தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
திருக்குறளில் அறத்துப்பால் பகுதியில் துறவறவியலில் 31 ஆவது அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளின் பொருளை அறியாதோர் எவருமிலர்.
ஆனால் நமது அன்றாட வாழ்வில் இதைப் பின்பற்றுகிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்பதே 90 சதவீத மக்களின் பதில்.
ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட சிலர் கோப்பப்படுவதும், அற்ப காரணங்களுக்காக கோபம் கொள்வதும், வந்த கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் செய்வதறியாது சில தவறுகளைச் செய்வதும் பலருக்கு அன்றாட வழக்கமாகிப் போனது.
சினிமாவில் கதாநாயகர்கள் கோபத்தில் அளவுக்கு அதிகமாகக் குடிப்பது, புகைப்பது , மின்னல் வேகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவது போன்ற காட்சிகளைக் கண்டு இன்று பலரும் அதே மாதிரியான சில காரியங்களைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அதிலும் புகை மற்றும் மது என்பது மிக அதிகமாகப் பின்பற்றப்படும் ஒன்று.
ஆனால் கோபத்தில் அமைதி கொள், தியானத்தில் ஈடுபடு ,விரல் விட்டு பத்து வரை எண்ணிக்கை செய் என்று நல்லது சொல்லும் காட்சிகள் எல்லாம் நம்மாட்களுக்கு நினைவில் வருவதில்லை போல.
இதில் ஒரு சம்பவம் தான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.
ஒரு மகிழுந்து அதாவது கார், போரூர் சுங்கச்சாவடியை (டோல்கேட் ) கடந்து மிக விரைவாக சென்றிருக்கிறது.
சென்ற மகிழுந்து சும்மா செல்லவில்லை, ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறது.
இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் சிறிதளவும் வேகம் குறையாத அந்த மகிழுந்து மதுரவாயல் மேம்பாலம் ஏறி பூந்தமல்லி சாலையில் பயணித்திருக்கிறது.
அந்த சாலையிலும் இரண்டு இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளி பிறகும் நிற்காமல் சென்ற வாகனத்தைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.
இத்தனை களேபரங்களுக்குப் பிறகும் வாகனம் நிற்காமல் சென்றது என்றால் , அந்த வாகன ஓட்டி மது போதையையும் மீறிய மிகப்பெரிய போதை ஏதாவது ஒன்றில் இருந்திருக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?
அதுதான் இல்லை.
அந்த மகிழுந்தின் உள்ளே ஓட்டுநரோடு ஒரு குழந்தையும் இருந்திருக்கிறது.
அது அவரின் குழந்தை.
அவர் ஒரு மென்பொறியாளர். மனைவியுடன் நிகழ்ந்த வாக்குவாதத்தினால் கடுமையான கோபமைடந்த அவர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகிழுந்தில் கிளம்பியிருக்கிறார்.
அந்தக் கோபத்தில் தான் இத்தனை களேபரங்களும்.
இவர் இடித்துத் தள்ளிய இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் இறந்தும் போனார்.
இதெல்லாம் தேவைதானா?
ஒரு உயிர் என்பது அவ்வளவு சாதாரணமாகப் போனதா?
அவ்வளவு அடக்க முடியாத கோபம் எப்படி ஒரு மனிதனுக்கு ஏற்படும்?
அதிலும் முதலிலேயே மூன்று வாகனங்களை இடித்துத் தள்ளிய பிறகும் வண்டியை நிறுத்தாமல் செல்லுமளவிற்கு எவ்வளவு கோபம்?
போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பார்கள்!
ஆனால் இது அதைவிட மோசமானதாக அல்லவா இருக்கிறது?
கோபத்தைக் கட்டுப்படுத்தாதவன் போதை ஆசாமியை விடக் கொடூரமானவன் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது.
இனியாவது இந்தக் குறளின் வழி நடந்து நம்மை நாமே காத்துக் கொள்வோமா?