை.
முதல் பிரிவினையே அவரால் முன்னாளில் முதலமைச்சர் ஆக்கப்பட்டவருக்கும், அவரோடு தோழியாகப் பழகியவருக்கும் ஏற்பட்ட பிரிவினை.
ஜானகி- ஜெயலலிதா கதை போல, இந்தப்புறம் ஒருவர் தவழ்ந்து முதல்வரானார் என்று கேலி பேசப்பட்டு, கட்சி கடைசியில் அவர் கையிலேயே சேர்ந்த கமை நமக்குத் தெரிந்தது தான்.
ஆனால் மிக நீண்ட நாட்களாக அவரால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
இப்போது கட்சியின் மிக முக்கியப் புள்ளியான செங்கோட்டையன் அவர்களோடு ஏற்பட்ட விரிசல் காரணமாக, பல தொண்டர்கள் இவருக்கு எதிராகத் திரும்பியதோடு அல்லாமல் இவருக்கு எதிரானவர்கள் அதாவது சசிகலா தரப்பும், பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டும் அளவிற்கு பிரச்சினை வளர்ந்து விட்டது.
இது நல்ல தலைமைக்கு இழுக்கு.
இருக்கும் சூழ்நிலையை உற்று கவனித்தால் இது அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையாவது ஒற்றுமையுடன் பயணிக்குமா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது.
ஏற்கனவே கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலர் விரக்தி காரணமாகவும், புதிய கட்சிகளில் இணைந்தால் ஏதாவது பலன் கிடைக்குமா என்ற நோக்கிலும் கட்சி தாவிக் கொண்டிருக்கும் போது, கட்சியின் பெரும்புள்ளிகளும் இப்படி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பிரிவினை பாராட்டுவது கட்சிக்கு நல்லதல்ல.
ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்ணாமி.
பார்க்கலாம்! தாவுகிறாரா, தவழ்கிறாரா என்று!