இடக்கரடக்கல் என்ற ஒரு விஷயத்தைக் நாம் படித்திருப்போம்.
ஒரு பொருளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, ஆனால் அந்த இடத்தின் ஒழுக்கம் கருதி அந்த விஷயத்தை வேறு விதமாக சொல்வது தான் இடக்கரடக்கல் எனப்படும்.
உதாரணத்திற்கு அவன் எங்கே என்று கேட்கும் போது , மலம் கழிக்கச்செல்கிறான் என்று சொல்வதை விட கொள்ளைப்புறம் செல்கிறான் என்று சொல்லி அந்த விஷயத்தைத் தெரிவுபடுத்துவதோடு அல்லாமல், சொல்ல வந்த விஷயத்தையும் முகசுழிவு இல்லாமல் சொல்லி விடுகிறோம்.
இதுபோல இடக்கரடக்கல் என்பது இன்றைய காலத்தில் பலருக்கும் பல விதத்திலும் அவசியமாகிறது.
கோபத்தில் தான் சொல்ல வரும் விஷயங்களை சில வார்த்தைகளை மாற்றி கோபத்தின் தாக்கம் குறையாமல் சொல்வது புத்திசாலித்தனம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
என்று வள்ளுவர் சொன்ன கருத்தும் வேறு விதம்.
இந்த இரு கருத்துகளில் ஏதாவது ஒன்றை முயற்சி செய்திருந்தால் கூட நமது எதிர்கட்சித் தலைவருக்கு சமீபத்தில் கிடைத்த சின்ன அவப்பெயர் கிடைத்திருக்காது.
ஆமாம் , அவரது கூட்டத்தில் தொடர்ச்சியாக அவசர்ஊர்தி குறுக்கே வந்து தொந்திரவு செய்த காரணத்தால் ஆத்திரமடைந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இனி ஆள் இல்லாம ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் டிரைவரே பேசன்ட் ஆக்கி அதில் அனுப்பப்படுவார் என்று ஆத்திரத்தில் பேச,அதை அப்படியே பின்தொடர்ந்த கழக கண்மணிகள் ஆம்புலன்ஸை நொறுக்கி சம்பவம் செய்ய அவருக்கு அவப்பெயராகிப் போனது.
பதிலுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகளில் மீட்டிங் போட்டுவிட்டு ஆம்புலன்ஸ் வருகிறது என்று குற்றம் சொல்வது நியாயமல்ல என்றும், நோயாளியுடன் தான் ஆம்புலன்ஸ் போக வேண்டும் என்பதல்ல, நோயாளியை அழைக்கவும் போகலாமே? என்று சொல்லி அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தின் வழியே அவசர ஊர்தி சென்றதற்கான காரணத்தையும் விளக்கமாகக் கூறி கடிந்து கொண்டார்.
இது உண்மைதான் என்றாலும் , அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தவே அவசர ஊர்தி எல்லா ஊர்களிலும் குறுக்கே அனுப்பப்படுகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒருவேளை அப்படித் தோன்றியிருந்தால் கூட, இல்லை அதுவே உண்மைதான் என்றாலும் கூட, நிரூபிக்க அதிமுக விடம் ஆதாரம் இல்லை.
ஆனால் எடப்பாடி அவர்கள் கோப்ப்பட்டு பேசிய வார்த்தைகள் ஆதாரப்பூர்வமானவை.
அது ஒரு அரசு ஊழியரை மிரட்டும் தொனியிலான பேச்சு என்பது மறுக்க முடியாத உண்மை.
அதையே அவர் கோபமாக இப்படிப் பேசாமல் மறைந்த முன்னாள் முதல்வர்,கலைஞர் திரு.கருணாநிதி பாணியில் ஏதாவது நையாண்டியாகப் பேசியிருக்கலாம்.
ஆனால் கலைஞர் போல எல்லோரும் பேசிவிட இயலுமா?
அப்படிப் பேசிவிட்டால் எல்லோரும் கலைஞர் ஆகிப் போவார்களே!
உதாரணமாக இதே மாதிரி ஆம்புலன்ஸ் சம்பவம் கலைஞர் கூட்டத்தில் நிகழ்ந்திருந்தால், அவர் இதுமாதிரி பேசியிருக்க மாட்டார்.
மாற்றாக, நமது பிரச்சாரத்திற்குக் கூடும் கூட்டத்தைக் கண்டு எதிரனியினரில் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது போல. அதனால் தான் நமது ஒவ்வொரு கூட்டத்தின் நடுவிலேயும் ஒரு ஆம்புலன்ஸ் நுழைகிறது.
இதை விட சிறப்பாக நையாண்டியாக ஏதாவது நறுக்கெனப் பேசி விஷயத்தையும் புரிய வைத்திருப்பார்.
அவருக்கு அவப்பெயர் வரும் விதமாகப் பேச மாட்டார்.
ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு சொல்லாடல் மிக அவசியம்.