Categories
கருத்து நினைவுகள்

எச்சிரிக்கைகான நேரம்!

மாற்றம் ஒன்றே மாறாதது.

இது ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான கூற்று.

உலகில் நாம் பிறந்த தேதிதியிலிருந்து இன்று வரை வியக்கத்தகுந்த பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.
அதுவும் 1980-90 களில் பிறந்தவர்கள் காணும் மாற்றம் என்பது அளப்பரியது. கிட்டத்தட்ட மாயாஜாலம் போன்ற பல மாற்றங்களைக் கண்டு வருகிறோம்.

சாதாரண வானொலியில் துவங்கி இன்று தனித்தனியாக ஒவ்வொருவரும் பாடல் கேட்கும் இயர் பாட்ஸ் வரையிலும், பிலிம் போட்ட கேமராவில் துவங்கி இன்று ஏஐ புகைப்படம் வரையிலும், கருப்பு வெள்ளை படம் துவங்கி இன்று டிஜிட்டல் திரை வரைய்யிலும் அதாவது ஒளி மற்றும் ஒலி அமைப்புகளில் 6கே மற்றும் 64.1 டால்பி டிஜிட்டல், ஐமேக்ஸ், 4டி, 5டி , 7டி என்று பல தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.

கிரிக்கெட் விளையாட்டில் கூட டெஸ்ட் ஆட்டத்தில் துவங்கி இன்று டி20 வரையிலும் பல மாற்றங்கள்.

LBW , No ball என்பனவற்றைக் கண்டறிய பல துல்லியமான வழிமுறைகள்.

இது மட்டுமல்ல, மரத்தடியில் துவங்கிய படிப்பு இன்று கணினி மயமாகிப் போனது.
பாடங்கள் படங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கல்வி ஒரு புறம் பெரிய வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் மகிழ்ச்சிகரமான பெரிய வளர்ச்சி போல இருக்கிறது தானே?

ஆனால் இதன் பின்னடைவுகளை யோசித்திருக்கிறோமா?

இத்தகைய டிஜிட்டல் உலகில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது பல விஷயங்கள்.

பிலிம் ரோல் தயாரித்து கோடி கோடியாக சம்பாதித்த ஒரு நிறுவனம் மூடப்பட்டது போல, ட்ரோன்கள் வந்து மனிதர்களின் வேலையைப் பறித்தது போல, பல தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மனிதர்களின் வேலையைப் பறித்தது போல, இங்கே இன்னும் பல மாற்றங்களை நாம் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

வரும்காலங்களில் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் உருவாகி ஓட்டுநர் வேலைப் பறிக்கலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் உருவாகி நடத்துனர் வேலை பறிபோகலாம்.

ஏஐ முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு ஆசிரியர்கள் வேலை பறிபோகலாம்.

ரோபோக்களே சிகிச்சை செய்து மருத்துவர்களை விட சிறப்பாக செயல்பட்டு மருத்துவர்களின் தேவை இல்லாமல் போகலாம்.

சினிமாக்கள் ஏஐ முறையில் உருவாகலாம்.

இப்படி ஒவ்வொன்றாக அடுக்கினால், இறுதியில் மனிதனுக்கு இங்கே ஒரு வேலையும் இல்லாமல் எல்லாம் இயந்திரமயமாகலாம்..

அந்த ஒரு நாளில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?

வாழ்வுக்கான வழி என்ன?
சம்பாத்தியத்திற்கான வழி என்ன?

100 நாள் வேலைத்திட்டத்திலும் ரோபோக்கள் தான் இருக்குமோ?
பிக் பாஸ் வீட்டினுள்ளும் ரோபோக்கள் தான் இருக்குமோ?

நாம் பார்த்த பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல இது இயந்திரங்களும், செயற்கை நுண்ணறிவும் மனிதனை கட்டுப்படுத்தத்துவங்கும் காலம்.

வெகு நாள் இல்லை டெர்மினேட்டர்கள் வரும் காலம்.

அது வந்தா அமெரிக்காவுக்குத் தானே வரும் என்று யோசித்துக்கொண்டே chatgpt அல்லது Gemini ல் உங்களது புகைப்படத்தை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறீர்களா?

தயாராகிக்கொள்ளுங்கள் போருக்கு!
இது பயமுறுத்தலுக்கானதல்ல!

எச்சரிக்கைக்கானது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.