புறக்கணிப்பு, அவமரியாதை , சிறுமைபடுத்துதல், ஒதுக்கி வைத்தல் போன்றவை இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாம் ஆறறிவு கொண்டு படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் மனித இனத்தில் தான் இவையெல்லாம் மிக அதிகமாக நிகழ்கிறதோ என்ற எண்ணம்.
குழந்தைகளின் மனதில் அது மாதிரியான ஏற்ற தாழ்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளிகளில் சீருடை என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் , நாம் பிஞ்சு குழந்தைகளிடமே அந்த பாகுபாடு, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை நமக்குத் தெரியாமலே விதைத்துக் கொண்டிருக்கிறோம்.
உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு?
கத்தரிக்காய் கூடையிலே தூங்கப் போச்சு , கத்திரிக்காய் உருளைக்கிழங்கை தள்ளி விட்டுருச்சு என்று கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பாகுபாட்டை பாடலாகப் பாடி கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.
இது மாதிரியான பாகுபாடு தான் பல இடங்களிலும் நம்மை அறியாமலே பரவிக் கிடக்கிறது.
அதிலும் பணத்தை வைத்து,தோற்றத்தை வைத்து மக்களை எடை போடும் பாகுபாட்டு முறை என்பது மிக அதிகமாகக் காணப்படும் ஒன்று.
இதில் கேவலம் என்னவென்றால், பணக்காரன் பணமில்லாதவனை பாகுபடுத்திக் கேவலப்படுத்துவதை விட, பணமில்லாத கீழ்நிலை வேலையில் இருப்பவர்கள் , தான் பணமில்லாதவர்களை , சிறிது தோற்றத்தில் அழுக்கானவர்களை பாகுபடுத்தி கேவலப்படுத்துவது அதிகம்.
ஒரு இந்தி வெப் சீரிஸில் ஒரு காட்சி.
அழுக்கான கதாநாயகன், ஒரு பெரிய பாரில் சரக்கு அடிக்கப்போகும் போது அந்த பாரின் டென்டரும் , மேலாளரும், அவரைக் கேவலப்படுத்தும் விதமாக நீயெல்லாம் இங்க குடிக்க வந்தியா , திருட வந்தியா என்ற ரீதியில் அசிங்கப்படுத்துவார்கள்.
அப்போது அந்த கதாநாயகன், ஏன்டா நாயே, நீ வாங்குற சம்பளத்துக்கு நீ இங்க காசு கொடுத்து குடிக்க முடியுமா? என்று கோபப்படுவார்.
இது ஒருவகையில் நியாயம் தான்.
பெரிய உணவகங்களில், சப்ளையராக இருப்பவர்கள் துவங்கி காவலாளிகள் வரை பெரிய கார்களில் வருபவர்களிடம் நடந்துகொள்ளும் முறை வேறு, கொஞ்சம் சாதாரணமாக இருசக்கர வாகனங்களில் நடுத்தர தோற்றத்தோடு வருபவர்களிடம் நடந்து கொள்ளும் முறை வேறு.
இங்கே மரியாதை என்பது பணத்தை வைத்துப் பரிமாறப்படும் பண்டமாக மாறிப்போனது.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு என்பது கேவலம் இவர்களுக்கு ஏன் புரியாமல் போனது.
20 ரூ டிப்ஸ் தருபவனுக்கு ஒரு மரியாதை, 10 ரூ டிப்ஸ் தருபவனுக்கு ஒரு மரியாதை, 5 ரூ டிப்ஸ் தருபவனுக்கு ஒரு மரியாதை?
முதலில் எதற்காக டிப்ஸ் தர வேண்டும்?
நீங்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்குகிறீர்கள், சாப்பாடு இலவசமாக, தங்குமிடம் இலவசமாகத் தரப்படுகிறது.இதைமீறி டிப்ஸ் என்பது மனதார உணவு பரிமாறியதற்காக மன மகிழ்வோடு சாப்பிட்டவர் தரும் இனாம்.
ஆனால் இன்று அது மரியாதைக்கான கருவியாகப் பார்க்கப்படுவது தான் அநியாயம்.
இந்த மாற்றம் என்பது அந்த வேலைகளில் இருந்தவர்கள் உருவாக்கிய மாயை.
இரு நாட்களுக்கு முன்பு , நான் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லூக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றேன்.
அங்கே திரையரங்கினுள் வசதியாகப் படம் பார்க்கும் பொருட்டும், சினிமா திருட்டைத்தடுக்கும் பொருட்டும் லேப்டாப் உள்ளிட்டவை அடங்கிய பைகளை வெளியே உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு உள்ளே போகலாம்.
அன்று படம் பார்க்கப் போகும் முன் என்பையை வைப்பதற்காக பாதுகாப்பு அறை காவலர்களிடம் கிட்டத்தட்ட ஒரு 5 நிமிடம் நின்று பையை வழங்கக் காத்திருந்தேன், அவர்கள் மற்றவர்களிடம் பையை வாங்கும் அலுவலில் என்னை கவனிக்கவில்லை.
மேலும் அது வரிசை ஒழுங்கில்லா கூட்டம் என்பதால் அவர்கள் கவனித்தார்களா என்றும் தெரியவில்லை.
ஆனால் பத்து நிமிடம் நின்ற பிறகு, இந்தப் பை எல்லாம் வாங்கி வைக்க முடியாது சார், லேப்டாப் பேக் மட்டும் தான் வாங்குவோம் என்றார்கள்.
ஏம்ப்பா, இது பெரிய பேக், உள்ள கொண்டு போனா மடியில வச்சுதான் படம் பாக்கனும் கஷ்டமா இருக்கும், வாங்கி வச்சிக்கோங்க என்று வேண்டுகோள் விடுத்தும்கூட, இவ்ளோ கூட்டத்துல் எல்லாப்பையையும் வாங்கி பாதுகாக்க முடியாது சார்.லேப்டாப் பேக் தான் வாங்குவோம். இதெல்லாம் வாங்க முடியாது என்று மீண்டும் சொன்னார்கள்.
ஏம்ப்பா 500 ரூ பெறுமான டூப்ளிகேட் ஹெல்மெட் லாம் வாங்கி டோக்கன் போடுறீங்களே,இந்தப் பை விலையே 700 ரூ, அதில்லாம உள்ள ரெயின் கோர்ட் , டிபன்பாக்ஸ்லாம் இருக்கு , இத வாங்கி வச்சா என்னப்பா , இத வச்சிக்கிட்டு இடஞ்சலா உக்காந்து படம் பாக்கனுமே என்று கேட்டதற்கு, உங்கள யாரு இத இங்க கொண்டு வர சொன்னாங்க? வேணும்னா போய் மேனேஜர்ட்ட கம்ப்ளையின்ட் பண்ணுங்க, இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று திமிராக பதில் சொன்னார்கள்.
இந்த சலசலப்பின் நடுவே அவர்களின் உயரதிகாரியும் வந்து விட்டார்.அவர் என்னவென்று கேட்டபோது, நான் சொன்னேன், என் பை அழுக்காக இருப்பதால் இவர்கள் அதை வாங்கி வைக்காமல் புறக்கணிக்கிறார்கள் என்று.
மேலும் ” நான் ஒரு தூசி கிளம்பும் இடத்தில் வேலை செய்வதால் என் பை அழுக்காகத் தான் இருக்கும், ஐடி கம்பெனியில் வேலை செய்றவன், அவன் வேலைய முடிச்சிட்டு லேப்டாப் பை எடுத்துக்கிட்டு படத்துக்கு வரலாம், ஆனா நான் என் வேலைய முடிச்சிட்டு என்னோட பைய எடுத்துக்கிட்டு இங்க வரக்கூடாதாம்?
என்று சொல்ல அவர் பையை வாங்கி உள்ளே வைக்க சொன்னார்.
அந்த ஊழியர்களும் சலித்துக் கொண்டே உள்ளே வாங்கி வைத்தார்கள்.
ஐடி கம்பெனி காரங்க மட்டும் சினிமா ரசிகர்களோ வாழத் தகுதியானவர்களோ பொழுதுபோக்கு அம்சங்களை ரசிப்பதற்கு தகுதியானவர்களோ இல்லை..மற்றவருக்கும் அந்த ஆசையும் தகுதியும் உண்டு. எல்லாருடைய உடையும், உடமைகளும் அழுக்குப் படியாமல் இருக்காது்.
என்னுடைய வேலை கலாச்சாரத்திற்கு என்னுடைய உடையும் உடமைகளும் அழுக்காகத்தான் செய்யும்.
அது உங்கள் கண்ணை உறுத்தினால் அது என் தவறல்ல..இதற்காக வெட்கப்பட்டு நான் இனி இங்கே வரமாட்டேன் என்று முடிவு செய்ய மாட்டேன்.
தோற்றத்தில் பாகுபாடு பார்த்த நீங்கள் தான் வெடக்கப்பட வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.
இன்னும் எத்தனை நாள் தான் இந்த முட்டா ஜனம் இப்படி பாகுபடுத்தியே உலகை சீரழிக்குமோ?




